Published:Updated:

IPL Playoffs: சேஃப் சோனில் குஜராத், முன்னணியில் சென்னை; முட்டி மோதும் பிற அணிகள்; யாருக்கு வாய்ப்பு?

IPL Playoffs

சென்னை அணி டெல்லியையும் கொல்கத்தாவும் அடுத்த 3 போட்டிகளில் எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டுமே திடீர் விஸ்வரூபமடைந்து ஆடும் அணிகள் என்பதால் சென்னை கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.

Published:Updated:

IPL Playoffs: சேஃப் சோனில் குஜராத், முன்னணியில் சென்னை; முட்டி மோதும் பிற அணிகள்; யாருக்கு வாய்ப்பு?

சென்னை அணி டெல்லியையும் கொல்கத்தாவும் அடுத்த 3 போட்டிகளில் எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டுமே திடீர் விஸ்வரூபமடைந்து ஆடும் அணிகள் என்பதால் சென்னை கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.

IPL Playoffs
"கிரிக்கெட் விரும்பிகளுக்கு இது ஓர் அற்புதமான ஐ.பி.எல் சீசனாக இருக்கப்போகிறது. இப்போது வரைக்குமே 10 அணிகளும் ப்ளேஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கின்றன. ஒரு போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் நேராக 2வது இடத்துக்கு முன்னேறக்கூடும். அதேநேரத்தில் ஒரு போட்டியில் தோற்றால் 7 அல்லது 8வது இடத்துக்குச் சரியவும் கூடும். இது ஒரு அட்டகாசமான சீசன்!"
ஜாஸ் பட்லர்
Jos Buttler
Jos Buttler
ராஜஸ்தான் அணியின் முக்கியமான வீரரான ஜாஸ் பட்லர் இப்படிப் பேசி சில நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் அத்தனை அணிகளும் ப்ளேஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்கவே செய்கின்றன. 10வது இடத்தில் இருக்கும் டெல்லியின் கேப்டன் வார்னரோ "இப்போதுதான் எல்லாமே கூடி வருகிறது. சேப்பாக்கத்தில் பெரிய சவால் காத்திருக்கிறது. நம்பிக்கையோடு கிளம்புகிறோம்" என ப்ளேஆப்ஸை மனதில் வைத்து ஊக்கமாகப் பேசியிருக்கிறார். "நாங்கள் இன்னும் தொடரைவிட்டு வெளியேறிவிடவில்லை. இதே உந்துதலை அடுத்தடுத்தப் போட்டிகளுக்கும் கடத்த விரும்புகிறோம்!" ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை வென்று கொடுத்து விட்டு 9வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் அணியின் வீரர் அப்துல் சமத் இப்படிப் பேசியிருந்தார்.
ரோஹித் & கோலி
ரோஹித் & கோலி

ஆக, எல்லா அணிகளுமே ப்ளேஆப்ஸ் வாய்ப்புக்காக ஒரு கை பார்த்துவிடலாம் என்கிற மனநிலையிலேயே இருக்கின்றன. ஒரு போட்டியை வென்றால் புள்ளிப்பட்டியலில் டாப்புக்குச் செல்லலாம். அதேநேரத்தில் ஒரு போட்டியில் தோற்றால் அடிவாரத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற பட்லரின் கூற்று 100% உண்மைதான். இப்போதைக்குப் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் பெங்களூருவும் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் மும்பையும் ஒரே புள்ளியில்தான் இருக்கின்றனர். மும்பையும் சரி பெங்களூருவும் சரி 10 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் தோற்று 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகளோடு இருக்கின்றன. ரன்ரேட்டில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தாலும் இரு அணியின் ரன்ரேட்டும் நெகட்டிவ்வாகத்தான் இருக்கிறது. ஆக, இந்த இரண்டு அணிகளும் வான்கடேவில் மோதப்போகும் இன்றைய போட்டி ரொம்பவே முக்கியமானது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி நேராகப் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறக்கூடும். தோற்கும் அணி 7 அல்லது 8வது இடத்தைப் பிடிக்கக்கூடும்.

கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே இதே மாதிரியான ஒரு நிலையில்தான் இருக்கின்றன. ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், மும்பை என 5 அணிகள் ஒரே மாதிரியாக 10 புள்ளிகளில் இருக்கின்றன. இவர்கள் அடுத்தடுத்து ஆடப்போகும் ஒவ்வொரு போட்டியுமே வாழ்வா சாவா போட்டியாக இருக்கும். முதல் பாதியில் அற்புதமாக ஆடி ப்ளேஆப்ஸ் ரேஸில் முன்னணியிலிருந்த ராஜஸ்தான் சமீபத்திய வரிசையான தோல்விகளால் கொஞ்சம் திணறிப்போயிருக்கிறது. எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே ப்ளேஆப்ஸ் வாய்ப்பைக் கொஞ்சம் திடகாத்திரமாக உறுதி செய்ய முடியும். இல்லையேல் ஏகப்பட்ட கால்குலேட்டர் கணக்குகளுக்குள் சிக்க வேண்டியிருக்கும். அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகும் அந்த அணியின் ரன்ரேட் இன்னமும் பாசிட்டிவ்வாக இருப்பது அவர்களுக்கு நிம்மதியளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும்.

சஞ்சு சாம்சன், குமார் சங்ககரா - RR
சஞ்சு சாம்சன், குமார் சங்ககரா - RR
கொல்கத்தாவும் ராஜஸ்தானைப் போன்றே 11 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் vs கொல்கத்தா மோதும் போட்டி ஈடன் கார்டனில் மே 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஏறக்குறைய அது ஒரு நாக் அவுட் போட்டியைப் போன்றுதான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான் அணி பெங்களூருவை 14-ம் தேதி சந்திக்கிறது. அதுவுமே ஒரு நாக் அவுட் போன்றுதான் இருக்கும். பஞ்சாப் கிங்ஸை 19-ம் தேதி எதிர்கொள்கிறது ராஜஸ்தான். அதுவரை பஞ்சாபோ ராஜஸ்தானோ தொடரில் நீடிக்கும்பட்சத்தில் அதுவுமே ஒரு வெறித்தனமான நாக் அவுட் போட்டியாகத்தான் இருக்கும். தங்களைப் போன்றே பிழைத்திருத்தலுக்காகப் போராடும் அணிகளான மும்பை, ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஆகியோருடன் மோதுவது பெங்களூருவுக்குமே கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.

பஞ்சாப் அணி - PBKS
பஞ்சாப் அணி - PBKS
மும்பை அணி குஜராத், லக்னோ ஆகிய அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. கொஞ்சம் சௌகரியமாக மேலே உட்கார்ந்திருக்கும் அணிகளை மும்பை வீழ்த்தியே ஆக வேண்டும். அப்படியானால்தான் அடுத்த சுற்றைப் பற்றி யோசிக்கவே முடியும்.

டெல்லி கேப்பிட்டல்ஸூம் பஞ்சாபும் 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மீண்டும் மீண்டும் மோதிக்கொள்ளப் போகின்றன. அடுத்தடுத்து நடைபெறும் இந்த இரண்டு போட்டிகளையும் ஒரு சேர வெல்லும் அணி ப்ளேஆப்ஸ் ரேஸில் பெரும் முன்னேற்றத்தைப் பெறும். லக்னோ, குஜராத், பெங்களூர், மும்பை எனத் தங்களை விட எல்லாவிதத்திலும் வலிமையான போட்டியாளர்களையே இனி சன்ரைசர்ஸ் எதிர்கொள்ளவிருக்கிறது. டெல்லிக்கு பஞ்சாபுடன் இரண்டு போட்டிகள் இருப்பதைப் போல சென்னையுடனும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. வார்னரின் நம்பிக்கை பலிக்குமா என்பதை இந்த இரண்டு அணிகளும்தான் தீர்மானிக்கப் போகின்றன.

GT - DC (ஹர்திக் பாண்டியா - டேவிட் வார்னர்)
GT - DC (ஹர்திக் பாண்டியா - டேவிட் வார்னர்)

இப்போதைய சூழலில் குஜராத் அணி மட்டும்தான் ஏறக்குறைய அந்த ப்ளேஆப்ஸ் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது எனலாம். 11 போட்டிகளில் ஆடி 8-ல் வென்றிருக்கிறது. மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே சௌகரியமாக ப்ளேஆப்ஸ் வாய்ப்பை 100% உறுதி செய்துவிடும். சென்னையும் லக்னோவும் 11 போட்டிகளில் ஆடி 6-ல் வென்று 13 புள்ளிகளுடன் 2 மற்றும் 3வது இடத்தில் இருக்கின்றன. இரண்டு அணிகளும் அடுத்து ஆடும் 3 போட்டிகளில் இரண்டை கட்டாயம் வென்றே ஆக வேண்டும்.

சென்னை அணி டெல்லியையும் கொல்கத்தாவும் அடுத்த 3 போட்டிகளில் எதிர்கொள்ளவிருக்கிறது. இரண்டுமே திடீர் விஸ்வரூபமடைந்து ஆடும் அணிகள் என்பதால் சென்னை கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். லக்னோ அணி சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. லக்னோவும் கொஞ்சம் அசந்தால் கூட அவ்வளவுதான் என்கிற சூழலில்தான் இருக்கிறது.
CSK - Dhoni
CSK - Dhoni

இப்போதைய சூழலில் குஜராத்தைத் தவிர வேறெந்த அணியும் சௌகரியமான நிலையில் இல்லை. எல்லா அணிகளும் 'Do or Die' என்கிற சூழலில்தான் இருக்கின்றன. இயல்பான ஆட்டத்தை விடப் பிழைத்திருத்தலுக்காக ஆடப்படும் ஆட்டம் எப்போதுமே கூடுதல் சுவாரஸ்யத்தோடுதான் இருக்கும். அந்த வகையில் வரவிருக்கும் நாள்கள் அத்தனையும் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நாள்கள்தான்!

ப்ளேஆப்ஸுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.