Published:Updated:

Jason Roy: தேசிய அணியைவிட வெளிநாட்டு டி20 லீக் முக்கியமா? ஜேசன் ராயை விமர்சிப்பது சரியா? | Explainer

Jason Roy | ஜேசன் ராய்

MLC டி20 தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார் ஜேசன் ராய். டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேசிய அணியின் ஒப்பந்ததிலிருந்து விலகும் முதல் இங்கிலாந்து வீரர் ஆகிறார். இதன் பின்னணி என்ன?

Published:Updated:

Jason Roy: தேசிய அணியைவிட வெளிநாட்டு டி20 லீக் முக்கியமா? ஜேசன் ராயை விமர்சிப்பது சரியா? | Explainer

MLC டி20 தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணியில் ஆடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார் ஜேசன் ராய். டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக தேசிய அணியின் ஒப்பந்ததிலிருந்து விலகும் முதல் இங்கிலாந்து வீரர் ஆகிறார். இதன் பின்னணி என்ன?

Jason Roy | ஜேசன் ராய்
டி20 கிரிக்கெட் லீக்குகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதன் SA20 டி20 லீக்கை வெற்றிகரமாக நடத்திமுடித்தது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் International League T20 போட்டிகளை நடத்தியது எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம்.

இந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) என்ற புதிய டி20 லீக் தொடங்கவிருக்கிறது. இப்படியான சூழலில், வீரர்கள் இதுபோன்ற லீக்குகளில் ஆட, தங்களின் தேசிய கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து விலகி பிரான்சைஸ் அணிகளுடன் முழு நேர ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அப்படி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியுள்ளார் ஜேசன் ராய்.

SA20
SA20

ஐந்து வருடத்திற்கு முன்பு இப்படி ஒரு விஷயம் நடக்கப்போகிறது எனச் சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால், டி20 லீக்குகளின் இந்த அபார வளர்ச்சியும், அதில் புழங்கும் பணமும் மொத்தமாக அனைத்தையும் புரட்டிப்போட ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு ட்ரென்ட் போல்ட் இதே போன்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்திலிருந்து விலகியிருந்தார். ஜேசன் ராய் இப்போது அதே பாதையை எடுத்திருக்கிறார். இதைப்பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்கும் ஒப்பந்தங்கள் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தற்போது மொத்தம் மூன்று வகையான ஒப்பந்தங்களில் வீரர்களை வைத்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். முதல் ஒப்பந்தம் Central Contract. இங்கிலாந்து அணிக்காகச் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் முக்கிய வீரர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தம் இது. இவர்கள் எப்போது கவுன்ட்டி கிரிக்கெட் ஆட வேண்டும், எப்போது சர்வதேச போட்டிகள் ஆட வேண்டும் என்ற முடிவை எடுக்கும் முழு அதிகாரம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமே இருக்கும். ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட வாரியத்திடமிருந்து தடையின்மை சான்றிதழை (NOC) வீரர்கள் பெறவேண்டும்.

அடுத்தது Incremental Contract. அனைத்து போட்டிகளிலும் ஆடாவிட்டாலும், தொடர்ந்து சர்வதேச அளவில் நிரூபித்துவரும் இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தம் இது. இதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் முழு அதிகாரம் இல்லாவிட்டாலும், வீரர்கள் வாரியத்துடன் பரிசீலனை செய்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்.

இது அல்லாமல் வளர்ந்துவரும் பந்துவீச்சாளர்களுக்குத் தனியாக Pace Bowling Development Contract என்ற ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். இதில் இருக்கும் பந்துவீச்சாளர்களின் வேலைப் பளு எப்படியாக இருக்கிறது, அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி, போன்றவற்றை வாரியம் பார்த்துக்கொள்ளும்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB)
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB)

ஜூலை 13 முதல் 30 வரை அமெரிக்காவில் நடக்கவிருக்கும் MLC லீக்கில் ஆடவிருக்கும் ஆறு அணிகளில் நான்கு அணிகள் ஐபிஎல் அணி உரிமையாளர்களுடையது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற அணியுடன் களமிறங்குகிறது. இங்கிலாந்து கவுன்ட்டி அணிகள் பங்கேற்கும் T20 Blast அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இதே தேதிகளில்தான் நடக்கின்றன. இது அல்லாமல் இரண்டு கவுன்ட்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டிகளும் இந்த காலகட்டத்தில் நடக்கவிருக்கின்றன. ஆனால், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கவலை இந்தப் போட்டிகள் குறித்து அல்ல. ஆகஸ்ட் 1-ம் தேதி அது நடத்தும் 'ஹன்ட்ரட்' (Hundred) தொடர் தொடங்குகிறது. இப்போது வெறும் ஆறு அணிகளுடன் தொடங்கும் MLC, வருங்காலத்தில் இன்னும் அதிக அணிகளுடன் பெரிய தொடராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் நேரடியாக இந்த இரு தொடர்களும் மோதும் என்பதுதான் ECB-ன் கவலைக்குக் காரணம். இதனால் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் யாருக்கும் MLC-ல் ஆட NOC சான்றிதழை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழங்காது.

இதனால்தான் தனது Incremental Contract-ல் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஜேசன் ராய். இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "இங்கிலாந்து ஒயிட் பால் பேட்டரான ஜேசன் ராய், மேஜர் கிரிக்கெட் லீக்கில் ஓர் அணியுடன் ஒப்பந்தம் செய்வதில் விருப்பம் காட்டியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியதுடன் அவர் இருக்கும் ஒப்பந்தத்திலிருந்து விலகும்பட்சத்தில் அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது. இருதரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டனர்" எனத் தெரிவித்தது. மேலும், "இந்த முடிவால் அவர் இங்கிலாந்து தேசிய அணியில் தேர்வுசெய்யப்படுவதில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுப்பவர் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது" என்றும் ECB தெரிவித்திருக்கிறது.

Reece Topley | ரீஸ் டாப்லி
Reece Topley | ரீஸ் டாப்லி
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்லியும் இந்த முடிவு எடுப்பது பற்றி யோசித்துவருகிறாராம். தோள்பட்டை அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வரும் அவர், தனது ஃபிட்னஸ் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த முடிவை எடுக்கக்கூடும்.

சென்ட்ரல் கான்ட்ராக்ட்டில் இருக்கும் எந்த வீரரும் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மற்ற டி20 லீக்குகளில் ஆடப்போவது இல்லை. பொருளாதார ரீதியாக சென்ட்ரல் கான்ட்ராக்ட்டிலிலேயே நல்ல தொகை கிடைக்கும் என்பதால் அப்படிச் செய்வதில் எந்த லாஜிக்கும் இருக்காது. ஆனால், Incremental கான்ட்ராக்ட்டில் இருப்பவர்களுக்கு அப்படியில்லை. அவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் £66,000; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாயை ஊதியமாக ECB வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தில் தற்போது ஹாரி புரூக், டேவிட் மலான், மாத்யூ பாட்ஸ், ஜேசன் ராய், ரீஸ் டாப்லி மற்றும் டேவிட் வில்லி ஆகிய ஆறு வீரர்கள் இடம்பிடித்திருக்கின்றனர்.

MLC-ல் வீரர்களை வாங்க ஒரு அணி 1.15 மில்லியன் டாலர்கள் (சுமார் 9.5 கோடி ரூபாய்) செலவழிக்கலாம். இந்தத் தொகையில் 16-லிருந்து 19 வீரர்கள் வரை ஒரு அணி எடுக்க முடியும். அதில் 9 வெளிநாட்டு வீரர்கள் வரை எடுக்கமுடியும். இப்போது ஒப்பந்தத்திலிருந்து விலகுவது மூலம் மீதியிருக்கும் காலத்துக்கு இங்கிலாந்து வாரியத்திடமிருந்து கிடைக்கவேண்டிய சுமார் £20,000 ஊதியத்தை இழப்பார் ராய். அதை எப்படியும் MLC லீக்கிலிருந்து கிடைக்கும் தொகை ஈடுகட்டிவிடும். சொல்லப்போனால் ராய் போன்ற நட்சத்திர வீரர் அங்கு சில மடங்கு அதிகமாகவே வருமானம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Major Cricket League (MLC)
Major Cricket League (MLC)
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடும் ஜேசன் ராய், MLC-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காகவே ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் ஐபிஎல் தொடரின்போது நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

ECB ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் ரீஸ் டாப்லியும் சமீபத்தில் மாறிவரும் கிரிக்கெட் சூழல் பற்றி மனம் திறந்திருந்தார். "சிறுவயதில் என்னிடம் கேட்டிருந்தால், இங்கிலாந்துக்காக 100 டெஸ்ட் போட்டிகள் ஆட வேண்டும் என்று சொல்லியிருப்பேன். ஆனால், இன்று என்னிடம் கேட்டால் எத்தனை ஐபிஎல் ஆட முடியுமோ அத்தனை ஆடிவிட வேண்டும் எனச் சொல்லுவேன். ஒயிட் பால் மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என நினைப்பது இனி வெட்கப்படக்கூடிய விஷயம் இல்லை என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார் அவர்.

`தேசத்துக்காக ஆடுவதைவிட பணம் பெரிய விஷயமா?' என ஜேசன் ராய் குறித்து பலரும் இணையத்தில் கேள்வியெழுப்ப அவரே ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,

"கடந்த 24 மணிநேரத்தில் பல விஷயங்கள் என்னைப் பற்றிக் கூறப்பட்டுவருகின்றன. அதனால் என்னுடைய தன்னிலை விளக்கத்தை நானே தருகிறேன். நான் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டை விட்டுவிட்டு செல்ல மாட்டேன். என் தேசத்துக்காக ஆடியதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அந்தப் பெருமையை விட்டுத்தர மாட்டேன். இங்கிலாந்து அணிக்காக ஆடுவதுதான் எனக்கு முதன்மையானது.

Jason Roy | ஜேசன் ராய்
Jason Roy | ஜேசன் ராய்

MLC-ல் ஆடுவது குறித்து எனக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஆரோக்கியமான ஓர் உரையாடல் நடந்தது. ஒப்பந்தத்திலிருந்து விலகினால் நான் அங்கு ஆடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார்கள். சென்ட்ரல் கான்ட்ராக்ட் இல்லாத நான், இங்கிலாந்துக்குப் போட்டிகள் எதுவும் இல்லாத இந்த நேரத்தில் MLC போன்ற ஒரு லீக்கில் ஆடுவது ஒரு வீரராக எனக்குப் பல நன்மைகளைச் செய்யும். முன்பு சொன்னது போல இங்கிலாந்துக்காக ஆடுவதுதான் எனக்கு முக்கியம். அதுவும் உலகக்கோப்பை நெருங்கும் இந்தச் சமயத்தில் தேசத்திற்காக ஆட வேண்டும் என்றே நினைக்கிறேன்!" என்று அதில் கூறியிருந்தார் ராய்.

மாறிவரும் இந்தச் சூழலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தங்களை மாற்றியமைப்பதில் தீவிரம் காட்டிவருகிறதாம். இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பணம் படைத்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களது முக்கிய வீரர்களை எப்படியாவது தக்கவைத்துவிடும். ஆனால், வெஸ்ட்இண்டீஸ், தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற கிரிக்கெட் வாரியங்களுக்கு அது பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.

ஜேசன் ராய் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவிடுங்கள்!