Published:Updated:

உலகக்கோப்பை எனக்கு கனவு; காத்திருப்பேன் ஏமாற்றம் இல்லை - ஸ்ரேயாஸ் ஐயர் பாசிட்டிவ் மூவ்!

ராம் பிரசாத்

உங்களை நீங்கள் நம்பினால் தான் நீங்கள் நினைத்தது நடக்கும். நான் நினைத்தது நடந்தால் மகிழ்ச்சி. நடக்காவிட்டால் மிக்க மகிழ்ச்சி என ஸ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் தொடரில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். சரியான தலைமையில்லாமல் தடுமாறி வந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக வழிநடத்தினர். இவரது தலைமையில் டெல்லி அணி ப்ளே ஆஃப் வரை சென்றது. உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தவருக்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடருக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அழைக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 உலகக்கோப்பையை மனதில் வைத்து அணித்தேர்வு நடந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் நிறைய இளம்வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் “உலகக்கோப்பை தொடருக்கு தேர்வாகாதது கடினமானதாக இருந்தது. நாட்டுக்காக உலகக்கோப்பையில் ஆடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல திறமைசாலியாக இருந்தால், உங்களை நிரூபிக்க குறிப்பிட்ட அளவு வாய்ப்புகள் தேவை. எனக்கு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது. நான் எதையும் பாசிட்டிவாக அனுகும் பழக்கம் உடையவன். அதனால் இதனையெல்லாம் மனதிற்குள் வைத்து நான் குழப்பிக்கொள்ள மாட்டேன். உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. வருங்காலத்தில் கண்டிப்பாக அது நடக்கும் என நம்புகிறேன்.

நான் தினமும் பேட்டிங் பயிற்சி செய்கிறேன். முடிந்தவரை சிறப்பான ஷாட்களை ஆடவேண்டும் என நினைப்பேன். இந்த பயிற்சி சர்வதேச அரங்கில் நான் சிறப்பாக செயல்பட உதவும் என நம்புகிறேன். புல் ஷாட் மற்றும் ஸ்வீப் ஷாட்களை கச்சிதமாக ஆட பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த ஷாட்களை பந்துவீச்சாளர்களை நிச்சயமாக கோபமடைய செய்யும். உங்களை நீங்கள் நம்பினால் தான் நீங்கள் நினைத்தது நடக்கும். நான் நினைத்தது நடந்தால் மகிழ்ச்சி. நடக்காவிட்டால் மிக்க மகிழ்ச்சி எனக் கடந்துவிடுவேன்.

ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா ‘ஏ’ அணியில் விளையாடியது என்னை நீருபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பாகவே கருதினேன். நான் வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்தேன் அதனால் அங்குள்ள மைதானங்கள் மற்றும் பிட்ச் கண்டிஷன்கள் எனக்கு நன்கு தெரியும். மேலும் அங்கு வெப்பம் அதிகமாக காணப்படும். அங்கு விளையாடுவது சவாலானது தான். இவையெல்லாம் நீங்கள் விளையாட தொடங்கும் போது கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என முடித்துக்கொண்டார்.