Published:Updated:

ஜாவேத் மியான்தத்: `நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா..!' ஆஸியை அலறவிட்ட சேட்டைக்காரர்!

ஜாவேத் மியான்தத் ( ICC/Twitter )

மியான்தத்தை விட பல சிறந்த பேட்ஸ்மேன்களை ஆலன் பார்டரும் பார்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும் பார்த்திருக்கிறது. அவர்கள் பயந்தது மியான்தத்தின் வில்லத்தனத்தைப் பார்த்து!

ஜாவேத் மியான்தத்: `நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா..!' ஆஸியை அலறவிட்ட சேட்டைக்காரர்!

மியான்தத்தை விட பல சிறந்த பேட்ஸ்மேன்களை ஆலன் பார்டரும் பார்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும் பார்த்திருக்கிறது. அவர்கள் பயந்தது மியான்தத்தின் வில்லத்தனத்தைப் பார்த்து!

Published:Updated:
ஜாவேத் மியான்தத் ( ICC/Twitter )
கிரிக்கெட் உலகில் ஸ்லெட்ஜ்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலிய அணிதான் கில்லாடி. மெர்வ் ஹூக்ஸ், டென்னிஸ் லில்லி, ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங் தொடங்கி டிம் பெய்ன் வரை தலைமுறை தலைமுறையாக தொட்டு தொடரும் பாரம்பர்யமாக ஸ்லெட்ஜ்ஜிங் ஸ்பெசலிஸ்ட்களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது ஆஸி. எதிரணி வீரரின் மனஉறுதியையும் சமநிலையையும் குலைப்பதே இவர்களின் வேலை. இதை செய்து முடிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் வம்பிழுக்காத ஆட்களே இல்லை. அறிமுக வீரர், அனுபவ வீரர், ஜாம்பவான் என்கிற வேறுபாடெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தெரியவே தெரியாது. ஆனால், அப்பேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களே ஸ்லெட்ஜ் செய்ய தயங்கிய வீரர் ஒருவர் இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடியுமா?! பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஜாவேத் மியான்தத்தான் அவர்.

1990 ல் ஒரு சீரிஸில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜாவேத் மியான்தத் பேட்டிங் ஆட வருகிறார். பெரிய மீசையோடு ஆஜானுபாகுவான உடலமைப்போடு பந்துவீசத் தயாராக இருக்கும் மெர்வ் ஹுக்ஸிடம் 'தயவுசெய்து மியான்தத்திடம் மட்டும் எதுவும் வாயை கொடுத்துவிடாதே' என கேப்டன் ஆலன் பார்டர் அறிவுரை கூறிவிட்டு செல்கிறார். ஸ்லெட்ஜ்ஜிங் புலியான மெர்வ் ஹுக்ஸுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த அணிக்குமே இதுதான் கட்டளை. 'யாரும் மியான்தத்திடம் வாயை திறந்துவிடவே கூடாது'. மியான்தத்தை பார்த்து ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் பதறியிருக்கிறது. ஏனெனில், மியான்தத்தின் வரலாறு அப்படிப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட், அந்த நாட்டு அரசியலை போல விளங்கி கொள்வதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். திடீரென ஒரு வீரர் ஓய்வு பெறுவார், திடீரென சூதாட்ட சர்ச்சை எழும், திடீரென ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள்ளேயே களேபரங்கள் வெடிக்கும், தீடீரென கிரிக்கெட் போர்டே எல்லாவற்றையும் களைத்துவிட்டு முதலிலிருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கும். அது ஒரு விசித்திர உலகம். அந்த விசித்திர உலகுக்கென படைக்கப்பட்ட அக்மார்க் விசித்திர மனிதனாகவே இருந்தார் ஜாவேத் மியான்தத்.

ஜாவேத் மியான்தத்
ஜாவேத் மியான்தத்
The Cricketer International

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1970-களின் தொடக்கத்தில் கராச்சி அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் ஜாவேத் மியான்தத் மீது வெளிச்சம் விழுந்தது. ஹார்டு ஹிட்டரான மியான்தத்துக்கு 1975 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அடுத்த ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு மியான்தத்துக்குக் கிடைத்தது.

1976-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் மியான்தத். அப்போது அவருக்கு 19 வயதே. ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே சதம் அடித்து தனது அறிமுகத்தை அழுத்தமாகப் பதித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 25 ரன்களுக்கு நாட் அவுட். அதே தொடரில் மூன்றாவது போட்டியில் இரட்டை சதம் அடிக்கிறார். இதன்மூலம் குறைந்த வயதிலேயே இரட்டை சதம் அடித்த பேட்ஸ்மேன் என்கிற பெருமை மியான்தத்துக்கு கிடைக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அறிமுக தொடரிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதால் பாகிஸ்தான் அணியில் மிடில் ஆர்டரில் மியான்தத்துக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கிறது. ஒன் சீரிஸ் வொண்டராக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக சீரான பங்களிப்பை பாகிஸ்தான் அணிக்கு அளித்துக்கொண்டே இருந்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கெதிரான தொடரிலும் சிறப்பாக ஆடினார். இந்தத் தொடர்களின் 'தி பெஸ்ட்' ஆக மியான்தத்தே இருந்திருப்பார். தொடரில் அதிக ரன் எடுத்தவர்களுக்கான பட்டியலில் அவர் பெயரே முதலிடத்தில் இருந்திருக்கும். ஆவரேஜ் பெரும்பாலும் 90க்கு மேல் இருக்கும்.

அறிமுக இன்னிங்ஸிலே சதம், அறிமுக தொடரிலேயே இரட்டை சதம், கபில்தேவ்விற்குப் பிறகு வேகமாக 1000 ரன்கள் எடுத்த வீரர், அதிக ஆவரேஜ் கொண்ட வீரர் என இளம் வயதிலேயே ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆனார் மியான்தத். இதனால், பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டனான ஆஷிஃப் இக்பால் ஓய்வுபெற்ற போது பல சீனியர் வீரர்களை விடுத்து கேப்டன் பதவி மியான்தத்துக்கு வந்து சேர்ந்தது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும்போது மியான்தத்க்கு வெறும் 22 வயது மட்டுமே.

ஜாவேத் மியான்தத்
ஜாவேத் மியான்தத்
AP

தொடர் தோல்விகளில் அணியைத் தவிக்கவிட்டு சென்றிருந்தார் ஆஷிஃப் இக்பால். ஆனால், மியான்தத் அதை மாற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தலைமையேற்ற முதல் தொடரையே வென்றுக் காட்டினார். 1950களுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற வரலாற்று வெற்றியாக அது அமைந்தது.

ஆகச்சிறந்த பேட்ஸ்மேன், நல்ல கேப்டன் என மியான்தத்தின் க்ராஃப் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. அது 1986 ஷார்ஜா கோப்பை இறுதிப்போட்டியில் உச்சத்தை அடைந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்ரீகாந்த், கவாஸ்கர், வெங்சர்க்கார் என டாப் ஆர்டர் மூவரும் அரைசதம் அடிக்க இந்திய அணி 245 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் வெற்றிபெற 246 ரன்கள் தேவை. ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் யாருமே பெரிதாக சோபிக்கவில்லை. சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. ஆனால், ஒரு முனையில் மியான்தத் மட்டும் நின்று நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். விக்கெட் விடாமல், அதேநேரத்தில் ரன்ரேட்டையும் விழாமல் பார்த்துக் கொண்டு 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்தார் மியான்தத். க்ளைமாக்ஸ் நெருங்கியது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேத்தன் சர்மா ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசி தனது வித்தையை காட்டத் தயாரானார். முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்திருப்பார் மியான்தத். நான்காவது பந்தில் ஜுல்தர்னைன் க்ளீன் போல்ட். இப்போது கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருக்கிறது. இரண்டு பந்துகளில் 5 ரன்கள் தேவை. நம்பர் 11 பேட்ஸ்மேனான டவுசீஃப் சிங்கிள் தட்ட, கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை. மியான்தத் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார். கடைசி பந்தை யார்க்கராக வீச முயன்று சேத்தன் சர்மா ஃபுல் டாஸாக வீச, அதை அப்படியே சிக்ஸராக மாற்றினார் மியான்தத். இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மொத்த கிரிக்கெட் உலகமும் அரண்டுபோனது. யாரும் இதற்கு முன் இப்படி ஒரு ஃபினிஷிங்கை பார்த்ததே இல்லை. சப்போர்ட்டின்றி சதமடித்து பாகிஸ்தான் அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்தார் மியான்தத்.

இந்தப் போட்டி என்றில்லை பொதுவாகவே இந்தியாவுக்கு எதிராக கூடுதல் வெறியுடன்தான் ஆடியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டு ஃபார்மட்டிலும் இந்தியாவிற்கு எதிராக ஆயிரம் ரன்களைத் தாண்டி அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அவருடைய கரியர் பெஸ்ட்டான 280 ரன்கள் இந்தியாவுக்கு எதிராகவே அடிக்கப்பட்டது.
ஜாவேத் மியான்தத்
ஜாவேத் மியான்தத்
PCB

ஷார்ஜாவில் மியான்தத் அடித்த அந்த ஒரு சிக்ஸர் கொடுத்த உத்வேகம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை பல மடங்கு முன்னகர்த்தியது. ஒருநாள் போட்டிகள் குறித்த முழுமையான புரிதலையே பாகிஸ்தான் அணிக்கு ஜாவித் மியான்தத்தின் இந்த இன்னிங்ஸ்தான் ஏற்படுத்தியது. இந்தியாவிற்கு எதிரான இந்த வெற்றிக்கு பிறகு அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவுக்கு எதிராக பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியது பாகிஸ்தான். இந்தச் சமயத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆடிய முக்கால்வாசி போட்டிகளில் பாகிஸ்தான் அணிதான் வென்றிருக்கும். 1992 உலகக்கோப்பையையும் இந்தச் சமயத்தில்தான் பாகிஸ்தான் வென்றது. இந்த தொடரிலும் 7 அரைசதங்களை அடித்து மியான்தத் மிரட்டியிருந்தார். 6 உலகக்கோப்பை தொடர்களில் ஆடிய வீரர் என்கிற பெருமையும் மியான்தத்தை சேரும்.

இத்தனை சாதனைகள்... இத்தனை வெற்றிகள். ஆனால், மியான்தத்தின் அடையாளம் இவையல்ல. சிறந்த பேட்ஸ்மேன் என்பதற்காக மட்டும் ஆலன் பார்டர் இவரைப் பார்த்து பதறவில்லை. மியான்தத்தை விட பல சிறந்த பேட்ஸ்மேன்களை ஆலன் பார்டரும் பார்த்திருக்கிறார். ஆஸ்திரேலியாவும் பார்த்திருக்கிறது. அவர்கள் பயந்தது மியான்தத்தின் வில்லத்தனத்தைப் பார்த்து! ஆம், கிரிக்கெட்டை பொறுத்தவரை மியான்தத் ஒரு ஆன்டி ஹீரோ. சர்ச்சைகள்தான் அவரின் அடையாளம்.

வாசிம் பாரி, ஜாகீர் அப்பாஸ் போன்ற சீனியர்கள் இருக்கும் போது 22 வயதான மியான்தத்க்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டதே சர்ச்சையானது. இதனால், அணிக்குள் சில புகைச்சல்களும் எழுந்தன.

பல முறை மியான்தத்தே கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கொஞ்ச காலம் கழித்து அவரே மீண்டும் பதவியேற்றிருக்கிறார். அவருடைய கரியரில் மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 6 தடவையும் ஒருநாள் போட்டிகளில் 12 தடவையும் வெவ்வேறு காலகட்டங்களில் கேப்டனாக பதவி வகித்திருக்கிறார். வேறு எந்த அணியிலும் வேறு எந்த வீரரும் இப்படிப்பட்ட சாதனையை செய்திருக்கமாட்டார்கள். இம்ரான் கான் ஓய்விலிருந்த சமயங்களில் சில முறையும் கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால், இம்ரான் கானுக்கும் இவருக்குமே கடைசிவரை ஒத்து போனதில்லை.

இம்ரான் கான், ஜாவேத் மியான்தத்
இம்ரான் கான், ஜாவேத் மியான்தத்
PCB

இம்ரான் கானின் கரியரை க்ளோஸ் செய்தது மியான்தத்தான் என்றும் மியான்தத்தை ஓரங்கட்ட முயன்றது இம்ரான்கான்தான் என்றும் பல கான்ஸ்பிரசி கருத்துக்கள் இவர்கள் இருவரை பற்றியும் உலவிக்கொண்டிருக்கின்றன. இம்ரான்கான் பிரதமரான பிறகும் இன்றும் அவரை கடுமையாக விமர்சித்துக் கொண்டேதான் இருக்கிறார் மியான்தத். இதில் முரணான ஒரு விஷயம் என்னவென்றால், 1992 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மியான்தத் இம்ரான்கானும் கூட்டணி போட்டு 139 ரன்களைச் சேர்த்திருப்பர். அதுதான் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.

இதெல்லாம் அணிக்குள் நிலவிய சர்ச்சைகள் என்றால் ஸ்லெட்ஜ்ஜிங் என்ற பெயரில் எதிரணியினரிடமும் சகட்டுமேனிக்கு வம்பிழுத்து வைத்திருக்கிறார் மியான்தத். 80 களின் தொடக்கத்தில் டென்னிஸ் லில்லிக்கும் மியான்தத்துக்கு இடையே நடந்த சண்டை பெரும் சர்ச்சைக்குள்ளானது. லில்லி காலை வைத்து மியான்தத்தை எத்த, பதிலுக்கு மியான்தத் பேட்டை ஆவேசமாக ஓங்கி அடிக்கச் சென்றிருப்பார். கிரிக்கெட்டின் மாண்பை குலைக்கும் வகையில் நடைபெற்ற மோசமான நிகழ்வு என இன்றும் இந்தச் சம்பவம் விமர்சிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை ஒரு காரணமாக வைத்து மியான்தத்தின் கேப்டன்சியில் ஆடமாட்டோம் என சில பாகிஸ்தான் வீரர்களே கொடி பிடித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் முடிந்த பிறகு இன்னொரு போட்டியில் ஆஸிக்கு எதிராகவே டென்னிஸ் லில்லி மற்றும் ராட்னி ஹாக் இருவரின் ஸ்டைலிலும் ஒடி வந்து பந்து வீசி கலாய்த்திருப்பார் மியான்தத். 'If you are bad I am your dad' என்பது போல அமைந்த அந்தச் சம்பவத்தை பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் வாயடைத்து போயிருந்தனர். ஆலன் பார்டர், மெர்வ் ஹுக்ஸை அமைதியாக இருக்க சொன்னதற்கான காரணம் இப்போது புரிகிறதா?!
கிரண் மோரே, ஜாவேத் மியான்தத்
கிரண் மோரே, ஜாவேத் மியான்தத்

இந்தியாவுக்கு எதிராகவுமே தனது ஸ்லெட்ஜ்ஜிங் சேட்டைகளை அரங்கேற்றியிருக்கிறார் மியான்தத். 1992 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பர் கிரண் மோரே மியான்தத்துக்குத் தொடர்ந்து அப்பீல் செய்து கொண்டே இருக்க, கடுப்பான மியான்தத் கிரண் மோரே முன்பு மேலும் கீழும் குதித்தது இப்போதும் சில நேரங்களில் வைரல் ஆகும். 'உன் ரூம் நம்பர் என்னன்னு சொல்லு. பந்தை அங்க பறக்கவிடுறேன்' என திலீப் தோசியை பங்கமாய் கலாய்த்திருக்கிறார்.

'கிரிக்கெட் ஒரு போர். களத்தில் இறங்கிவிட்டால் நான் போர்க்களத்தில் இறங்குவதாகவே உணர்கிறேன்' எனச் சர்ச்சைகளுக்கு தனது சுயசரிதையில் பதில் கூறியிருக்கிறார் மியான்தத். என்னதான் போர்க்களமாக இருந்தாலும் சகட்டுமேனிக்கு வாள் சுழற்றியிருப்பதால் சக நாட்டு வீரர்கள் சிலரே மியான்தத் மீது கடுப்பில்தான் இருந்திருக்கின்றனர்.

மியான்தத் ஒரு வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர். அவருடைய வாய் மட்டும் பேசாது. பேட்டும் கூடவே சேர்ந்து பேசும். ஆலன் பார்டர்களே அரண்டு போனது அதனால்தான்!
ஹேப்பி பர்த்டே மியான்தத்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism