Election bannerElection banner
Published:Updated:

11 சிக்ஸர், 19 பவுண்டரி... இஷான் கிஷன் பேரைக் கேட்டாலே ஸ்டேடியங்கள் அலறுதே! #VijayHazare

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

94 பந்துகளில் 173 ரன்களை அடித்திருந்த இஷான் கிஷன் கடைசி 20 பந்துகளில் மட்டும் 73 ரன்களை அடித்து மிரட்டினார். மொத்தம் 19 பவுண்டரிகள் 11 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 184.

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் போட்டித்தொடரான விஜய் ஹசாரே நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே இஷான் கிஷன் 94 பந்துகளில் 173 ரன்களை அடித்து அசத்தியுள்ளார். ஜார்கண்ட்டுக்கும் மத்தியபிரதேசத்துக்கும் இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இஷான் கிஷனின் அதிரடியால் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது.

2020 ஐபிஎல்-ல் மும்பை அணிக்காக 500-க்கும் அதிகமான ரன்களை அடித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தையும் பிடித்திருந்தார் இஷான். மும்பை அணி கோப்பையை வென்றதில் இவரது பங்கு பெரிதாக இருந்தது. இஷான் கிஷனின் அதிரடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இஷான் கிஷன் பெரிதாக எந்த பர்ஃபார்மென்ஸும் செய்யவில்லை. 5 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார். ஜார்கண்ட் அணியும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் முதல் சுற்றோடு வெளியேறியிருந்தது.

இந்நிலையில்தான் விஜய் ஹசாரே தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே இந்தூரில் வைத்து குரூப் B யை சேர்ந்த மத்திய பிரதேச அணியும் ஜார்கண்ட் அணியும் மோதின. மத்தியபிரதேச அணி டாஸை வென்று பௌலிங்கைத் தேர்வு செய்தது.

ஜார்கண்ட் அணியின் சார்பில் ஓப்பனர்களாக உத்கர் சிங்கும், இஷான் கிஷனும் இறங்கினர். ஈஸ்வர் பாண்டே வீசிய 3-வது ஓவரிலேயே உத்கர் சிங் எல்பிடள்யூ ஆகி வெளியேற்றினார். டாஸை வென்று தொடக்கத்திலேயே விக்கெட்டையும் வீழ்த்திவிட்டதால் மத்தியபிரதேசத்தின் கை ஓங்கும் நிலையில் இருந்தது. ஆனால், இதன்பிறகுதான் இஷான் கிஷனின் ஆட்டமே ஆரம்பமானது. சக ஓப்பனர் சீக்கிரமே அவுட் ஆனதால் டிஃபன்ஸிவ் மனநிலைக்கு செல்லாமல் மத்தியபிரதேசத்தின் அட்டாக்கிறகு கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்தார். ஆஃப் சைடில் வலுவான டிரைவ்களின் மூலம் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்தார்.

இஷான் கிஷன் - விஜய் ஹஸாரே
இஷான் கிஷன் - விஜய் ஹஸாரே

அதிரடியாக ஆடிய அவர் 42 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இன்ஜின் சூடுபிடிக்க சூடுபிடிக்க வேகம் கூடுவது போல அரைசதத்திற்கு பிறகு இன்னும் வேகத்தை கூட்டினார் கிஷன். அடுத்த 32 பந்துகளில் அடுத்த அரைசதத்தை கடந்து 74 பந்துகளில் சதமடித்துவிட்டார். இதற்கு மேல் செய்ததுதான் சம்பவம். ஆஃப் சைடில் தொடர்ந்து கிரவுண்டட் ஷாட்கள் ஆடிக்கொண்டிருந்தவர் இதற்கு மேல் மடக்கி லெக் சைடில் பெரிய ஷாட்களாக ஆட ஆரம்பித்தார். மொத்தம் 94 பந்துகளில் 173 ரன்களை அடித்திருந்த கிஷன் கடைசி 20 பந்துகளில் மட்டும் 73 ரன்களை அடித்து மிரட்டினார். மொத்தம் 19 பவுண்டரிகள் 11 சிக்சர்கள். ஸ்ட்ரைக் ரேட் 184. இறுதியில் கௌரவ் யாதவ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இஷான் கிஷன் 28-வது ஓவரிலேயே அவுட் ஆகிவிட்டார். கொஞ்சம் நின்றிருந்தால் இரட்டைசதத்துக்கும் மேல் அடித்து பல சாதனைகளை முறியடித்திருப்பார். இஷான் கிஷன் அவுட் ஆன பிறகு விராட் சிங், அனுகுல் ராய் ஆகியோரின் அதிரடியால் ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 422 ரன்களை குவித்தது. விஜய் ஹசாரே ட்ராஃபியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

423 ரன்களை சேஸ் செய்த மத்தியபிரதேச அணி 98 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வருண் ஆரோன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜார்கண்ட் அணியினருடன் இஷான் கிஷன்
ஜார்கண்ட் அணியினருடன் இஷான் கிஷன்

ஜார்கண்ட் அணி 324 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

இஷான் கிஷன் இந்த அட்டகாசமான இன்னிங்ஸை ஆடிய கொஞ்ச நேரத்தில் வெளியான இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் இஷான் கிஷனும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதே அதிரடியான ஃபார்மில் இந்திய அணிக்காகவும் அவர் ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு