Published:Updated:

`தோனி ஐபிஎல் ஆடட்டும்; உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கு!’- பிசிசிஐ-யின் `இன்ப அதிர்ச்சி'

தோனி
தோனி ( ICC )

தோனி இந்திய அணிக்குத் திரும்புவது அவரது கையில்தான் இருக்கிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மகேந்திர சிங் தோனி சென்னை வந்திறங்கியதில் இருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது தோனி தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடிக்கின்றன. பயிற்சி ஆட்டத்தை நேரில் பார்க்க வந்த ரசிகர்கள் சிலர், ``உலகக்கோப்பை அரையிறுதியில் தோனியைப் பார்த்தது. 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தோனியை மீண்டும் களத்தில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றனர்.

பிசிசிஐ
பிசிசிஐ

தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இருந்தாலும் ரசிகர்களுக்கு தோனியை இந்திய அணி ஜெர்ஸியில் பார்ப்போம் என்ற ஆர்வம் உள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகம், `எல்லாம் தோனியின் கையில்தான் இருக்கிறது' என்கிறது.

பிசிசிஐ தேர்வுக் குழுவுக்குப் புதிய தலைவராக சுனில் ஜோஷி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் தலைவராகப் பொறுப்பேற்ற பின் பிசிசிஐ-யின் முதல் கூட்டம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழுவைப் பொறுத்தவரையில் தோனியின் விவகாரத்தில் ஒரு நிலைதான் நீடிக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் நன்றாக விளையாடினால் டி-20 உலகக்கோப்பைத் தொடருக்கு அழைக்கப்படுவார் என பிசிசிஐ வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

ரெய்னா, தோனி
ரெய்னா, தோனி

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர், ``தென்னாப்பிரிக்கா தொடருக்கு தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் அவரது எதிர்காலம் குறித்த எந்த விவாதமும் நடக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்குச் சிறப்பாக அமைந்து நன்றாக விளையாடினால் அவரை அணியில் சேர்ப்பது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். தோனி மட்டுமல்ல நிறைய சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களும் சிறப்பாக ஆடினால் அவர்களின் பெயர்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதனால் உங்களுக்கு நிறைய இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு