கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 98 ரன்களை அடித்திருந்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை அடித்திருந்தார். இதனால் ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது.
ஆட்டநாயகன் விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷஸ்வி பேசியவை இங்கே,

'இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியது நல்ல உணர்வை கொடுக்கிறது. நான் நினைத்தது எல்லாம் நடந்துவிட்டது என நினைக்கவில்லை. முன் தயாரிப்புகளிலும் வழிமுறைகளிலுமே அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். அவற்றில் நான் சரியாக இருந்தால் தேவையான ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும். மேலும், எனக்கு என் மீதும் என்னுடைய ஆட்டத்தின் மீதும் அதிக தன்னம்பிக்கை இருக்கிறது. அணி வெற்றி பெற்றதில்தான் எனக்கு அதிக மகிழ்ச்சி. போட்டியை கடைசி வரை நின்று முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது எப்போதுமே என்னுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளிலும் அதையே செய்ய விரும்புகிறேன். அணியின் வெற்றிக்காக அடித்த அந்த வின்னிங் ஷாட் தான் என்னுடைய ஃபேவ்ரட் ஷாட்.

சதத்தை பற்றி நான் நினைக்கவே இல்லை. ரன்ரேட்டை பற்றிதான் யோசித்தேன். நாங்கள் வேகமாக ஆடி வென்றால் நெட் ரன்ரேட் அதிகரிக்கும் என்பதே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

பட்லரின் ரன் அவுட் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதில்லை. கிரிக்கெட்டில் இதெல்லாம் நடக்கதான் செய்யும். மேலும், அந்த ரன் அவுட் எனக்கு பெரிய பொறுப்பை கொடுத்தது. சஞ்சு சாம்சனும் 'கவலைப்படாமல் உன்னுடைய ஆட்டத்தை ஆடு' என ஊக்கப்படுத்தினார்.' என்றார் ஜெய்ஸ்வால்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் க்ரீம் ஸ்மித்தும் ஜெய்ஸ்வாலிடம் தனியாக பேட்டி கண்டிருந்தார் அப்போது பேசிய ஜெய்ஸ்வால், 'முதல் ஓவருக்காக பெரிதாக திட்டமிடவில்லை. நிதிஷ் ராணா எனக்கு எந்த லைன் & லெந்த்தில் வீசுவார் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என்னால் எளிதாக ஆடி முடிந்தது. இன்னிங்ஸை முடித்துவிட்டு ஹெல்மெட்டை கழட்டும் போது பெருமிதமாக உணர்ந்தேன்.' என்றார்.
இந்திய அணிக்கான அழைப்புக்காக காத்திருக்கிறீர்களா? என்கிற கேள்வி ஒன்றிற்கு,
'நான் என்ன செய்கிறேனோ அதை சரியாக செய்யவே நினைக்கிறேன். என்னுடைய செயல்பாடுகளில் நான் கவனம் செலுத்தினால் அதற்கேற்ப நல்ல முடிவும் கிடைக்கும் என நம்புகிறேன்.

கடவுள் எனக்கான திட்டங்களை வகுத்து வைத்திருப்பார். எனக்கும் சிறுவயதிலிருந்தே இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பதுதான் நோக்கம்.' யாஷஸ்வி பதிலளித்திருந்தார்