Published:Updated:

IPL Auction 2023: 80 வீரர்கள், 167 கோடி; சாதித்த, சறுக்கிய அணிகள் எவை? மினி ஏலம் ஒரு ரவுண்ட் அப்!

IPL Auction 2023

405 பேரை சல்லடையிலிட்டு சலித்ததில், 167 கோடி செலவழிக்கப்பட்டு 80 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டனர். அதில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

Published:Updated:

IPL Auction 2023: 80 வீரர்கள், 167 கோடி; சாதித்த, சறுக்கிய அணிகள் எவை? மினி ஏலம் ஒரு ரவுண்ட் அப்!

405 பேரை சல்லடையிலிட்டு சலித்ததில், 167 கோடி செலவழிக்கப்பட்டு 80 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டனர். அதில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

IPL Auction 2023

ஏல மேஜைகள், அதில் ஓரங்க நாடகங்கள், கோப்பைக்கான ரெசிபிக்கான டிரெஸர் ஹண்ட் - இப்படித்தான் நீண்டது மினி ஏலம்.

991 வீரர்கள் இந்தாண்டு ஐபிஎல் ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தனர். ஆனால் 10 அணிகளும் தேர்ந்தெடுத்த 369 வீரர்கள், அணிகள் கேட்டதால் சேர்க்கப்பட்ட 36 வீரர்கள் என எல்லாம் இணைந்து மொத்தம் 405 வீரர்களைக் கொண்ட இறுதிப்பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

இப்பட்டியலிலிருந்து தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கான வீரர்களுக்கான தேடலாக கொச்சியில் நடந்த மினி ஏலத்தை அணிகள் பயன்படுத்தின. அணிகள் இந்த 405 பேரை சல்லடையிலிட்டு சலித்ததில், 167 கோடி செலவழிக்கப்பட்டு 80 வீரர்கள் மட்டுமே வாங்கப்பட்டனர். அதில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள்.
IPL Auction 2023
IPL Auction 2023

கனமான பர்ஸோடு மற்ற அணிகளின் கனவுகளுக்கு கண்ணி வெடி வைத்துக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் மற்றும் பஞ்சாப், ஏற்கெனவே வலுவாய் உள்ள அணிக்கு மிகச்சரியான தேர்வுகளை செய்வதில் குறியாயிருந்த குஜராத் மற்றும் டெல்லி, பிற அணிகளுக்குத் தேவைப்பட்ட வீரர்களின் விலையை எகிற வைத்து குறும்புத்தனம் செய்து கொண்டிருந்த ராஜஸ்தான், இருக்கிற இடம் தெரியாமல் இருந்து விட்டுப் போய் விடலாம் என அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆர்சிபி, மாசக் கடைசியில் கைகளைக் கட்டிப் போட்டுக் கொள்ளும் நடுத்தரவர்க்கக் குடும்பத் தலைவியாக பெரும்பாலும் விண்டோ ஷாப்பிங் மட்டுமே செய்து கொண்டிருந்த மும்பை மற்றும் சிஎஸ்கே என அணிகள் ஒவ்வொன்றின் வியூகங்களும் வெவ்வேறாக இருந்தன.

இதில் சரியான தேர்வுகள் யார் யார், அணிகள் யோசிக்காமல் கைகளைச் சுட்டுக் கொண்டிருக்கும் தேர்வுகள் எது எது, எந்த வீரர்கள் விலைக்குப் போகாமல் வெறுங்கையுடன் திரும்பி இருக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பார்வை இதோ.

சபாஷ் சரியான தேர்வுகள்:

* டிரேடிங் மூலமாக பார்சல் செய்யப்பட்ட பெஹ்ரென்டார்ஃபுக்கு பதிலாக ஒரு மாற்றுவீரராகவும், ஹாசில்வுட்டுக்கான பேக்கப்பாகவும் ரீஸ் டாப்ளேயை ஆர்சிபி வெறும் 1.90 கோடிக்கு எடுத்துள்ளது. நியூபால் மற்றும் டெத் பௌலிங் என இரண்டு நிலையிலுமே பந்துவீசுவது அவரது சிறப்பம்சம். அதேபோல், டி20களில் 154.39 என்னும் வில் ஜாக்ஸின் ஸ்ட்ரைக்ரேட் அவரது தேர்வையும் நியாயப்படுத்துகின்றது. ஒரு இந்திய ஆல்ரவுண்டர் அணிக்குள் சமநிலையைத் தருவார் என்பதால் சோனு யாதவ்வை 20 லட்சத்திற்கு வாங்கியதும் ஆர்சிபியின் ஸ்மார்ட் மூவ்தான்.

Reece Topley
Reece Topley
Surrey

* கடந்தாண்டு சன்ரைசர்ஸில் 14 கோடியாக இருந்த வில்லியம்சனின் விலை சமீபத்திய ஃபார்மால் வெறும் 2 கோடிக்கு இறங்கி, அதனை குஜராத்துக்கான ஜாக்பாட்டாக மாற்றியது. சமீபத்திய உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஸ் லிட்டிலின் தேர்வும் குஜராத்தின் கணக்கில் லாபமாகி பேக்அப் டெத் பௌலருக்கான ஆப்சனாகவும் இதை மாற்றியுள்ளது.

* அதிரடி பேட்ஸ்மேனாகவும், பேக்அப் கீப்பராகவும் பில் ஷால்ட் 2 கோடிக்கு டெல்லியால் வாங்கப்பட்டார். அதேபோல் இரண்டாவது ரவுண்டில்தான் வாங்கப்பட்டார் என்றாலும் ராஜஸ்தானுக்கும் டெல்லிக்குமான நேரடி மோதலில் 4.60 கோடிக்கு ரிலே ரோசோவுக்கான ஏலத்தொகை எகிறி அவரது மதிப்பினைக் கூட்டியது.

* ஏற்கெனவே வலுவாயுள்ள தங்களது வேகப்பந்து வீச்சை கூராக்கும் முயற்சியாக ஜே ரிச்சர்ட்ஸன் மும்பையால் எடுக்கப்பட்டதும் ஆல்ரவுண்டர் என்னும் வகையில் டேனியல் சாம்ஸ் லக்னோவால் வாங்கப்பட்டதும் சரியானதே. பேக் அப் ஸ்பின்னராக பியூஷ் சாவ்லா எடுக்கப்பட்டதும் 50 லட்சத்திற்கு மதிப்பூட்டுவதுதான்.

Mayank Agarwal
Mayank Agarwal
IPL

* சிறந்த ஓப்பனராகச் செயலாற்றக் கூடியவர் என்பதால் மயங்க் அகர்வாலுக்கு அடிப்படைத் தொகையிலிருந்து 8 மடங்குக்கும் அதிகமாக செலவழிக்க சன்ரைசர்ஸ் தயாராக இருந்தது. லெக் ஸ்பின்னரான ஆதில் ரஷித்தும் சன்ரைசர்ஸுக்கு வலுவூட்டுகிறார். உச்சகட்டமாக, பாகிஸ்தான் தொடரில் ஹாட்ரிக் சதமடித்த ஹாரி ப்ரூக்கின் தேர்வுதான் எல்லா அணிகளையும் இக்கட்டுக்கு உள்ளாக்குவதற்கான கோல்டன் டிக்கெட் என்பதை அணிகள் உணர்ந்திருந்தன. அதனால்தான் இங்கிலாந்து வீரர்கள் என்றாலே தனதாக்க அலைபாயும் ராஜஸ்தானுடன் போரிட்டு, 13.25 கோடியை அள்ளித் தந்து ப்ரூக்கை தங்கள் கூடாரத்துக்குள் சன்ரைசர்ஸ் கொண்டு வந்திருந்தது.

* சிஎஸ்கேயுடன் நேருக்கு நேர் மோதி அவர்களது முன்னாள் வீரரான ஜெகதீசனை 90 லட்சத்திற்கு கேகேஆர் எடுத்தது. லிட்டன் தாஸையோ அடிப்படைத் தொகையான ஐம்பது இலட்சத்திற்கே இரண்டாவது சுற்றில் வாங்கினர். ஓப்பனிங் ஸ்லாட் மட்டுமல்ல இருவருமே விக்கெட் கீப்பிங்கும் செய்வார்கள் என்பது அவர்களுக்கான மதிப்பீட்டை மேலும் ஓங்கச் செய்கிறது.

Jason Holder
Jason Holder
AP

* ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டர் எந்த அணிக்குமே பெரும்சொத்துதான். சிஎஸ்கே அதனால்தான் அவரைக் கைப்பற்ற போராடியது. இருப்பினும் ராஜஸ்தான் 5.75 கோடி மட்டுமே கொடுத்து அவரை வாங்கியது. குறைந்த கையிருப்பே இருந்ததால் பல தருணங்களில் சிஎஸ்கே அமைதியாக இருக்க வேண்டிய சூழலைச் சந்திக்க நேர்ந்தது. ராஜஸ்தான் இரண்டாவது சுற்றில் அடித்த இன்னொரு ஜாக்பாட் வெறும் 1.5 கோடியில் கிடைத்த ஆடம் ஜம்பாவும், 1 கோடியில் கிடைத்த ஜோ ரூட்டும். டி20-ல் ரூட் பெரிதாக மிளிர்ந்ததில்லை என்றாலும், அந்த விலையில் அவரும் பெரும் வரம்தான். மேலும் சஹால், அஷ்வினால் பலமாக இருந்த அவர்களது சுழல்பந்து படை இவ்விருவரோடு, முருகன் அஷ்வினும் இணைய இன்னமும் வலுப்பெற்றுள்ளது. இதையும் தாண்டி 50 லட்சத்திற்கு வாங்கப்பட்ட டோனவன் ஃபெரைராதான் மிக முக்கியமான பர்சேஸ். டி20-ல் 360°-ல் பந்துகளைப் பறக்கவிடும் அசாத்திய வீரர். 153.6 ஸ்ட்ரைக்ரேட்டோடு விக்கெட் கீப்பிங் ஆப்சனும் அவரை மேலும் சிறப்பாக்குகிறது.

* மொத்த ஏல அரங்கையே அதிரவைத்தது சாம் கரணுக்கான விலை.

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் 18.50 என்னும் அதிகபட்ச தொகை கொடுத்து அவர் பஞ்சாப்பால் எடுக்கப்பட்டார். சற்றே அதிகமென்றாலும் இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் ஆட்டநாயகன் அவர் என்பதுவும் சமீபகாலத்தில் உலகின் மிகச்சிறந்த டி20 ஆல்ரவுண்டராக அவர் வலம் வருகிறார் என்பதுவும் அதனை மறக்கடிக்கிறது.
Sam Curran
Sam Curran
ICC

பர்ஸில் இருந்ததில் பெரும்பாலான தொகையை இதற்கே செலவழித்த பஞ்சாப், ஆல்ரவுண்டரான சிக்கந்தர் ரசாவை 50 லட்சத்திற்கு வாங்கியது அவர்களது அதிர்ஷ்டம். முன்னதில் விட்டதை இதில் ஈடுகட்டியது பஞ்சாப்.

* பெரிய பர்ஸ்களை சுமந்த பஞ்சாப்பும், சன்ரைசர்ஸும் முறையே சாம் கரணையும், ஹாரி ப்ரூக்கையும் தைரியமாக வாங்கினர் என்றால், வெறும் 20.45 கோடியில் தொடங்கிய சிஎஸ்கேவும் 16.25 கோடி கொடுத்து மிகத் துணிச்சலுடன் பென் ஸ்டோக்ஸை எடுத்தது. ஆல்ரவுண்டராக மட்டுமல்ல தோனிக்குப் பின்பாக அணியை வழிநடத்தக்கூடியவர் என்பதையும் மனதில் நிறுத்தி இந்த முடிவை சிஎஸ்கே எடுத்திருக்கலாம். புனே அணிக்காக ஒன்றாக ஆடிய தோனி, ஸ்டோக்ஸ், ரஹானேவின் ரீ யூனியனாக இது மாறியுள்ளது.
Ben Stokes
Ben Stokes
AP
* க்ரீன் - பேட்டிங் ஆல்ரவுண்டர், அதிலும் வேகப்பந்து வீச்சையும் சுழல் பந்து வீச்சையும் சமமாக விளாசுபவர், ஏழாம் இடத்தில் இறங்கி ஃபினிஷிங் ரோலை கனகச்சிதமாக செய்யக் கூடியவர், பந்து வீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர். இதோடு இந்தாண்டு 8 போட்டிகளில் 173.8 ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்களைக் குவித்திருப்பதும் இந்தியாவின் தொடரில் கோலோச்சியிருப்பதும் க்ரீனை 17.5 கோடி கொடுத்து மும்பையை வாங்க வைத்தது.

இஷானுடன் ஓப்பனிங் இறக்கினால் மட்டுமே அவருக்காக செலவழித்த பணத்துக்கான பெர்ஃபார்மன்ஸை சற்றேனும் அறுவடை செய்யலாம்.

Pooran
Pooran
Windows Cricket

* கே.எல்.ராகுலுக்கு அடுத்தபடியாக லக்னோ அணியில் தற்சமயம் அதிகமான தொகை கொடுத்து வாங்கப்பட்டிருப்பவர் பூரன். சமீபத்திய ஐபிஎல்களிலும் அவர் ஆடிய விதத்தையும் வைத்துப் பார்த்தால் நிலைப்புத்தனைமை நிலையானதாக இல்லாததைக் காணலாம். ஃபினிஷர் ரோலில், சரியாக ஃபிட் ஆவார் என லக்னோ கூறியிருப்பினும், ஒவ்வொரு முறையும் அவர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை அவர் முழுவதுமாக நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை நிலை. அந்த வகையில் 16 கோடியை லக்னோ போன்ற ஒரு அணி அவர் மீது நம்பி கட்டியிருப்பது சற்றே ஆச்சரியமளிக்கிறது. டீ காக் ஏற்கனவே கீப்பராக இருக்கும்பட்சத்தில் பெரிய விலை கொடுத்து நாங்களும் ஒருவரை வாங்கினோம் என்பதற்காக மட்டுமே அவரை வாங்கியது போலவே தோற்றமளிக்கிறது.

* பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பர் என்ற அடிப்படையில் கிளாஸனுக்கு சன்ரைசர்ஸ் 5.25 கோடியை முதலீடு செய்துள்ளது. ஒரு கோடி அடிப்படைத் தொகையில் ஆரம்பித்த ஏலம், சன்ரைரைசர்ஸ் மற்றும் டெல்லியின் விட்டுத் தராத மோதலால்தான் எகிறியது. இல்லையெனில் அடிப்படைத் தொகைக்கே அவர் சன்ரைசர்ஸுக்குக் கிடைத்திருப்பார்.

தேறத் தவறிய தேர்வர்கள்:

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சில வீரர்கள் இந்த ஏலத்தில் தேறவில்லை, விற்காத வீரர்களாக வெளியேறினர். வான்டர் டசன், சந்தீப் ஷர்மா, சஞ்சய் யாதவ், டேவிட் மலான், ப்ளெஸ்ஸிங் முஜாரபாணி, ல்யூக் உட் உள்ளிட்ட வீரர்களை வாங்க எந்த அணியுமே முன்வரவில்லை. ஆகமொத்தம் அணிகளின் பெரும்பாலான பர்சேஸுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல சரியாகவே இருந்தன. ஐந்து வீரர்களுக்கு அள்ளிக் கொடுத்திருந்தாலும் மற்ற வீரர்களின் விஷயத்தில் சிக்கன நடவடிக்கையோடு சற்றே கறாராகவே நடந்திருந்தனர். பெரியளவிலான சொதப்பல்கள் என்பது இல்லை. இருப்பினும் இது அணிகளைக் குறையற்ற அணிகளாக மாற்றி விடவில்லை. இன்னமும் பேப்பர் அளவில் பார்த்தால் இங்கொன்றும் அங்கொன்றுமாக குறைபாடுகள் தென்படவே செய்கின்றன. அதனை ஈடுகட்டும் வகையில் மற்றவர்கள் செயல்படுவார்களா அணிகள் தங்களது படையை எப்படித் தயார் செய்து வெற்றிக்கான வியூகங்களை வகுக்க இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

IPL Auction 2023
IPL Auction 2023
சதுரங்கம் ஆடுவதற்கான காய்களை ஒன்று போல் இல்லாமல் வெவ்வேறு விதமானதாக அணிகள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளன. எனினும் விதிகள் ஒன்றே என்பதால் அதை எப்படி நகர்த்தி எதிரணிகளை வீழ்த்தப் போகிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே.