Election bannerElection banner
Published:Updated:

சச்சின் - கோலி - ஷுப்மான் கில்... மூன்று தலைமுறை பேட்ஸ்மேன்களையும் மிரட்டும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஆண்டர்சன். இதுவரை 7 ஓவர்கள் வீசி 4 மெய்டன் ஓவர்கள் போட்டு, 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார் ஜிம்மி.

சென்னை டெஸ்ட்டின் இறுதி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தவிர்க்கப் போராடிக்கொண்டிருக்கிறது இந்தியா. கோலி மட்டுமே 45 ரன்களோடு களத்தில் நிற்க மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அத்தனைப்பேரும் பெவிலியனுக்குப் போய்விட்டனர். மதிய உணவு இடைவேளையின்போது 144 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்து நிற்கிறது இந்தியா. இன்னும் இரண்டு செஷன்கள் மீதம் இருக்கும் நிலையில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கையில்வைத்துக்கொண்டு 276 ரன் சேஸிங்கை எதிர்நோக்கியிருக்கிறது இந்தியா.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மான் கில், அஜிங்கியா ரஹானே, ரிஷப் பன்ட் என மூன்று முக்கிய விக்கெட்டுகளையும் தூக்கியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் மிரட்டிக்கொண்டிருக்கிறார் ஆண்டர்சன். இதுவரை 7 ஓவர்கள் வீசி 4 மெய்டன் ஓவர்கள் போட்டு, 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றியிருக்கிறார் ஜிம்மி.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து பிட்ச்களில் மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சமும் ஒத்துழைக்காத இந்திய பிட்ச்களிலும் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களை வீழ்த்தி வருகிறார் இவர். 2006-ல் இந்தியா வந்த இங்கிலாந்து மும்பையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது நல்ல ஃபார்மில் விளையாடிக்கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கரை மும்பை டெஸ்ட்டில் தொடந்து பல டாட் பால்களை சந்திக்கவைத்து கடைசியில் 1 ரன்னில் அவுட் ஆக்கினார் ஆண்டர்சன். டிரைவ் ஷாட்டுக்குத்தூண்டிய ஆண்டர்சனின் சிறப்பான பந்துவீச்சுக்கு அன்று விக்கெட்டைப்பறிகொடுத்தார் சச்சின்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

இதேப்போல் 2012-ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியின் ஆண்டர்சனிடம் சச்சினோடு சேர்ந்து கோலியும் சிக்கினார். கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கரை மீண்டும் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கவைத்து அவுட் ஆக்கிய ஆண்டர்சன், கோலியையும் கிட்டத்தட்ட அதே வகையில் அவுட் ஆக்கினார். இந்தமுறை கோலிக்கு ஸ்லிப்பில் கேட்ச் போனது.

இப்போது 2021 சென்னை டெஸ்ட்டிலும் மிரட்டிக்கொண்டிருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் ஒரே ஓவரில் இந்ததலைமுறை வீரரான ஷுப்மான் கில்லையும், அடுத்து அஜிங்கியா ரஹானேவையும் ஓரே ஓவரில் அவுட் ஆக்கினார். அடுத்த சச்சின், அடுத்த கோலி எனப்புகழப்படும் ஷுப்மான் கில்லை ஒரு அற்புதமான ஃபுல்லர் லென்த் பந்துமூலம் போல்டாக்கினார் ஆண்டர்சன். ரஹானேவும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு டெலிவரியில் அவுட்.

மூன்று தலைமுறைகளாக இந்திய பேட்ஸ்மேன்களை மட்டுமல்ல எல்லா நாட்டு பேட்ஸ்மேன்களையும் மிரட்டிக்கொண்டிருக்கும் ஆண்டர்சன் இதுவரை 609 விக்கெட்கள் எடுத்திருக்கிறார்.

ஆண்டர்சன்... வேகப்பந்து வீச்சின் அரசன்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு