Published:Updated:

இஷாந்த் எனும் இடிதாங்கி... 100 டெஸ்ட் 302 விக்கெட்கள்... டெல்லி கில்லி சாதித்தது எப்படி?! #Ishant

இஷாந்த் ஷர்மா - Ishant Sharma
இஷாந்த் ஷர்மா - Ishant Sharma

நாளை அஹமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் பகலிரவு டெஸ்ட் இஷாந்த் ஷர்மாவின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

தோல்வியின் விளிம்பில், வாழ்க்கைத் தரும் தர்ம அடிகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தொலைந்து போனவர்கள்தான் இங்கே அதிகம். அப்படியின்றி வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்பை இரண்டாவது இன்னிங்ஸாய் மாற்றி, உச்சத்துக்கு உயர்பவர்கள்தான் வரலாற்று நாயகர்களாகக் கொண்டாடப்படுகிறார்கள். அந்த வரலாற்று நாயகர்களில் ஒருவராக உயர்ந்துநிற்பவர்தான் இஷாந்த் ஷர்மா.

கூட்டத்தில் ஒருவனாய் காணாமல் போய்விடுவார் எனக் கணிக்கப்பட்டவர், காயங்களால் அவதிப்பட்டவர், தோல்விகளால் துரத்தப்பட்டவர் இப்போது 100வது டெஸ்ட், 300 விக்கெட் சாதனை என களமாடிக்கொண்டிருக்கிறார். நாளை அஹமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் பகலிரவு டெஸ்ட் இஷாந்த்தின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், தனது 300-வது டெஸ்ட் விக்கெட்டாக, டான் லாரன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் ஷர்மா. இதற்கு முன்னதாக, கபில்தேவ், கும்ப்ளே உள்ளிட்ட ஐந்தே இந்திய பௌலர்கள் மட்டுமே இணைந்திருந்த 300 டெஸ்ட் விக்கெட் கிளப்பில், தன்னையும் இணைத்துக் கொண்டார், இஷாந்த். அதிலும், இந்த ஆறு பேரில், கபில்தேவ் மற்றும் ஜாகீர்கானுக்கு அடுத்தபடியாக, ஒரு வேகப்பந்து வீச்சாளராய், இந்தச் சாதனைப் பட்டியலில், தன் பெயரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் இஷாந்த்.

இஷாந்த்
இஷாந்த்

2007-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் உலகிற்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இஷாந்த், அந்த வருட இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, பான்ட்டிங்கிற்கு வீசிய அபாரமான ஸ்பெல்லின் காரணமாக, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்த பான்ட்டிங்கை இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவுட் ஆக்கியது மட்டும் அல்லாமல், பலம் வாய்ந்த பான்ட்டிங்கை பல கடினமான பந்துகளை, மிரட்டும் வகையில் வீசி, ஆட்டம் காண வைத்தார். இஷாந்த்தின் எதிர்காலம் ஒளிமயமானதாய் இருக்கப் போகிறதென மீடியாக்கள், பக்கம் பக்கமாக பாராட்டுப் பத்திரம் வாசித்தன. ஆனால் அதன் பிறகு அவருடைய கிரிக்கெட் பயணம், எதிர்பார்த்ததைப் போல இல்லாமல், வறண்டுபோனது.

2011-ம் ஆண்டு, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில், அவர் பதிவு செய்த பத்து விக்கெட் ஹால், நியூசிலாந்துக்கு எதிரான அவரது 7/58 என சில சம்பவங்களை அவர் செய்திருந்தாலும் கன்சிஸ்டன்ஸி மிஸ் ஆனது. தோனி தலைமையிலான டெஸ்ட் அணியில் இவர் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தவில்லை. ஆனால், காலம் மாறியது. 2014-ல் இருந்து தன்னை வேறு மாதிரியாக உருமாற்றிக் கொண்டு வந்தார் இஷாந்த். இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமானது!

2015-க்கு முந்தைய காலகட்டத்தில், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில், 61 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழத்தியவர், அதன்பின் 2015-ல் இருந்து தற்போது வரை, வெறும் 37 போட்டிகளில், 113 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சராசரியையும் 37.30-ல் இருந்து 24-க்கு இறக்கி இருக்கிறார். ஸட்ரைக் ரேட் எனப்படும், எத்தனை பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட்டை வீழ்த்துகிறார் என்பதையும் 66.6-ல் இருந்து, 52-க்கு இறக்கி, தனது தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதையும் உணர்த்தி இருக்கிறார்.

இவரது எழுச்சியை தீமூட்டி, உலகிற்கு அறிவித்த அனல் தெறிக்கும் போட்டி, இங்கிலாந்துக்கு எதிராக 2014-ல் லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான். அந்தப் போட்டியில் அவர் எடுத்த ஏழு விக்கெட்டுகள்தான், இந்திய வேகப் படையை வழிநடத்த ஒரு தலைவன் உருவாகிவிட்டான் என்பதை உணர்த்தியது. இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 2013-ம் ஆண்டுக்கு முன்பு, 53 போட்டிகளில் 149 விக்கெட்டுகளை எடுத்திருந்த இந்த இந்திய ஏவுகணை, அதன்பின் தனது வேகத்தைப் பலமடங்கு அதிகமாக்கி, வெறும் 45 போட்டிகளில், 151 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பெளலிங் யூனிட்டில் தனது இடத்தை நிரந்தரமாக்கிக்கொண்டது.

இஷாந்த், ஷமி, உமேஷ்
இஷாந்த், ஷமி, உமேஷ்

2018-க்குப் பிறகு இன்னும் உக்கிரமானார் இஷாந்த் ஷர்மா. கடைசியாக இவர் ஆடிய 19 டெஸ்ட் போட்டிகளில், 74 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுவும் அசர வைக்கும் 42.8 எனும் ஸ்ட்ரைக் ரேட்டோடு! அதிலும் இந்தப் போட்டிகளில் அவரது பெளலிங் சராசரி, 20-க்கும் கீழ் என்பதே சொல்கிறது, எந்தளவிற்கு ஒப்பற்ற வேகப்பந்து வீச்சாளராய் அவர் உருவெடுத்திருக்கிறார் என்பதை. கடும் பயிற்சி அவரை எந்தளவுக்கு செதுக்கியிருக்கிறது என்பதற்கான சான்று இது.

இன்ஸ்விங் என்றால், ஆஃப் ஸ்டம்ப் லைனில் முன்பு வீசியவர், தற்போது மிடில் ஸ்டம்ப்புக்கு வீசி, பேட்ஸ்மேனை வரிசையாக எல்பிடபிள்யூ அல்லது போல்ட் ஆக்கி, விக்கெட்டுகளைக் கொத்து கொத்தாக அள்ளிக் கொண்டிருக்கிறார். அதுபோக, பேட்ஸ்மேனை முன்னேவந்து ஆடவைத்து, அவுட் ஸ்விங் பந்தில் எட்ஜ் ஆக்கி ஸ்லிப்க்குச் செல்லும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் வித்தையை, இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டுக்குப் போய் நன்றாகக் கற்றுத் தேர்ந்துவந்திருக்கிறார். அங்கே இஷாந்த்தின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி.

ஆஸ்திரேலிய வேகப்புயல் கில்லெஸ்பி சுட்டிக் காட்டிய சின்னத் சின்னத் தவறுகளை, திருத்தி அமைத்துக் கொண்டார் இஷாந்த். ரிஸ்ட்டின் பொசிஷனை எப்படி வைத்துக் கொள்வது என்பது குறித்த திருத்தங்களை கில்லெஸ்பி சுட்டிக் காட்ட, இஷாந்த் தவறுகளை சரி செய்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில், அவருக்கு, விக்கெட்டுகளை வீழ்த்தும் மந்திரம் மனனமானது. அதன்பின் தொட்டதெல்லாம் விக்கெட்டாக மாற ஆரம்பித்தது.

2018-ம் ஆண்டு, ஆஸ்திரேலிய தொடரில், இஷாந்த்தின் பங்களிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அதிகமான 5 விக்கெட் ஹால் எடுத்தெல்லாம் பெரிய விஷயமில்லை. ஒவ்வொரு இன்னிங்ஸிலும் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் என அவரது பங்களிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. கன்சிஸ்டன்ஸி என்பது 0.0000001 விழுக்காடு கூடக் குறையவில்லை என்பதுதான் இவரது கூடுதல் பலம். முக்கிய பேட்ஸ்மேன்கள்தான் பெரும்பாலும் அவரது வலையில் வீழ்பவர்களாக இருந்தார்கள். ஒப்பற்ற டீம் ப்ளேயராக, அணியின் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டுதான் தொடக்கம் முதலே அவரது ஆட்டம் இருந்து வருகிறது!

இஷாந்த் ஷர்மா, விராட் கோலி
இஷாந்த் ஷர்மா, விராட் கோலி

எப்போதெல்லாம் இக்கட்டை நோக்கி இந்தியா நகர்த்தப்படுகிறதோ அப்போதெல்லாம், ஆபத்பாந்தவனாய், இடிதாங்கியாய் அணியைக் காப்பாற்றுவதில் இஷாந்த்தின் பங்கு மிகப் பெரியது. இந்தியா வெற்றி பெற்ற, 44 போட்டிகளில், இவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே 150.

இந்தியாவின் வெற்றிகளுக்கான பக்கத்தில், இவரது பெயர் தவறாமல் இடம்பெற்றிருக்கும். எதிரியின் கோட்டையை சுக்குநூறாக்கும், இந்த டெல்லி புயல், தனது வேகத்தால் கிரிக்கெட்டின் டெஸ்ட் அரங்கத்தில், ராஜநடை போடுகிறது.

இங்கிலாந்துக்கு ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் ஸ்பெலிஷ்ட் பெளலர்களாக கிடைத்ததைப்போல, இந்தியாவுக்குக் கிடைத்த பொக்கிஷம் இஷாந்த். விக்கெட் வேட்டை நடத்தி, ஓய்வு பெறும் முன் கபில்தேவின் சாதனையை முறியடிப்பார் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

வாழ்த்துகள் இஷாந்த்!

அடுத்த கட்டுரைக்கு