கிறிஸ் மோரிஸ், கைல் ஜேமிசன், கிளென் மேக்ஸ்வெல் என வெளிநாட்டு வீரர்கள் அதிகவிலைக்குப்போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால், ஒரு தமிழக வீரர் அவரது ஆரம்பவிலையான 20 லட்சம் ரூபாயில் இருந்து 26 மடங்கு உயர்ந்து 5.25 கோடிக்கு ஏலம் போயிருக்கிறார். கிருஷ்ணப்ப கெளதம், ஷாருக்கான் இந்த இருவரும்தான் 5 கோடிக்கு மேல் ஏலம் போன இந்திய வீரர்கள்.
முதல்முறையாக நடராஜனை எடுத்து ஐபிஎல் அனுபவம் கொடுத்த அதே பஞ்சாப் அணிதான் இந்தமுறை ஷாருக்கானையும் எடுத்து உலக வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது. ஒரே நாளில் இந்திய சென்சேஷனாகியிருக்கும் ஷாருக்கான் யார்?!
சாம் கரண், ரிஷப் பன்ட் போல, ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, போட்டியின் போக்கையே மாற்றி விடும் தன்மை கொண்டவர் ஷாருக்கான். 26 வயதான ஷாருக்கான் 13 வயதுக்கு முன்னதாகவே டிஎன்சிஏ நடத்திய பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாடியவர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற, ஜுனியர் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தமிழகத்தேர்வாளர்களின் கவனம் இவர்மேல் பதிந்தது.

லிஸ்ட் 'ஏ' போட்டிகளில், பிப்ரவரி மாதம், 2014-ம் ஆண்டு களம் கண்டார். 2013-14ம் ஆண்டு, விஜய் ஹசாரே தொடரிலும் அறிமுகமானார். இவருடைய சிறப்பான ஆட்டத்தின் காரணமாக, அந்த வருடம் பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோர்களுக்கான உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு ஷாருக்கானுக்குத் தவறிப்போனது. ஆனால், ரஞ்சி வாய்ப்பு கிடைத்தது. 2018-19 சீசனில் இவர் அறிமுகமாகி ரன் வேட்டையாடினார். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இருபது லட்சம் எனும் அடிப்படை விலையுடன் இவர் பெயர் முன்வைக்கப்பட்டது. ஆனால், இவரை எந்த அணியும் அப்போது வாங்க முன்வரவில்லை.
முடங்கிவிடவில்லை ஷாருக்கான். தமிழக அணியில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆரம்ப காலகட்டங்களில், முன்வரிசை பேட்ஸ்மேனாக இறங்கிக்கொண்டிருந்தவர் ஷாருக்கான். இவருக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பவர் ஹிட்டரை வெளியே கொண்டு வந்த பெருமை, தினேஷ் கார்த்திக்கையே சேரும். அவர்தான் ஷாருக்கானுக்கு ஃபினிஷர் ரோல் கொடுத்தவர். அவர் கொடுத்த ஊக்கமும், நம்பிக்கையும்தான் ஷாருக்கானை மிகச்சிறந்த ஃபினிஷராக, கேம் சேஞ்சராக, கேமியோ கிங்காக உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு பிரிமியர் லீகில், 'லைகா கோவை கிங்ஸ்' சார்பாக விளையாடிய ஷாருக்கான், தனது ஸ்ட்ரைக் ரேட்டால் எல்லோரையும் மிரள வைத்தார். குறிப்பாக, 2018-ம் ஆண்டு நடைபெற்ற, திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில், மிக இக்கட்டான நிலையில் களமிறங்கி, 40 பந்துகளில் 66 ரன்கள் அடித்டு, அந்தத் தொடரில், அதுவரை தோல்வியையே சந்தித்திராத திருச்சி அணிக்கு தோல்வியைப் பரிசளித்தார். அதேப்போல, இன்னொரு போட்டியில், திண்டுக்கலுக்கு எதிராக, 54 பந்துகளில் 86 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார். மேலும், காரைக்குடி அணிக்கு எதிரான ஒரு போட்டியில், பவுண்டரி லைனுக்கு மிக அருகாமையில், ஒரு கையால் இவர் தாவிப்பிடித்த ஒரு கேட்ச், ஏபிடி வில்லியர்ஸை நினைவூட்டுவதாய், அந்த வீடியோ வைரலானது.

ஒவ்வொரு அணிக்கும் கேம் சேஞ்சராக, மேட்ச் வின்னராக, எக்ஸ் ஃபேக்டராக, ஒரு வீரர் எப்போதும் தேவைப்படுவார். அப்படி ஒரு வீரராக, ஷாருக்கான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்தாக் அலி தொடரில், இமாச்சலப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், 19 பந்துகளில் 40 ரன்களைக் குவித்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதே தொடரில், ஜார்கண்டுக்கு எதிராக, 4 பந்துகளில் 12 ரன்களைக் குவித்த ஷாருக்கான், ஒரிசாவுக்கு எதிராக, 10 பந்துகளில் 18 ரன்களையும், இறுதிப் போட்டியில், மிக முக்கியமான நேரத்தில், 7 பந்துகளில் 18 ரன்களையும் குவித்து அதிரடி காட்டினார். குறிப்பாக, அந்தப் போட்டியில் அவர் அடித்த ஒரு அற்புதமான சிக்ஸர்அவரை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்தியது.
இதனால்தான் சயத் முஷ்தாக் அலி தொடர் நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே ட்ரையலில் பங்கேற்க, பல அணிகளும் இவருக்கு அழைப்பு விடுத்தன. கடந்த ஐபிஎல் தொடரில், நடராஜனும், வருண் சக்கரவர்த்தியும் தமிழ்நாட்டு வீரர்களாய் இருப்பினும், வேறு அணிகளுக்காக ஆடி பெருமை சேர்த்ததைப் போல, இந்த வருடமும் அதிரடி மன்னனான, ஒரு தமிழ்நாட்டு பன்ட்டை, பஞ்சாப் வாரி எடுத்துக் கொண்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் இவர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை, வெளிப்படுத்தினால், இந்திய அணியிலும் ஷாருக்கானுக்கான இடம் உறுதிசெய்யப்படும்.
பிரபல நடிகர், ஷாருக்கானின் பெயரைத்தான் இவரது பெற்றோர்கள் வைத்தனராம். இவர் எங்கேசென்று தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாலும் ஷாருக்கான் எனப் பெயரை மீண்டும் ஒருமுறைச் சொல்லி சிரிப்பார்களாம். அதனை முற்றிலுமாக மாற்றி, தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம். அதை நிறைவேற்றிக் கொள்ள ஷாருக்கானுக்கு ஒரு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார், இந்த கேமியோ இன்னிங்ஸ்களின் கிங்!