Election bannerElection banner
Published:Updated:

சச்சின் டெண்டுல்கர் முதல் விஜய் சேதுபதி வரை... நம் வெறுப்பு யார் மீது?! #SachinTendulkar

சச்சின், விஜய் சேதுபதி
சச்சின், விஜய் சேதுபதி

ரன்மெஷின் சச்சின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், கிரிக்கெட்டின் கடவுள் என நாடுமுழுக்க கொண்டாடப்பட்ட சச்சின் இப்போது சங்கி சச்சினாக, ஆர்எஸ்எஸ் சச்சினாக, மத்திய அரசின் கைக்கூலி சச்சினாக இழிவுபடுத்தப்படுகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். விவசாயிகள் பக்கம் நின்றிருக்கவேண்டிய சச்சின், போராட்டங்கள் பற்றி எந்த கருத்தும் சொல்லாத சச்சின், குரலற்றவர்களின் குரலாக ஒலித்திருக்கவேண்டிய சச்சின்... சர்வபலம் பொருந்திய அரசுக்கு ஆதரவாக, அவர்களின் குரலாக ஒலித்திருப்பதுதான் அவர் மீதான கட்டற்ற விமர்சனங்களுக்குக் காரணம்.

புனிதங்கள், பிம்பங்கள் எல்லாம் சுக்குநூறாய் உடைக்கப்படுவதுதான் சமூக வலைத்தள இயக்கத்தின் அடிப்படை. அந்த அடிப்படையில் சச்சினின் பிம்பமும் இப்போது ஒட்டுமொத்தமாய் நொறுக்கப்படுகிறது.

``இந்தியாவின் இறையாண்மையில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளமுடியாது. அந்நியர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்பாளர்களாக இருக்கமுடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத்தெரியும். இந்தியாவுக்கு, இந்தியர்கள்தான் முடிவெடுக்கமுடியும். ஒரே நாடாக இணைந்திருப்போம்'' என சச்சின் போட்ட ட்வீட்தான் எதிர்ப்புக்குக் காரணம்.

சச்சினின் ட்வீட்டைத்தொடர்ந்து இதே தொனியில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்வீட்களைப் போட ரன்மெஷின் சச்சின், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், கிரிக்கெட்டின் கடவுள் என நாடுமுழுக்க கொண்டாடப்பட்ட சச்சின் இப்போது சங்கி சச்சினாக, ஆர்எஸ்எஸ் சச்சினாக, மத்திய அரசின் கைக்கூலி சச்சினாக இழிவுபடுத்தப்படுகிறார்.

சச்சின், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி என மக்களால் கொண்டாடப்படும் பலரும், பெரும்பான்மைக் கருத்தில் இருந்து விலகும்போது அவர்கள் மீதான வரைமுறையற்ற தாக்குதல்கள் அரங்கேறுவது புதிதல்ல.

ஆனால், அடுத்தத் தலைமுறைக்கு அடையாளம் காட்ட அரசியல், விளையாட்டு, கலை என எல்லாத்துறையிலும் இன்ஸ்பிரேஷன்கள் வேண்டும். முன்மாதிரிகள் இருக்கவேண்டும். அந்த முன்மாதிரிகளை, அந்த ஹீரோக்களை, அந்த ரோல்மாடல்களை அசிங்கப்படுத்துகிறேன் என இறங்கினால் இங்கே யாருமே மிஞ்சமாட்டார்கள்.

சச்சின் யார் பக்கம் நிற்கவேண்டும் என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அந்த முடிவுக்காக அவரை விமர்சிக்கும் தகுதி நம் அனைவருக்குமே உண்டு. ஆனால், தரம்தாழ்ந்துபோய் அவரது கிரிக்கெட் கரியரையே களங்கப்படுத்துவது கண்டனத்துக்குரியது. சச்சின் உணர்வுப்பூர்வமாக அந்த ட்வீட்டைப் போட்டாரா அல்லது அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டா என்பது பற்றியெல்லாம் யோசித்து எல்லோரும் அவர் பக்கம் நிற்கவேண்டும் என்பதல்ல வாதம். சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் சாதனைகளையே கொச்சைப்படுத்துவது சரியா என்பதையே விவாதிக்கவேண்டியிருக்கிறது.

Delhi Farmers Protest
Delhi Farmers Protest
Manish Swarup

90-களில் இந்தியக் கிரிக்கெட்டின் முகம் சச்சின். இன்று இந்தியாவில் கிரிக்கெட் இந்த அளவுக்கு மிகப்பெரிய விளையாட்டாக உருமாறவும், கோடிகளைக் கொட்டும் ஐபிஎல் வரை இன்று கிரிக்கெட் முன்னேறவும் அவர் பிரதானமான காரணம்.

90-களில் கிரிக்கெட்டுக்கு இணையாக ஹாக்கியும் கொண்டாடப்பட்டது. ஆனால், தன்ராஜ் பிள்ளை தொடங்கி ஹாக்கியின் சூப்பர் ஸ்டார்களாக இருந்த பல வீரர்களும் தனிமனித ஒழுக்கத்தில் தடம் மாற, அந்த விளையாட்டுகளே ஒருகட்டத்தில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறாமல் போயின. முன்னணி வீரர்களாகக் கொண்டாடப்பட்ட பலரும் சாதனைகள் படைக்கும் வேகத்தில் சறுக்கிய வரலாறு அதிகம். ஆனால் சச்சின் கிரிக்கெட் ஆடிய 24 ஆண்டுகளும் உச்சத்தில்தான் இருந்தார்.

இளையராஜா இசை உலகின் ராஜாவாகக் கொண்டாடப்படும் மனிதர். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் பேசும் சில கருத்துகளுக்காக 'அவரைக் கொண்டாடக் கூடாது, அவர் பாடல்களையே கேட்கக்கூடாது, அவருக்கு இசையமைக்க வாய்ப்புகள் கொடுக்கக்கூடாது' என சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஆஃப்ரோ அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவரை ஒரு காவல் அதிகாரி கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததும் அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. #BlackLivesMatter உலகம் முழுக்க ட்ரெண்டாகி, ஆஃப்ரோ அமெரிக்கர்களைச் சமமாக நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் பேசினார்கள், குரல்கொடுத்தார்கள். அந்த நேரத்தில் டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு வந்திருந்தது வெஸ்ட் இண்டீஸ். மழை காரணமாக போட்டி தொடங்குவது தாமதமாக, கமென்டேட்டர்கள் தங்களுக்கிடையே நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ரேசிஸம் பற்றிப் பேச்சு திரும்பியது.

மைக்கேல் ஹோல்டிங்
மைக்கேல் ஹோல்டிங்

இனவாதம் பற்றி ஒரு கிரிக்கெட் அரங்கில் மைக்கேல் ஹோல்டிங் பேச ஆரம்பித்தார். உலகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பேச்சு அது. ``நான் சிறுவனாக, கிரிக்கெட் வீரனாக இருந்தபோது இனவாதம் பற்றியெல்லாம் யாராவது பேசினால் ஒதுங்கிவந்துவிடுவேன். அது வேறு எங்கோ, எவரோ சந்திக்கும் பிரச்னை என நினைத்தேன். மிகவும் சுயநலமாக இருந்துவிட்டேன். இப்போது புரிந்துகொண்டேன்'' எனத் தனது 67-வது வயதில் பேசினார் மைக்கேல் ஹோல்டிங். ஆஃப்ரோ அமெரிக்கராக கரீபியன் தீவில் பிறந்து, ஒடுக்குமுறைகளை சந்தித்தவரே ஒரு பொதுத்தளத்தில் இனவாதம் பற்றிப் பேச இத்தனை ஆண்டுக்காலம் ஆகியிருக்கிறது. அவருக்கு எப்போது இதுகுறித்து பேச வேண்டும் என்று தோன்றியதோ, அப்போதுதான் பேசியிருக்கிறார். #Blacklivesmatter குறித்துப்பேசாத பல கரீபியன் கிரிக்கெட்டர்களும் இருக்கிறார்கள். இது அவர்களின் தனிப்பட்ட கருத்துரிமை.

உலகம் முழுக்க கொண்டாடப்படும் பிரபலங்கள் பலரும் பெரும்பான்மை மக்களின் கருத்தில் இருந்து எதிர்க்கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. கால்பந்தின் கடவுளாகக் கொண்டாடப்படும் பீலே மீது பிரேசிலில் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அவர் தனது மண்ணின் மைந்தர்களுக்காகக் குரல்கொடுத்ததில்லை என்கிற ஏக்கம் அந்த மக்களிடையே இருக்கிறது. ஆனால், அதற்காக பீலேவை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். அவர் கால்பந்தில் செய்த சாதனைகளையெல்லாம் கொச்சைப்படுத்தமாட்டார்கள். தனிமனித தாக்குதலில் ஈடுபடமாட்டார்கள்.

விஜய் சேதுபதி-முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி-முத்தையா முரளிதரன்

இலங்கைத்தமிழராக மட்டுமல்ல, கிரிக்கெட்டராகவும் கடைசிவரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்பட்டவர்தான் முத்தையா முரளிதரன். முழுக்க முழுக்க திறமையால், உழைப்பால் முன்னேறி உலகின் நம்பர் 1 பெளலர் என்கிற சாதனையைப்படைத்த முரளிதரனின் வாழ்க்கையில் இன்றைய இளைஞர்கள் கற்றுக்கொள்ள பல்வேறு நம்பிக்கைக் கதைகளும் இருக்கின்றன.

விஜய் சேதுபதி ஒரு நடிகர். அவர் வில்லனாகவும் நடிக்கலாம். ஹீரோவாகவும் நடிக்கலாம். அது அவரின் விருப்பம். அதேபோல், முரளிதரன் ஒருவரின் பார்வையில் ஹீரோவாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம். ஆனால், அவரின் வாழ்க்கை என்பது இங்கே ஒரு கதை மட்டுமே! 'அந்தக் கதையில் நடிக்கலாமா, வேண்டாமா' என்பது ஒரு கலைஞனின் தனிப்பட்ட விருப்பமாக மட்டுமே இருக்கமுடியும். ஆனால், நாம் எல்லாவற்றிலும் அரசியலைக் கலந்துவிடுகிறோம். ஒரு திரைப்படமாக அது உருப்பெறும் முன்பே தடுத்து நிறுத்தப் போராடுகிறோம். அதில் கிடைக்கும் வெற்றியில் போதையும் அடைகிறோம். தொடமுடியாத உயரங்களில் இருக்கும் பலரையும் இப்படிப்பட்ட தாக்குதல்களால் மண்டியிட வைக்கும்போது, ஒரு குரூர திருப்தியும் அடைகிறோம். ஒரு சமூகமாக நம் அடையாளம் இதுதானா?

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு