Published:Updated:

ஜோ ரூட் 6000... இலங்கையின் கதையை முடித்துவிட்டு டிவி பார்க்க ஓடிய இங்கிலாந்து கிரிக்கெட்டர்கள்?!

ஜோ ரூட்
ஜோ ரூட் ( Scott Heppell )

ஒரு நாள் போட்டிகளில் சமீபமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வந்த ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடியிருப்பதன் மூலம் தன்னுடைய க்ளாஸை மீண்டும் நிரூபித்துள்ளார்.

டாப் பேட்ஸ்மேன்களின் 'Fab4' பட்டியலில் கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருக்கக்கூடியவர் ஜோ ரூட். திடீரென நல்ல ஃபார்மில் நால்வரில் இவர்தான் பெஸ்ட் என சொல்லுமளவுக்கு ஆடக்கூடியவர். சில நேரங்களில் பயங்கரமாக சொதப்பி ஏமாற்றவும் செய்வார்.

ஜோ ரூட்டை நீக்கிவிட்டு பாபர் அசாமை நால்வர் பட்டியலில் சேர்த்துவிட்டால் என்ன என்கிற விவாதம் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நடந்திருக்கிறது. கொஞ்ச நாட்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்தவர், இலங்கையிலும் இந்தியாவிலும் இரட்டை சதம் அடித்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஃபார்முக்கு வந்து நால்வர் பட்டியலில் இருப்பதற்கான நியாயம் சேர்த்தார். இந்நிலையில்தான்,ஒரு நாள் போட்டிகளில் சமீபமாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வந்த ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடியிருப்பதன் மூலம் தன்னுடைய க்ளாஸை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. டி20 தொடரில் இலங்கையை புரட்டி எடுத்திருந்தது இங்கிலாந்து அணி. காற்றில் பறக்கும் தூசி போல திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கை அணி பரிதாபமாக ஒருநாள் தொடரிலும் அடிவாங்கத் தயாரானது. ஏற்கனவே மூன்று வீரர்கள் பயோ பபிள் விதிமுறைகளை மீறி இருந்தால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இதனால் ஒரு வினோதமான முறையில் ஒரு பேட்ஸ்மேன், ஒரு கீப்பர், 5 ஆல்ரவுண்டர்கள், 4 பௌலர்கள் என இருக்கிற ஆட்களை வைத்துக் கொண்டு களமிறங்கி இருந்தது இலங்கை அணி.

டேவிட் வில்லி
டேவிட் வில்லி
Scott Heppell

யுரோ 2020 யில் இங்கிலாந்து Vs ஜெர்மனி பரபரப்பான போட்டி நடைபெற இருந்ததால் இங்கிலாந்து வீரர்களும் அந்த போட்டியை காண ஆவலோடு இருந்த காரணத்தாலோ என்னவோ டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி. இலங்கையை வாரிச்சுருட்டி சீக்கிரமே மேட்ச்சை முடித்துவிட்டு ஹோட்டல் ரூமுக்கு சென்று இங்கிலாந்து vs ஜெர்மனி போட்டியை காண வேண்டும் என்பதே அவர்களுடைய ப்ளான். இதன்படியே, இலங்கை அணியும் எந்த சிரமும் கொடுக்காமல் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பவர்ப்ளேவுக்குள்ளேயே மேட்ச்சை முடித்து காட்டுகிறேன் என களமிறங்கிய பேர்ஸ்ட்டோ இலங்கை பௌலர்களை அடித்து துவம்சம் செய்தார். 21 பந்துகளில் 43 ரன்கள் என எதோ அடைமழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது.


இங்கேதான் இன்னொரு ட்விஸ்ட்டும் நடந்தது. பேர்ஸ்ட்டோ அவுட் ஆன உடனேயே அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்தது. 11.5 ஓவர்களில் 80-4 என்ற நிலையில் திணற தொடங்கியது இங்கிலாந்து. தோல்வி கூட பிரச்னை இல்லை. ஆனால் அது இந்த இலங்கை அணியிடம் ஏற்பட்டால் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அவமானமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட சூழலில்தான் ஜோ ரூட் தன்னுடைய க்ளாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தின் கௌரவத்தை காப்பாற்றியிருக்கிறார்.

பேர்ஸ்ட்டோ, லிவிங்ஸ்டன், மோர்கன், சாம் பில்லிங்ஸ் என டாப் ஆர்டர் மொத்தமாக காலியான பிறகு மொயின் அலியுடன் கூட்டணி போட்டு மிகச்சிறப்பாக சேஸிங்கை முன்னெடுத்து சென்றார் ஜோ ரூட். ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனுக்குரிய கன்ட்ரோலோடு ரிஸ்க் எடுக்காமல் பொறுப்பை உணர்ந்து நின்று ஆடினார். ஸ்கோர் போர்ட் அழுத்தம் இல்லாததால் ஓடி ஓடியே ரன்களை சேர்த்து ஸ்கோரை உயர்த்தினார். 58 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்த ஜோ ரூட் அந்த சமயத்தில் இரண்டு பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தார். 42 ரன்கள் ஓடியே எடுத்திருந்தார். இதுவே அவரின் கட்டுக்கோப்பான டெக்னிக்குக்கும் பொறுமையான அணுகுமுறைக்குமான உதாரணம். 87 பந்துகளில் 79 ரன்களை எடுத்த ஜோ ரூட் இறுதி வரை நாட் அவுட்டாக இருந்து அணியை வெற்றி பெற செய்தார்.

ஜோ ரூட்
ஜோ ரூட்
Scott Heppell

இது ஜோ ரூட் ஆடிய 150-வது போட்டியாகும். இந்த மைல்கல் போட்டியில் ஒரு க்ளாஸான இன்னிங்ஸை ஆடியதோடு மட்டுமில்லாமல் இங்கிலாந்து அணிக்காக 6,000 ரன்களையும் எட்டியிருக்கிறார்.

147 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எட்டியிருந்த கங்குலியின் சாதனையை முறியடித்து 141 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எடுத்து விவ் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஜோ ரூட். ஒட்டுமொத்தமாக ஹசிம் அம்லா, கோலி, வில்லியம்சன் ஆகியோருக்கு பிறகு வேகமாக 6000 ரன்களை எடுத்த நான்காவது பேட்ஸ்மேன் என்கிற பெருமையை பெற்றுள்ளார். ஆவரேஜ் 50-க்கு மேல் இருப்பது கூடுதல் சிறப்பு.

இங்கிலாந்து அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு கொடுத்ததே இல்லை. 6000+ ரன்களை அடித்திருக்கும் இயான் மோர்கன் தான் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்தவர் என்பதன் மூலமே இதை புரிந்துக்கொள்ளலாம். டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவான்களாக இருந்த பலரும் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் பெரிதாக ஜொலித்ததில்லை. கெவின் பீட்டர்சன், இயான் பெல் போன்ற ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்காக இருந்தனர்.

2015 வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை தோல்வியே இங்கிலாந்தை லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட் பக்கம் கவனம் செலுத்த வைத்தது. இப்போது பேர்ஸ்ட்டோ, பட்லர், ஸ்டோக்ஸ் என அதிரடி வீரர்கள் நிறைந்த அணியாக இங்கிலாந்து மாறியிருக்கிறது. இந்த அதிரடி கூட்டத்திற்கு மத்தியில் இங்கிலாந்துக்கே உரிய ஒரு க்ளாஸான அணுகுமுறையை இன்னமும் கைவிடாமல் காப்பாற்றி வருபவர் ஜோ ரூட் மட்டுமே. பீட்டர்சனுக்கு பிறகு ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் இங்கிலாந்து வீரர் என போற்றப்படும் ரூட், அவரை போன்றே டெஸ்ட் - ஓடிஐ என இரண்டு ஃபார்மேட்களிலுமே கலக்கக்கூடிய வீரராக உயர்ந்து நிற்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட்
Scott Heppell

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் மோர்கனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் குக், கிரஹாம் கூச் இருவருக்கும் அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரூட் இன்னும் சில வருடங்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கிரிக்கெட் ஆட முடியும் என்பதால் டெஸ்ட் - ஓடிஐ இரண்டிலுமே அதிக ரன்களை எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையுடனே அவருடைய கரியர் முடிவுக்கு வரும் என தோன்றுகிறது.

அந்த சாதனையை அடைவதற்கு ரூட் ஆடப்போகும் க்ளாஸ் இன்னிங்ஸ்களை எண்ணி எண்ணி இப்போதே பூரிப்படைந்து கொண்டிருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரைக்கு