Published:Updated:

கொஞ்சம் டுப்ளெஸ்சி, கொஞ்சம் ஏபிடி... ப்ரோட்டியாஸின் மானம் காக்கும் யானமன் மலான்! #JannemanMalan

நெருக்கடியான சூழல்களே எப்போதும் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிவிடும். அப்படித்தான் அணியின் கௌரவம் காற்றில் பறந்து கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் சூப்பர் ஹீரோவாக மிரட்டினார் யானமன் மலான்.

சமகால கிரிக்கெட் உலகில் இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேதான் கடும்போட்டி. நம்பர் 1 இடத்தை பிடிப்பதற்காக அல்ல. இரண்டு பேர் ஓடும் ரேஸில் இரண்டாம் இடம் பிடிப்பதற்கான போட்டி போன்றது அது. அதளபாதாளத்தின் அடி ஆழத்தை முதலில் யார் தொடுவது என்பது போன்றதொரு பரிதாபகரமான போட்டியே இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. இந்த வீழ்ச்சி பயணத்திலும் கூட நம்பிக்கையளிக்கும் வகையில் சில வீரர்கள் இரு அணிகளிலுமே உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் அப்படி ஒரு நம்பிக்கை நாயகனாக யானமன் மலான் எனும் வீரர் உருவெடுத்திருக்கிறார். அயர்லாந்துக்கு எதிராக நேற்று இவர் ஆடியிருக்கும் 177* ரன்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழையால் தடைப்பட்டிருந்தது. இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வென்றிருந்தது. இந்நிலையில்தான், தொடரின் முடிவை நிர்ணயிக்கப் போகும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றால் தொடரை இழக்க வேண்டியிருக்கும். அடுத்த உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் தரவரிசையிலும் பெரிதாக அடிவிழும் என்ற சூழலே இருந்தது. எல்லாவற்றுக்கும் மேல் அயர்லாந்திடம் தொடரை இழப்பதெல்லாம் கௌரவ பிரச்சனை சார்ந்தது.

நெருக்கடியான சூழல்களே எப்போதும் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிவிடும். அப்படித்தான் அணியின் கௌரவம் காற்றில் பறந்து கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் சூப்பர் ஹீரோவாக மிரட்டினார் யானமன் மலான்.

தென்னாப்பிரிக்கா அணியே முதலில் பேட்டிங் ஆடியது. குவின்டன் டிகாக்குடன் ஓப்பனிங் இறங்கிய மலான் 50 ஓவர்கள் முழுமைக்கும் க்ரீஸில் நின்று 177 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாகவே பெவிலியனுக்குத் திரும்பினார். டிகாக்கும் சதம் அடித்திருந்தார். டிகாக்கும் மலானும் சேர்ந்து 225 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டிருந்தனர். டிகாக் அவுட் ஆன பிறகும் நின்று இன்னிங்ஸை சிறப்பாக முடித்து தென்னாப்பிரிக்க அணியை 346 ரன்களை எட்டச் செய்தார் மலான்.

மலான், டிகாக்
மலான், டிகாக்

மலான் ஆடும் ஏழாவது ஒருநாள் போட்டிதான் இது. ஆனால், பெரிய அனுபவமிக்க வீரர் போல சூழலை புரிந்துக் கொண்டு மிகச்சிறப்பாக ஆடினார். 'Partnership is all about complementing each other' என சொல்லப்படும். இதை டிகாக்குடன் சேர்ந்து மிகச்சிறப்பாக பின்பற்றினார் மலான். முதல் 10 ஓவர் பவர் ப்ளேயில் எந்த தயக்கமும் இல்லாமல் ஏதுவாக வருகிற பந்துகளை எல்லாம் இருவரும் பவுண்டரியாக்கினர். இரண்டு பேட்ஸ்மேனும் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவது பவர்ப்ளேக்கு ஒத்துவரலாம். ஆனால், அதன்பிறகு இருவரும் வெவ்வேறு ரோல்களை எடுத்துக் கொண்டு ஆடவேண்டும். அப்போதுதான் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியும். இதை நன்றாக புரிந்து வைத்திருந்தார் மலான்.

பவர்ப்ளேக்கு பிறகும் டிகாக் தனது அதிரடியை தொடர, அவருக்கு ஒத்துழைப்பாக பக்கபலமாக நின்று அடக்கமான ஆட்டம் ஆடியிருந்தார் மலான். டெக்னிக்கலாக பார்த்தால் இப்படி பார்ட்னருக்காக கியரை மாற்றி ஆடுவதில் அறிமுக வீரர்களுக்கு ஒரு தடுமாற்றம் இருக்கும். அது மலானின் ஆட்டத்தில் துளியும் இல்லை.

இளம் வீரர்கள் அதுவும் அறிமுகமாகி சில போட்டிகளே ஆன வீரர்களிடம் இந்தளவுக்கான மன முதிர்ச்சியையும் அவ்வளவாக பார்க்க முடியாது. அவர்களிடமிருக்கும் ஒரு துடுக்குத்தனம் பார்ட்னரை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய ஸ்டைல் ஆட்டத்தை ஆடவே பணிக்கும். அந்த மனவோட்டத்தை சிறப்பாக கட்டுப்படுத்தி அணிக்காக ஆடினார் மலான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிகாக்குக்கு செகண்ட் ஃபிடில் (துணையாக நின்று) ரோலில் ஆடினாலும் தனக்கான நேரம் வரும் போது அயர்லாந்து பௌலர்களை வெளுத்தெடுக்க அவர் தயங்கவில்லை.

மலான்
மலான்

முதல் 10 ஓவர்களும் கடைசி 10 ஓவர்களும் மலானுக்கான நேரம். அந்த ஓவர்களில் அடித்து துவம்சம் செய்திருந்தார். கடைசி 10 ஓவர்களில் 100 ரன்கள் எடுக்கப்படுவதற்கு மலானின் அதிரடியே காரணமாக இருந்தது. மலானை டுப்ளெஸ்சி மற்றும் டிவில்லியர்ஸ் கலந்து செய்த கலவை என்று சொல்லலாம். டுப்ளெஸ்சி போன்று பந்துக்கு பன்ச் கொடுக்கும் வகையிலான ஷாட்களை ஆடும் மலான் அத்தனை ஷாட்களையும் க்ளீன் ஹிட்டிங்காக பவுண்டரியாக்கினார். அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர்களையுமே கூட க்ரீஸை விட்டு இரண்டு அடி இறங்கி வந்து அட்டாக் செய்கிறார். இந்த துணிச்சல் டிவில்லியர்ஸினுடைய சாயலை வெளிக்காட்டும் வகையில் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெரும்பாலான பவுண்டரிகளை இப்படி இறங்கி வந்து தான் அடித்தார் என்ற போதிலும் எந்த பந்திலுமே டைமிங் மிஸ்ஸே ஆகவில்லை. ஒரு க்ளாஸ்+மாஸ் வீரராக ருத்ர தாண்டவம் ஆடினார்.

16 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 177 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 347 ரன்களை சேஸ் செய்த அயர்லாந்து அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்கா தோற்றிருந்த கடந்த போட்டியிலுமே மலான் மட்டும் சிறப்பாக ஆடி 84 ரன்களை எடுத்திருந்தார். இதனால் அவருக்கே ஆட்டநாயகன் + தொடர்நாயகன் இரண்டு விருதும் அளிக்கப்பட்டது.

யானமன் மலான்
யானமன் மலான்

ஐபிஎல்-ஐ பின்பற்றி தென்னாப்பிரிக்காவில் நடக்கும் சூப்பர் லீக் மூலமே ஜெனிமன் மலான் வெளிச்சம் பெற்றார். இதுவரை நடந்து முடிந்திருக்கும் இரண்டு சூப்பர் லீக் சீசனிலுமே 300+ ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் மலான் 2 சதம், 2 அரைசதத்தோடு 483 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 120.8 !

இருளடையத் தொடங்கியிருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் மலான் போன்ற வீரர்களே சிறு ஒளிக்கீற்றாக நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் நாளடைவில் சிறு கீற்றாக மட்டுமே மங்கிவிடாமல் பெரும் தீப்பந்தமாக பெரு வெளிச்சம்தர வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு