Published:Updated:

Jason Gillespie: குறுந்தாடி, ஜடா முடி, அச்சுறுத்தும் பௌலிங்; ஆதிக்க ஆஸ்திரேலியாவை சுமந்த வேகப்புயல்!

Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி ( ICC )

டைட்டான லைன் & லென்த்தில் வீசும் மெக்ராத், புயல் வேகத்தில் வீசும் பிரெட் லீ இந்த இருவரின் தன்மைகளையுமே கில்லெஸ்பி கொண்டிருந்தார். இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியிருக்கிறார்.

Jason Gillespie: குறுந்தாடி, ஜடா முடி, அச்சுறுத்தும் பௌலிங்; ஆதிக்க ஆஸ்திரேலியாவை சுமந்த வேகப்புயல்!

டைட்டான லைன் & லென்த்தில் வீசும் மெக்ராத், புயல் வேகத்தில் வீசும் பிரெட் லீ இந்த இருவரின் தன்மைகளையுமே கில்லெஸ்பி கொண்டிருந்தார். இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியிருக்கிறார்.

Published:Updated:
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி ( ICC )

இதுவரை 450 க்கும் அதிகமான வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அந்த Baggy Green தொப்பியை அணிந்திருக்கின்றனர். அதில் எத்தனையோ வீரர்கள் பெரும் ஜாம்பவான்களாகவும் உயர்ந்திருக்கின்றனர். ஆனாலும், இவர்கள் எல்லோரைவிடவும் கொஞ்சம் தனித்தன்மை மிக்கவர் ஜேசன் கில்லெஸ்பி. நூற்றாண்டு கால ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் 47வது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 19).

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் பழங்குடியின வீரர் கில்லெஸ்பிதான். அவரின் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய பூர்வக்குடியின மக்கள் மத்தியில் 'இந்த விளையாட்டு நமக்கானதும் கூட, இங்கே நம்மாலும் சாதிக்க முடியும்' என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது.
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Australia Cricketers association

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத்தொடர்ந்து, கிரிக்கெட் ஆடும் பழங்குடியின இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கிரிக்கெட் உலகில் கில்லெஸ்பியின் வருகையே இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதெனில், அவரின் செயல்பாடுகள் இன்னும் ஒரு படி அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

மெக்ராத், பிரெட் லீ என இருபெரும் ஜாம்பவான்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அறிமுகமாகி ஆஸ்திரேலிய அணிக்கு வேகப்பந்துவீச்சில் கூடுதல் தளபதியாக நின்று போர் செய்தார். தனக்கென தனி அடையாளமும் ஏற்படுத்திக்கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸின் 4 Horsemen போல, ஆஸ்திரேலியாவின் இந்த 3 Pacemen கூட்டணி எதிரணிகளை அலற செய்தது. டைட்டான லைன் & லென்த்தில் வீசும் மெக்ராத், புயல் வேகத்தில் வீசும் பிரெட் லீ இந்த இருவரின் தன்மைகளையுமே கில்லெஸ்பி கொண்டிருந்தார்.

இந்த மூவரும் இணைந்து நின்றது ஆஸ்திரேலியா அந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட்டில் செலுத்திய ஆதிக்கத்திற்கு ஆதாரப்பொருளாக அமைந்திருந்தது. 2003 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஆஸ்திரேலியாதான் இந்தத் தொடரை வெல்லும் என பெரும்பாலான கணிப்புகள் வெளியானதற்கு அந்த அணி கொண்டிருந்த இந்த அபாயகரமான வேகப்பந்து வீச்சும் ஒரு காரணமாக இருந்தது.

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆஷஸில் தங்கள் தடத்தை பதிப்பதுதான் ஒரே லட்சியமாக இருக்கும். கில்லெஸ்பியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Australia Cricketers association
என்னை ஒரு அறையில் பூட்டி வைத்து கூட ஆஷஸ் வேண்டுமா உலகக்கோப்பை வேண்டுமா எனக் கேட்டால், ஆஷஸ்தான் வேண்டும் என்பேன்.
கில்லெஸ்பி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என கில்லெஸ்பி கூறுவார். ஆஸ்திரேலிய அணியில் அவர் நிரந்தர இடம் பிடிப்பதற்குமே ஆஷஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. 1997 ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையில் இருந்த போது நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இங்கிலாந்து மொத்தமாக நிலைகுலைந்து போனது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலையும் பெற்றது. அங்கிருந்து தொடங்கிய கில்லெஸ்பியின் பயணம் கடைசி வரைக்கும் தடைகள் எதுவும் இன்றி சீராகச் சென்றது.

ஆஷஸை ஒதுக்கிவிட்டு பார்த்தோமென்றால், கில்லெஸ்பி இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியிருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரைக்கும் ஆஷஸுக்கு இணையான பாவிப்பை இந்தியாவில் ஒரு தொடரை வெல்வதற்கும் வெளிக்காட்டுகின்றனர். அந்தளவுக்கு இப்போதைய ஆஸ்திரேலிய அணிக்கு அது ஒரு கனவாக இருக்கிறது. ஆனால், அந்த ஸ்டீவ் வாஹ் ரிக்கி பாண்டிங் காலத்து அணிக்கு அதெல்லாம் ஒரு சாதாரண விஷயம்.

2001ல் டிராவிட் - லக்ஷ்மண் கூட்டணியிடம் தர்ம அடி வாங்கி தொடரை இழந்து சென்ற அதே ஆஸ்திரேலிய அணி, 2004ல் மீண்டும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியவுடன் மெக்ராத்தும் கில்லெஸ்பியும் கூட்டாக பேட்டி அளித்திருந்தார்கள். அதில் லக்ஷ்மணின் முரட்டு ஃபார்ம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,

Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Australia cricketer association
லக்ஷ்மணை வீழ்த்துவதற்கான திட்டம் எங்களிடம் இருக்கிறது. சொல்லப்போனால், ஒட்டுமொத்த இந்திய பேட்ஸ்மேன்களையுமே வீழ்த்தும் திட்டம் எங்களிடம் இருக்கிறது. லக்ஷ்மண் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நன்றாக ஆடியிருக்கிறார். ஆனால், இந்தத் தொடரில் அவரால் ரன் குவிக்க முடியாது. அதை செய்து காட்டுவதுதான் எங்களின் லட்சியம்.
கில்லெஸ்பி

என கில்லெஸ்பி ஒரு போடு போட்டிருந்தார்.

அகங்காரமான பேச்சாக இது தெரிந்தாலும், அந்தத் தொடரில் கில்லெஸ்பி சொன்னதுதான் நடந்திருந்தது. லக்ஷ்மண், ட்ராவிட், சச்சின் என மும்மூர்த்திகளும் அந்தத் தொடரில் ஒரு சதம் கூட அடித்திருக்கவில்லை.

லக்ஷ்மணை இரண்டு முறை கில்லெஸ்பி வீழ்த்தியிருந்தார். அந்தத் தொடரில் மட்டும் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 20. ஏற்கெனவே 2001 தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆக, இந்தியாவின் தட்டையான பிட்ச்களில் வெறும் 7 போட்டிகளிலேயே 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு அந்த 2004 தொடரை மொத்தமாக வென்று கொடுத்தார் கில்லெஸ்பி. சக வேகப்புயல்களான மெக்ராத்தும் பிரெட் லீயுமே கூட இந்திய மைதானங்களில் இவ்வளவு வீரியமாக வீசியதில்லை.

"வேகப்பந்து வீச்சுக்குப் பெரிதாக ஒத்துழைக்காத அடிலெய்டு மைதானத்தில்தான் உள்ளூர் தொடர்களில் நான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். அதன்மூலம்தான் எனக்கு ஆஸ்திரேலிய அணியிலேயே வாய்ப்பு கிடைத்தது" என அவரின் தொடக்கக்காலத்தை பற்றி கூறுவார் கில்லெஸ்பி. அந்த அடிலெய்ட் ஸ்பெல்களின் நீட்சியாகத்தான் கில்லெஸ்பியின் இந்திய சுற்றுப்பயணமும் அமைந்திருக்கக்கூடும்.

Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
Jason Gillespie | ஜேசன் கில்லெஸ்பி
ICC

பௌலராக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சில சிறப்பான சம்பவங்களைச் செய்திருக்கிறார். மெக்ராத்துடன் கூட்டணி சேர்ந்து அமைத்த சென்ச்சூரி பார்ட்னர்ஷிப், சேப்பாக்கத்தில் மட்டை போட்டு இந்தியாவிற்கு எதிரான போட்டியை ட்ரா செய்தது என பேட்டிங்கிலும் தவிர்க்கமுடியாத பங்களிப்புகளை செய்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கடைசி இன்னிங்ஸில் வங்கதேசத்திற்கு எதிராக நைட் வாட்ச்மேனாக களமிறங்கி இரட்டைச்சதம் அடித்திருந்தார். சர்வதேச போட்டிகளில் 400+ விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஒரு பௌலர் இரட்டைச் சதத்தோடு தனது பயணத்தை நிறைவு செய்தது முரண்மிக்க சுவாரஸ்யம். பல ஜாம்பவான்களுக்கு கூட இந்தப் பாக்கியம் வாய்க்கப்பெற்றதில்லை.

பழங்குடியின பின்னணியிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவை ஆதிக்கக்கட்டிலில் தூக்கி நிறுத்திய தோள்களுள் ஒன்றாக கில்லெஸ்பியும் இருந்ததற்காகவே அவர் என்றைக்கும் நினைவில் நிற்பார்!

ஹேப்பி பர்த்டே ஜேசன் கில்லெஸ்பி! இவரைப் பற்றி நீங்கள் நினைவில் வைத்திருக்கும் விஷயங்களை கமென்ட்டில் சொல்லுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism