Published:Updated:

வெள்ளை ஜெர்ஸியில் தொடர்ந்து சாதிக்கும் ஜெயதேவ் உனத்கட்; இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பாரா?

ஜெயதேவ் உனத்கட் ( BCCI )

ஐ.பி.எல் மூலம் டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ரஞ்சியில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதனால் பாதிக்கப்படும் பல வீரர்களில் உனத்கட்டும் ஒருவர்!

வெள்ளை ஜெர்ஸியில் தொடர்ந்து சாதிக்கும் ஜெயதேவ் உனத்கட்; இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பாரா?

ஐ.பி.எல் மூலம் டெஸ்ட் அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ரஞ்சியில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதனால் பாதிக்கப்படும் பல வீரர்களில் உனத்கட்டும் ஒருவர்!

Published:Updated:
ஜெயதேவ் உனத்கட் ( BCCI )
ஜெயதேவ் உனத்கட் - இந்தப் பெயரை கேட்டதும் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது என்ன? ஐ.பி.எல்-லில் பயங்கரமாக அடி வாங்கும் ஒரு பந்துவீச்சாளர், தோனி அடித்த பினிஷிங் சிக்ஸர், பந்துவீச வந்தாலே போட்டியின் முடிவு மாறிவிடும் என்ற எண்ணம்! இவற்றோடு அவர் விளையாடிய பல அணிகளின் ஜெர்ஸி நிறங்கள் நினைவுக்கு வரும். ஆனால், யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாத வெள்ளை ஜெர்ஸி நிறத்தின் கதையில் ஜெயதேவ் உனத்கட் ஒரு ஹீரோ!

சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் கோப்பை தொடரில் ஜெயதேவ் உனத்கட்தான் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்தான். மூன்று போட்டிகளில் 2.59 எகானமியில் 13 விக்கெட்டுகள் எடுத்து அபாரமாகச் செயல்பட்டுள்ளார்.

3 - Matches | 5 - Inns | 13 - Wickets | 14.07 - Average | 32.5 - Strike-rate | 2.59 - Economy
ஜெயதேவ் உனத்கட்
ஜெயதேவ் உனத்கட்
BCCI

சிறுவயதிலேயே தொடங்கியது உனத்கட்டின் கிரிக்கெட் பயணம். அந்தப் பயணத்தில் ஒளி பாய்ந்த ஆண்டுதான் 2010! U19 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டார். அதே ஆண்டு ரஞ்சி கோப்பையில் சௌராஷ்டிரா அணிக்காக முதன்முதலில் களம் இறங்கினார். அதே ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஐ.பி.எல்-லில் வாங்கப்பட்டார். இந்தியா A அணிக்காக முதல்முறையாகக் களம் கண்டு அதிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அதோடு மட்டும் நிற்காமல் இந்திய டெஸ்ட் அணியிலும் ஒரு போட்டியில் இடம்பெற்றார். 18 வயது உனத்கட்டிற்கு ஒரு கனவு ஆண்டாகத்தான் 2010 அமைந்தது.

இந்திய அணியில் இடம்பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பு கிடைத்த உனத்கட்டால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. இதனால் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், ஐ.பி.எல் என கிரிக்கெட் பயணத்தைத் தொடர ஆரம்பித்தார். இந்திய அணிக்காக 2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார், 2016-ல் டி20 போட்டிகளில் அறிமுகமானார். ஆனால், அதற்கு மேல் வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்கவில்லை! உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் உனத்கட்டின் ஆதிக்கம் மட்டும் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இதுவரை 95 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள உனத்கட் எடுத்துள்ள விக்கெட்டுகளின் எண்ணிக்கை 349. பௌலிங் சராசரி வெறும் 22.91. இப்படியான எண்கள் எல்லாம் ஒருவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது.

2019-20-ல் நடந்த ரஞ்சி கோப்பையில் மட்டும் 7 ஐந்து விக்கெட் ஹாலூடன் மொத்தம் 67 விக்கெட்டுகள் எடுத்திருந்தார் உனத்கட். ஒரு ரஞ்சி கோப்பை தொடரில் 67 விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த விக்கெட்டுகள் எல்லாம் சௌராஷ்டிரா அணிக்கு வெற்றியை மட்டும் வாங்கி தரவில்லை. வரலாற்றில் முதல் முறையாக ரஞ்சி கோப்பையையும் வாங்கிக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, அணியின் கேப்டனும் வெற்றிக்கு வழிவகுத்த வேகப்பந்து வீச்சாளரும் ஜெய்தேவ் உனத்கட்தான்! இப்படிச் சிறப்பாகச் செயல்பட்ட உனத்கட்டின் பெயர் டெஸ்ட் அணிக்கான பேச்சு வார்த்தையில் இடம்பெற்ற நினைவுகூட யாருக்கும் இருக்காது. ஏனென்றால் அப்படி ஒரு பேச்சுவார்த்தை கூட பெரிதாய் நடக்கவில்லை. வெறும் ஐ.பி.எல் பர்ஃபாமன்ஸ்களில் டெஸ்ட் வீரர்களைத் தேடிக்கொண்டிருந்தது பி.சி.சி.ஐ.

ஜெயதேவ் உனத்கட்
ஜெயதேவ் உனத்கட்
MI

அதன்பின் கொரோனா காரணமாகப் பெரிதாய் உள்ளூர் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவில்லை. இந்தாண்டு மீண்டும் தொடங்கிய ரஞ்சி தொடரில் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். ரெட் பால் மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு சையத் முஷ்தாக் அலி கோப்பையில் 6 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் (எகானமி 6.41) எடுத்து அதிலும் கலக்கி இருந்தார். இப்படி எங்கோ ஒரு இடத்தில் உனத்கட் தன் பெயரைப் பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார். அதுவும் நேற்று முன்தினம் நடந்து முடிந்த துலீப் கோப்பை வரை ரெட் பால் போட்டிகளில் நீண்ட காலமாய் உனத்கட் தன்னால் முடிந்தவற்றையெல்லாம் செய்து கொண்டேதான் இருக்கிறார். இருப்பினும் நடந்து முடிந்த இந்தியா A - நியூசிலாந்து A டெஸ்ட் சீரிஸில் கூட இடமில்லை 30 வயது உனத்கட்டுக்கு!

புவனேஷ்வர் குமார் சமீபத்தில் இறுதி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் ஒரு வீரராக உள்ளார். இதனால் பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அதே சமயம் பவர்பிளே ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசி வருகிறார். 20 ஓவர் கொண்ட ஒரு போட்டியில் மட்டுமே வெவ்வேறு ஓவர்களுக்கு வெவ்வேறு திறன்கள் தேவைப்படுகின்றன. இப்படி இருக்கும் வேளையில் டெஸ்ட் போட்டிக்கும் டி20 போட்டிக்கும் தேவைப்படும் திறன்களில் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்? ஆனால் இந்தியாவிலோ ஐ.பி.எல் போன்ற தொடர்களை வைத்து இந்திய டெஸ்ட் அணிக்கு பெரும்பாலான வீரர்களைத் தேர்வு செய்யும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ரஞ்சியில் இருந்து இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகும் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதனால் பல வீரர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெயதேவ் உனத்கட்!

இந்திய அணிக்குத் தேர்வாவது ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் மனதில் உனத்கட் ஒரு கேலி பொருளாக மட்டும் இருப்பது நிச்சயம் மாறவேண்டும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர்களை மட்டும் பின்தொடர்ந்தால் கூட உனத்கட்டின் மறுமுகம் மக்களுக்குத் தெரியவரும்.

உனத்கட்டால் சிறப்பாகச் செயல்பட முடியாத போது சிரிக்கும் அதே மக்களின் பாராட்டுகள் அந்த ஒரு மனிதருக்கு இந்திய அணிக்குத் தேர்வாகாத போது எவ்வளவு ஆறுதலைத் தரும்?!

ஐ.பி.எல் மட்டுமே தேர்வுக்கான தளமாக இருப்பது மாறவேண்டும். இந்திய டெஸ்ட் ஜெர்ஸியில் ஜெய்தேவ் உனத்கட் ஜெயிக்க வேண்டும்!