தோனியின் ஓய்வு முடிவு குறித்த பேச்சுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 2018-ல் தோனி ஓய்வு தொடர்பான பேச்சுகள் எழுந்தன. விக்கெட் கீப்பிங்கில் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை இந்திய அணி அடையாளம் காண வேண்டும் என பேசப்பட்டது. 2019-ல் மீண்டும் அதிரடியாக களத்திற்குள் நுழைந்தார் தோனி. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். உலகக்கோப்பை தொடரிலும் தோனி மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. தோனி 2 மாத விடுப்பில் சென்றிருந்தார். இந்த விடுமுறை நாள்களை ராணுவத்தினருடன் செலவிட்டுவருகிறார். ரிஷப் பன்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. விடுமுறை முடிந்து தோனி மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார்.
இந்த நிலையில், தோனி குறித்து முன்னாள் வீரர் கங்குலி, ``எல்லோருடைய வாழ்விலும் ஒரு கடினமான சூழல் வரத்தான் செய்யும். தோனி மீண்டும் இளமைக்குத் திரும்பப் போவதில்லை. தோனி விஷயத்தைப் பொறுத்தவரையில், தேர்வாளர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணி நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. 3 முதல் 4 மாதங்கள் காத்திருப்போம் என்ன நடக்கிறது என அப்போதுதான் தெரியும்.

ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவும் தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் எதிர்காலத்தை நோக்கி திட்டமிடுகிறார்களா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்” என கங்குலி பேசியுள்ளார்.