Published:Updated:

கேள்விக்குறியாகும் 2020 ஐ.பி.எல்... இனி தோனியின் எதிர்காலம் என்ன? #Dhoni #T20Worldcup

தோனி
தோனி

கோலி கையில் உலகக்கோப்பை... அதற்குக் காரணம் தோனி எனப் பல ஸ்டேட்டஸ்களோடு தயாராக இருந்த தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது கொரோனா வைரஸ்.

2020 ஐபிஎல்-ல் அதிரடி ஆட்டம் ஆடுகிறார்... சென்னைக்கு கோப்பையை வாங்கித்தருகிறார்... அப்படியே செப்டம்பரில் 2020 உலகக்கோப்பையில் விளையாடுகிறார்... கோலி கையில் உலகக்கோப்பை... அதற்குக் காரணம் தோனி எனப் பல ஸ்டேட்டஸ்களோடு தயாராக இருந்த தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது கொரோனா வைரஸ்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய அரையிறுதிப்போட்டிதான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டி. உலகக்கோப்பையோடு ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்பாக்கப்பட்ட தோனி அப்படி ஓய்வுபெறவில்லை. அதேசமயம் தேர்வுக்குழுவினரும் அவரை இந்த ஓர் ஆண்டில் எந்தத் தொடரிலும் அவரை அணியில் சேர்க்கவில்லை. இந்திய அணி வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் இருந்தும் தோனியின் பெயரை நீக்கிவிட்டது பிசிசிஐ. ஆனால், ஓய்வும்பெறாமல், அணியிலும் இல்லாமல் மர்மமாகவே இருந்த தோனியின் பயணத்துக்கு விடை சொல்லும் தொடராக ஐபிஎல் 2020 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தோனி
தோனி

ஐபிஎல் 2020-க்காக மார்ச் முதல் வாரத்திலேயே பயிற்சிகள் எடுக்க சென்னை வந்துவிட்டார் தோனி. ஆனால், கொரோனாவின் தாக்கம் அனைத்துத் திட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டது. ஏப்ரல் 15 வரை ஐபிஎல் 2020 தள்ளிப்போடப்பட்டிருந்தாலும் இந்தத் தொடர் இந்த ஆண்டு நடக்குமா என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. கூடவே தோனியின் கம்பேக்கும்!

கடந்த டிசம்பர் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனியிடம் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேட்டதற்கு, ``எதுவானாலும் ஜனவரி மாதத்துக்குப் பிறகு பேசுவோம்'' எனக் கூறியிருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரியும் ``ஐபிஎல்-ல் தோனியின் ஃபார்மைப் பொறுத்து அவரின் உலகக்கோப்பை தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும்'' என கூறியிருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் முழுவதுமாக தடைபடுமாயின் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்கிற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

தோனியின் கரியர் கிராஃபை எடுத்துப் பார்த்தால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த அளவுக்கான இடைவேளை எங்குமே ஏற்பட்டதில்லை. காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்திருக்கிறாரே தவிர ஃபார்ம் அவுட் காரணமாக எங்கேயுமே அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதில்லை. இப்போதும் தோனியே விலகியிருந்தாலும் பிசிசிஐ-க்கும் தோனிக்கும் திரைமறைவில் என்ன பேச்சுவார்த்தைகள் நடக்கிறது என்பது மர்மமாகவே இருக்கிறது.

அணியைப் பொறுத்தவரையில் நீண்ட காலமாக இருந்த நம்பர் 4 பிரச்னையை ஷ்ரேயாஸ் ஐயர் தீர்த்து வைத்தார். ஆனால், அடுத்த தோனியாக ரிஷப் பன்ட் உருவாகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபினிஷர் ரோலை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆடிய மேட்ச்களில் சொதப்பியெடுத்திருக்கிறார் பன்ட். ராகுலை அந்த இடத்தில் பயன்படுத்தினாலும் ராகுலுக்கென்று நிலையாக ஓர் இடம் தேவைப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா முரட்டு ஃபார்மிற்கு வந்திருப்பதால் ஹர்திக் பாண்டியா இந்த இடத்தில் ட்ரம்ப் கார்டாக இருப்பார். இந்த நிலையில்தான் அக்டோபர்-நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பன்ட்டா, தோனியா என்ற நிலை உண்டாகியுள்ளது. முன்னதாக ரவிசாஸ்திரி பேசியதை வைத்துப்பார்த்தால் ஐபிஎல் விளையாடாவிட்டால் தோனியின் தேர்வு என்பது கேள்விக்குறிதான். அப்படியானால் தோனியின் சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வருகிறது என்றுதான் அர்த்தம்.

தோனி
தோனி
ICC

ஆனால், தோனி விஷயத்தில் இன்னும் சில காரணிகளைச் சேர்த்தே பார்க்க வேண்டும். நியூசிலாந்து தொடரின்போது சஹால், யூடியூப் சேனலுக்காக இந்திய அணியினர் பயணம் செய்யும் பேருந்தில் சஹால் ஒரு வீடியோவை எடுத்திருப்பார். அதில் தோனியின் சீட்டைக் காண்பித்து இதில் யாரும் அமருவதில்லை காலியாகவே வைத்துள்ளோம் எனக் குறிப்பிட்டிருப்பார். உண்மையில் சில விஷயங்களை வைத்துப் பார்த்தால் பேருந்தில் மட்டுமல்ல இந்திய அணியிலும் தோனிக்கான இடம் காலியாக இருப்பதாகவே தோன்றுகிறது.

இந்திய அணி 2013-க்குப் பிறகு எந்த ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. அதுவும் கோலியின் தலைமையில் முக்கியக்கட்டங்களில் எல்லாம் சொதப்பியே வருகிறது. கோலியின் அந்த ஆக்ரோஷமான மனநிலையும் பல நேரங்களில் இந்தியாவுக்கு நெகட்டிவாகவே அமைந்துள்ளது. இதை நடந்து முடிந்த நியூசிலாந்து சீரிஸில் கூட பல இடங்களில் பார்த்திருப்போம். அணியில் தோனி இடம்பெறுவதென்பது அணிக்குள் அவரைப்போன்றே ஒரு கூலான மனநிலையை கொண்டு வர உதவியாக இருக்கும். தோனி பேட்டிங்கில் எந்த அளவுக்கு அதிரடியாக இருப்பார் என்பது கேள்விக்குறி என்றாலும் ஒரு விக்கெட் கீப்பராகவும் கேப்டன்ஸியில் கோலிக்கு உதவியாகவும் சமரசமின்றி செயல்படுவார். பன்ட்-க்கு வயதிருப்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கொடுத்துக்கொள்ளலாம். பன்ட்-க்குப் பதில் தோனி எடுக்கப்படும் பட்சத்தில் 2007 டி20 உலகக்கோப்பை வெற்றியோடு இந்திய கிரிக்கெட்டில் தனது சாதனை அத்தியாயங்களை எழுதத்தொடங்கிய தோனி அதே டி20 தொடரில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம்.

தோனி
தோனி

இந்த ஓய்வு விஷயத்தில் தோனி என்ன நினைக்கிறார் என்பதும் முக்கியம். 2014-ல் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாகட்டும், அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை துறந்ததாகட்டும் எந்த முடிவையுமே தோனி எவ்வித முன்னறிவிப்பும் சர்ச்சைகளுமின்றி ஒரு மாலை வேளையில் ஜஸ்ட் லைக் தட் அறிவித்துவிட்டுப் போனார். அதற்காக அவர் எந்தவித பிரிவு உபசார விழாக்களையும் எதிர்பார்த்ததில்லை.

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் இதே போன்று சீனியர் வீரர்களான ஷேவாக், கம்பீர், ஹர்பஜன் போன்றவர்களின் தேர்வில் எப்படிச் செயல்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒரு தலைமுறைக்கு ஒரு தலைவன்தான் கிடைப்பான். ஆம், சச்சினுக்கும் கோலிக்கும் இடைப்பட்ட தலைமுறையின் கிரிக்கெட் உலகத் தலைவன் தோனி. ஒரு வீரராக மட்டுமில்லாமல் இந்திய அணியின் கேப்டனாக இருந்து சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து இந்தியாவுக்கு கனவாக இருந்த பல அசாத்திய வெற்றிகளைச் சாத்தியப்படுத்தியவர் தோனி.

``10 ரன் அடிக்கிறோமா... 100 அடிக்கிறோமா என்பது முக்கியமில்லை. அணிக்குத் தேவையான ரன்களை அடிக்கிறோமா என்பதுதான் முக்கியம்'' என தோனி பலமுறை கூறியிருக்கிறார். இப்போது அணியின் எதிர்காலத்துக்குத் தேவையான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தோனி இருக்கிறார். வழக்கம்போல தனது ஸ்டைலில் கூலாக ஒரு முடிவை அறிவிப்பார் தோனி. அது ரசிகர்களுக்கு சந்தோஷமான முடிவோ வருத்தமான முடிவோ எதுவானாலும் தோனியை பொறுத்தவரையில் இந்திய ஜெர்சியின் எதிர்காலத்துக்காக தோனி அடிக்கப்போகும் மற்றுமொரு வின்னிங் ஷாட்டாகத்தான் அது இருக்கும்.

தோனி
தோனி

வீ ஆர் வெயிட்டிங் தோனி!

அடுத்த கட்டுரைக்கு