Published:Updated:

திகிலூட்டிய 70 பந்துகள்; திருப்பி அடித்த பேர்ஸ்ட்டோ! இங்கிலாந்தின் கௌரவம் காத்த சதம்!

Bairstow
News
Bairstow ( ECB )

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் எங்கேயுமே இங்கிலாந்து திருப்பி அடித்திருக்கவில்லை. ஆனால், இன்று ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவும் அதை செய்திருந்தனர்.

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் பரபரப்பாக நடந்து வருகிறது.

எந்த சர்ப்ரைஸும் இன்றி வழக்கம்போல இங்கிலாந்து சொதப்பிக் கொண்டிருந்த நிலையில் ஒரு அதிரடி சதத்தை அடித்து அசத்தியிருக்கிறார் ஜானி பேர்ஸ்ட்டோ. பேர்ஸ்ட்டோவின் சதம் மற்றும் ஸ்டோக்ஸின் அரைசதம் காரணமாக இங்கிலாந்து அணி கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டு வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை சந்தித்திடாத வீழ்ச்சியை இங்கிலாந்து அணி இப்போது அடைந்திருக்கிறது. தொடர்ச்சியான சொதப்பல்கள். உள்ளூர் மற்றும் வெளியூர் என எல்லா இடத்திலுமே அடி வாங்கிவிட்டே ஆஷஸுக்காக ஆஸ்திரேலியாவிற்கு பறந்திருந்தனர். அங்கே ஆஸ்திரேலிய இன்னும் உக்கிரமாக ஈவு இரக்கமின்றி பன்னிரெண்டே நாட்களில் ஆஷஸை வென்று நிஜமாகவே இங்கிலாந்து அணி சாம்பலாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

தொடரை மோசமான முறையில் இழந்தாயிற்று. குறைந்தபட்சம் ஒயிட் வாஷையாவது தவிர்க்க வேண்டும் என்கிற மனநிலையிலேயே இங்கிலாந்து அணி சிட்னியில் கால்பதித்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி இன்னும் சாந்தமாகவில்லை. முதல் இன்னிங்ஸில் மட்டும் 416 ரன்களை அடித்து வெளுத்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. வேறென்ன? வழக்கம்போல சொதப்பல்தான். ஆனால், இந்த முறை ஆஸ்திரேலியா இன்னும் கூடுதல் வெறித்தனத்தோடு இங்கிலாந்து மறக்கவே முடியாதபடிக்கு சம்பவம் செய்ய தீர்மானித்திருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Boland
Boland
ICC
14 வது ஓவரிலிருந்து 25 வது ஓவரின் 4 வது பந்து முடிய அத்தனை பந்துகளையும் ஆஸ்திரேலிய பௌலர்கள் டாட் ஆக்கியிருந்தனர். மொத்தம் 11.4 ஓவர்கள். 70 பந்துகள்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் திக்கற்று போய் விக்கெட்டை விட்டனர். கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை அடித்திருந்த கேப்டன் ஜோ ரூட் இந்த 2022-ம் ஆண்டின் முதல் இன்னிங்ஸிலேயே டக் அவுட் ஆகினார். லெக் ஸ்லிப் வைத்து ஆங்கிள் இன்னாக லெக் ஸ்டம்ப் லைனில் வீசுகிறார்கள் என தெரிந்தும் டேவிட் மலான் தனது விக்கெட்டை தூக்கிக் கொடுத்துவிட்டு சென்றார். அந்த 11.4 ஓவர்களில் இங்கிலாந்து எடுத்த ரன்கள் 0. இழந்த விக்கெட்டுகள் 3.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இத்தனைக்கும் ஸ்டார்க்கும் கம்மின்ஸும் ஆளுக்கு ஒரு ஓவர்களை மட்டுமே வீசியிருந்தனர். மற்ற அத்தனை ஓவர்களையும் போலண்ட்டும் க்ரீனுமே வீழ்த்தியிருந்தனர். 3 விக்கெட்டுகளையுமே இவர்கள்தான் வீழ்த்தியிருந்தனர். இங்கிலாந்து 36-4 என்ற நிலைமையில் கடுமையாக திணறிக்கொண்டிருந்தது. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இரண்டாம் இன்னிங்ஸில் இங்கிலாந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. அந்த 68 ரன்களை தாண்டுவதே பெரிய இலக்காக தெரிந்தது. அந்த சமயத்தில்தான் ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவும் கூட்டணி அமைத்தனர். அணியை சரிவிலிருந்து மீட்பதற்காக மட்டுமல்ல. அணியின் கௌரவத்தை காக்க, குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த பார்மி ஆர்மியை உற்சாகப்படுத்த இடதுகையால் வென்றுவிட்டு செல்லும் ஆஸிக்கு கொஞ்சமேனும் சவால் கொடுக்க இருவரும் கரம் கோர்த்தனர்.

கொஞ்ச நேரத்திற்கு இருவருமே சௌகரியமாக ஆடியிருக்கவில்லை. தடுப்பாட்டத்தையே ஆடிக்கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் க்ரிஸ் க்ரீன் வீசிய ஒரு பந்தை ஸ்டோக்ஸ் லீவ் செய்ய முயலவே அது ஸ்டம்பை தாக்கி கீப்பரிடம் சென்றது. பந்து ஸ்டம்பில் பட்டபோதும் பெய்ல்ஸ் கீழேவில்லை. இருந்தாலும் ஆஸ்திரேலியா அப்பீல் செய்தது. அம்பயரும் lbw என நினைத்து அவுட் கொடுத்துவிட்டார். ரிவியூவில்தான் பந்து ஸ்டோக்ஸின் மேல் உரசக்கூட இல்லை என்பது தெரிந்து நாட் அவுட் என வந்தது. இதன்பிறகுதான், ஸ்டோக்ஸ் கியரை மாற்றத் தொடங்கினார். தடுப்பாட்டம் என க்ரீஸிலேயே நின்று விக்கெட்டை விட்டு செல்வது அணியை மேலும் சரிவடையவே செய்யும் என்பதால் கவுண்டர் அட்டாக் செய்ய முடிவெடுத்தார். ஸ்டோக்ஸுக்கு பக்கபலமாக செகண்ட் ஃபிடில் ஆடும் முடிவை பேர்ஸ்ட்டோ எடுத்தார்.

Bairstow & Stokes
Bairstow & Stokes
ICC
ஸ்டோக்ஸ் ஓடிஐ மோடுக்கு மாறி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சிதறடிக்க ஆரம்பித்தார். ஸ்டார்க்கின் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரிக்களை வெளுத்தெடுத்தார்.

க்ரீஸை விட்டு இறங்கி வந்து அத்தனை பௌலர்களையுமே பறக்கவிட்டார். இன்னொரு பக்கம் பேர்ஸ்ட்டோ கொஞ்சம் நிதானமாக லயனை மட்டும் அட்டாக் செய்து முன்னேறிக் கொண்டிருந்தார். ஸ்டோக்ஸ் வேகமாக முன்னேறி அரைசதத்தை கடந்தார். ஸ்டோக்ஸின் இந்த அரைசதம் இங்கிலாந்துக்கு கொஞ்சம் நம்பிக்கையை கொடுத்தது. ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவுமே இணைந்து இதற்கு முன்னர் சில தரமான சம்பவங்களை செய்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னாப்பிரிக்காவில் 399 ரன்களுக்கு இருவரும் அமைத்த பார்ட்னர்ஷிப்பை யாராலும் மறக்க முடியாது. அப்படி ஒரு பார்ட்னர்ஷிப் இங்கேயும் அமையும் என நினைக்கையில்தான் ஸ்டோக்ஸ் 66 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
Bairstow
Bairstow
Fox Cricket

ஸ்டோக்ஸ் அவுட் ஆனதற்கு பிறகு, அந்த கவுண்டர் அட்டாக்கிங் பொறுப்பை பேர்ஸ்ட்டோ எடுத்துக் கொண்டு அட்டாக் செய்ய தொடங்கினார்.

நேதன் லயனை குறிவைத்து அட்டாக் செய்தார். அடித்திருக்கும் 103 ரன்களில் நேதன் லயனுக்கு எதிராக மட்டும் 45 ரன்களை அடித்திருந்தார். ஓடிஐ போட்டியை போன்று ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வேகமாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். பேர்ஸ்ட்டோவிற்கு உறுதுணையாக மார்க்வுட்டும் அதிரடியாக ஆடி அசத்தியிருந்தார். பேட் கம்மின்ஸின் ஓவரில் மட்டும் 3 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இவர்களின் அதிரடியால் இங்கிலாந்து அணி ஃபாலோ ஆனை தவிர்த்து மீள தொடங்கியது. இன்றைய நாளின் கடைசி ஓவரில் பவுண்டரி அடித்து பேர்ஸ்ட்டோ சதத்தை நிறைவு செய்திருந்தார். இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் ஒருவர் அடிக்கும் முதல் சதம் இது.

என்னுடைய இயல்பை மறந்து என்னால் முடியாத ஒன்றிற்காக நான் முயன்று கொண்டிருந்தேன். அது தவறு என்பதை உணர்ந்தேன். பௌலர்களை கவுண்டர் அட்டாக் செய்து அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதே என்னுடைய பாணி. அதைத்தான் இங்கே செய்திருக்கிறேன்
பேர்ஸ்ட்டோ

என தன்னுடைய சதம் குறித்து பேர்ஸ்ட்டோ விவரித்திருந்தார்.

இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தால் தடுமாறிப்போயிருந்தது. எந்த கணத்திலுமே போராட்டத்தை வெளிக்காட்டாமல் சொதப்பிக் கொண்டே இருந்தது. இரண்டாவது டெஸ்ட்டின் போது பட்லர் கொஞ்சம் நின்று போராடியிருந்தார். ஆனாலும், அதுவும் முழுக்க முழுக்க டிராவுக்காக ஆடப்பட்ட தடுப்பாட்டமே. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் எங்கேயுமே இங்கிலாந்து திருப்பி அடித்திருக்கவில்லை. ஆனால், இன்று ஸ்டோக்ஸும் பேர்ஸ்ட்டோவும் அதை செய்திருந்தனர். ஆஸ்திரேலியாவை திருப்பி அடித்திருக்கின்றனர். இந்த ஆஷஸை பொறுத்தவரைக்கும் இங்கிலாந்திற்கு இதுவே பெரிய வெற்றிதான்.