சினிமா
Published:Updated:

ஆரம்பமாகும் ஐ.பி.எல் ஆட்டம்!

ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.எல்

கடந்த ஆண்டே நடக்கவிருந்த டி-20 உலகக் கோப்பை, இந்த அக்டோபர் மாதம் நடக்கவிருப்பதால், அதற்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் சர்வதேசத் தொடர்களை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தன.

மீண்டும் அமீரகத்திடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது ஐ.பி.எல். கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தொடர், செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரும் என்று பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது. டி-20 உலகக் கோப்பை என்ற மிகப்பெரிய தொடருக்கு இன்னும் அவர்களிடம் திட்டம் இல்லை. ஆனால், ஐ.பி.எல் தொடரை முடிக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சவால்களைக் கடந்து வெற்றிகரமாக அதை முடிப்பது சாத்தியமா!

வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட பயோ பபுளுக்குள் இருந்த பலருக்கும் கொரோனா பரவியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது ஐ.பி.எல் 2021 சீசன். வெளிநாட்டு வீரர்கள் பல சிரமங்களுக்குப் பிறகு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அப்போதிருந்தே ஐ.பி.எல் தொடருமா, எங்கே நடத்தப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன.

இந்தியாவில் பாதிப்புகள் குறையாத நிலையில், இங்கு நடத்துவது சாத்தியமே இல்லாமல்போனது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், அங்கேயே மிச்சமுள்ள 31 போட்டிகளை நடத்த இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் போர்டிடம் பி.சி.சி.ஐ பேசியதாகவும், அதில் உடன்படிக்கை ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டைப் போலவே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இத்தொடர் மாற்றப்பட்டிருக்கிறது.

ஆரம்பமாகும் ஐ.பி.எல் ஆட்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களை இந்திய அணி முடித்ததும், செப்டம்பர் 18 அல்லது 19-ல் ஐ.பி.எல் மீண்டும் தொடங்கப்படலாம். கடந்த ஆண்டு தொடரை அங்கு நடத்தியிருப்பதால், மைதானம், பயணம், திட்டமிடல் போன்றவற்றில் பெரிய சிக்கல்கள் இருக்காது. ஆனால், வீரர்கள் வருகை, செலவு போன்றவை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

கடந்த ஆண்டே நடக்கவிருந்த டி-20 உலகக் கோப்பை, இந்த அக்டோபர் மாதம் நடக்கவிருப்பதால், அதற்குத் தயாராகும் வகையில் ஒவ்வொரு அணியும் சர்வதேசத் தொடர்களை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்திருந்தன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், இலங்கை, பாகிஸ்தான் இரண்டு அணிகளுக்கும் எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடர்கள், இந்திய டெஸ்ட் தொடர் என இங்கிலாந்து அணி அடுத்த சில மாதங்களுக்கு பயங்கர பிசி. அதனால் ‘இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கமாட்டார்கள்’ என்று சொல்லிவிட்டார் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் முதன்மை இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ்.

இங்கிலாந்து மட்டுமென்றால் பரவாயில்லை. பல தொடர்களைத் திட்டமிட்டிருக்கும் வங்கதேசம், அதற்கான ஒளிபரப்பு உரிமங்களையும் விற்றுவிட்டது. அதனால், அந்தத் தொடர்களை மற்ற அணிகளாலும் புறக்கணிக்க முடியாது. பொதுவாக பெரிய தொடர்கள் வருவதாக இருந்தால், அதற்கு முன்பான ஐ.பி.எல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள். அதனால், இம்முறை பல வீரர்கள் விலகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளோடு விளையாடுகிறது. அதுமட்டுமல்லாமல் கரீபியன் பிரீமியர் லீக் தொடரும் ஆகஸ்ட் இறுதியில்தான் தொடங்குகிறது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் ஓய்வே இல்லாமல்தான் இருப்பார்கள். ஆக, வீரர்களை ஒருங்கிணைப்பது இதுவரை இல்லாத சவாலாக இருக்கப்போகிறது.

இது ஒருபக்கமெனில், செலவு, வருமானம் இம்முறை பெரும் அடியாக இருக்கப்போகிறது. சர்வதேசத் தொடர்களில் ஆடும் வீரர்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்துவர தனி விமானம் ஏற்பாடு செய்யவேண்டும். ஏனெனில், பபுள் டு பபுள் மாறினால் மட்டுமே குவாரன்டீன் கட்டுப்பாட்டுக்கான சிக்கல்களைத் தவிர்க்க முடியும். தனி விமானங்களுக்கு ஆகும் செலவுகள் ஒருபக்கமென்றால், வீரர்களைத் தங்கவைக்கும் செலவுகள் மீண்டும் கையைக் கடிக்கும். வருமானத்தில் இழப்பு ஏற்பட்டாலும், அது இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பெரிய அளவில் பாதித்துவிடப்போவதில்லை. ஏனெனில், இது இப்போது கௌரவப் பிரச்னையாகிவிட்டது. அதனால்தான், இன்னும் உலகக் கோப்பைக்கு ஒரு முடிவு எட்டாமல், இந்த டி-20 லீகை பிரதானப்படுத்தியிருக்கிறார்கள். அக்டோபர் இரண்டாம் வாரம் வரை ஐ.பி.எல் செல்லும் என்பதால் நிச்சயம் உலகக் கோப்பை தாமதப்படும். ஐ.சி.சி வேறு வழியின்றி அதற்குத் தலையாட்டத்தான் போகிறது.

ஆரம்பமாகும் ஐ.பி.எல் ஆட்டம்!

இருந்தாலும், மற்ற போர்டுகளை, வீரர்களை வசியப்படுத்துவது இந்திய கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு இம்முறை சவாலாக இருக்கும். தொடர் ஏற்கெனவே தொடங்கிவிட்டதால் ஐ.பி.எல் மூலம் கிடைக்கும் பொருளாதாரப் பலன்கள் அவர்களுக்குக் கட்டாயம் சென்றுவிடும். அதனால், தங்கள் அணிகள் ஆடும் சர்வதேசத் தொடர்களைத் தள்ளிவைப்பதையோ, வீரர்களை அனுப்புவதையோ விரும்பாது. உலகக் கோப்பைக்கு முன் வீரர்கள் நல்ல ஓய்வு பெற்றுத் தயாராக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். இப்படியொரு சூழ்நிலையில் அவர்களோடு சமரசம் செய்வது மிகப்பெரிய சவால். பி.சி.சி.ஐ நிச்சயம் அதில் தீயாய் வேலை செய்யும். ஏனெனில், முன்பே சொன்னதுபோல் உலகக் கோப்பையைவிட ஐ.பி.எல் மிகவும் முக்கியம். அதுதான் இவர்களின் கௌரவமும்கூட!