Published:Updated:

IPL 2023: `ஸ்ட்ரைக்ரேட் ஓவர்ரேட்டட்ங்க...'- இந்த ராகுல் வகையறாக்கள் எப்போது அப்டேட் ஆவார்கள்?

Rahul

10 பந்துகள் பிடித்து செட் ஆகிவிட்டுதான் அடிப்பேன் என்பதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத்தான் சரிப்பட்டு வரும். டி20-ஐ பொறுத்தவரை இறங்கும் அத்தனை வீரர்களுமே செட்டான வீரர்களாகத்தான் இருக்க வேண்டும்.

Published:Updated:

IPL 2023: `ஸ்ட்ரைக்ரேட் ஓவர்ரேட்டட்ங்க...'- இந்த ராகுல் வகையறாக்கள் எப்போது அப்டேட் ஆவார்கள்?

10 பந்துகள் பிடித்து செட் ஆகிவிட்டுதான் அடிப்பேன் என்பதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத்தான் சரிப்பட்டு வரும். டி20-ஐ பொறுத்தவரை இறங்கும் அத்தனை வீரர்களுமே செட்டான வீரர்களாகத்தான் இருக்க வேண்டும்.

Rahul
ஒரு வங்கிக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருப்பவர் கணினியை உபயோகப்படுத்தாமல் இன்னமும் பழைய மாதிரி காகிதங்களை தடவிக் கொண்டிருந்தால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? அல்லது செல்போனுக்கு அப்டேட் ஆகாமல் இன்னமும் ஒருவர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது சில முன்னணி வீரர்களின் டி20 பேட்டிங்.

அழிந்து வழக்கொழிந்து போன பேட்டிங் முறைகளை எல்லாம் வைத்துக்கொண்டு தங்கள் அணியின் வெற்றியைக் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். பாரம்பரிய உணவகம் என்று போர்டு வைத்துவிட்டு, மிகச் சாதாரண உணவை வழங்கி ஆயிரங்களில் கொள்ளை அடிக்கும் உணவகங்களுக்குச் சற்றும் சளைத்தது இல்லை இந்த ஆட்டமுறை.‌

LSG
LSG

முதலில் டி20 போட்டியில் வெறும் 120 பந்துகள்தான் என்ற எளிய விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.‌ 6 பேட்டிங் வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் ஆளுக்கு‌ 20 பந்துகள்தான் வரும். இந்த 20 பந்துகளில் அதிகமாக எவ்வளவு ரன்களை எடுக்க முடியுமோ அவ்வளவு எடுப்பதுதான் டி20 கிரிக்கெட்டின் சூத்திரம். டெஸ்ட் கிரிக்கெட் போல இங்கு 10 விக்கெட்டுகள் விழும் வரை விளையாட முடியாது. ஆகையால் விக்கெட்டைப் பாதுகாத்து ஒன்றும் பயனில்லை. பவர்பிளே ஓவர்களில் வரும் வீரர்கள், வெளியே இரண்டே இரண்டு ஃபீல்டர்கள்தான் என்பதால் முடிந்த அளவு ரன்களை எடுக்க வேண்டும். குறைந்தபட்சமே 50 அல்ல 60 ரன்கள் எடுத்தால்தான் அது பேட்டிங் அணிக்கு வெற்றிகரமான பவர்பிளே.

10 பந்துகள் பிடித்து செட் ஆகிவிட்டுதான் அடிப்பேன் என்பதெல்லாம் ஒருநாள் கிரிக்கெட்டுக்குத்தான் சரிப்பட்டு வரும். டி20-ஐ பொறுத்தவரை இறங்கும் அத்தனை வீரர்களுமே செட்டான வீரர்களாகத்தான் இருக்க வேண்டும். இருக்கும் 120 பந்துகளில்‌ ஆளுக்கு 10 பந்துகளை செட்டாவதற்கு மட்டுமே பிடித்தால் அணி என்னவாகும்? அப்படிச் செய்வது பின் வரும் வீரர்களின் வாய்ப்புகளைக் குறைத்து பிரஷரைக் கூட்டும் அல்லவா? மேலும் விக்கெட் விழாமல் இருக்க‌த்தான் பொறுமையாக ஆடுகிறார்கள் என்ற வாதம் எல்லாம் டி20 கிரிக்கெட்டில் பொருந்தாது. 10 ரன்களில் நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டால் இப்படிச் சொல்லலாம். வெறும் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகளை இழந்த பின்பு இப்படி விளையாடுவது எல்லாம் ஸ்லோ பாய்சனாக மாறி அணியை சவக்குழிக்கு‌த்தான் அழைத்துச் செல்லும்.‌ எட்டு அதிரடியாக ரன் சேர்க்கும் வீரர்களை கண்டறிய முடியவில்லை என்றால் அது அந்த அணி நிர்வாகத்தின் தவறு மட்டுமே.‌

Virat Kohli
Virat Kohli

நேற்றைய ஆட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வேகப்பந்து வீச்சாளர்களை வெறிகொண்டு தாக்கிய விராட் கோலி, ஸ்பின்னர்கள் வந்ததும் பெட்டி பாம்பாக அடங்கிப் போனார்.

25 பந்துகளில் 42 ரன்கள் என்று இருந்த கோலி அடுத்த 8 ரன்களை எடுப்பதற்கு 10 பந்துகள் எடுத்துக் கொண்டார். கடைசி 20 ரன்கள் எடுப்பதற்கு அவருக்கு 20 பந்துகள் தேவைப்பட்டன. சின்னசாமி மாதிரி சிறிய மைதானங்களில் இது எவ்வளவு பெரிய பின்னடைவை அணிக்குக் கொடுக்கும்?

டூ ப்ளெஸ்ஸியும் முதல் 30 பந்துகளில் 33 ரன்கள்தான் எடுத்திருந்தார். ஒருவர் இது போன்ற அணுகுமுறையில் ஆடினாலே அணி கரையறாது என்று இருக்கும் இந்தக் காலத்தில் இரண்டு பேர் இப்படி ஆடுவது எல்லாம் பெங்களூரு அணிக்கே உரித்தான செயல். டூ ப்ளெஸ்ஸி நேற்று கடைசி 13 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். ஆனால் இது எல்லா நாளும் முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. சந்திக்கும் முதல் 20 பந்துகளிலே ரன்களை அதிகப்படுத்த முயற்சி செய்வதுதான் தற்கால கிரிக்கெட்டுக்கு அழகு.

Faf du Plessis
Faf du Plessis
நேற்று நடந்த மற்றொரு ஆதி கால இன்னிங்ஸ் கே.எல்.ராகுல் விளையாடியது. எவ்வளவு ஆதிகாலம் என்றால் கவாஸ்கரே பார்த்து காண்டாகும் அளவிற்கானது. 213 ரன்களை துரத்தும்போது பவர்பிளே ஓவர்களில் இறங்கி 20 பந்துகளில் 18 ரன்கள் அடிப்பது எல்லாம் சொந்த அணியைத்தானே குழியில் தள்ளுவதற்குச் சமமாகும். அதுவும் ஒரு பக்கம் ஸ்டாய்னிஸ் உயிரைக் கொடுத்து சிக்ஸர்களாக அடித்துக் கொண்டிருக்க "ஸ்டிரைக் ரேட் எல்லாம் முக்கியம் இல்ல பிரதர்" என ஜாலியாக இருந்தார் ராகுல். விஷம் என்று தெரிந்தும் விரும்பி உண்ட போதி தர்மருக்கு இணையான செய்கை நேற்று ராகுலுடையது.

எப்படியோ பூரனின் பவராலும் பெங்களூர் பந்துவீச்சாளர்களின் தவறாலும் லக்னோ தப்பிப் பிழைத்தது. ஆட்டம் முடிந்து ராகுல் "மூன்று விக்கெட்களை இழந்துவிட்டோம். நான் கடைசிவரை களத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பினேன்" என்று கூறினார். பழைய பெங்களூர் பாசத்துக்காக கூறினாரா அல்லது 30 ஓவர்கள் சென்ற பிறகு பந்து பழையதாகும் என்ற நம்பிக்கையில் கூறினாரா என்பது அவருக்கே வெளிச்சம். ஆவேஷ் கான் ஓடிய ஒரு ரன்னுக்கே அவ்வளவு ஆவேசப்பட்ட கம்பீர், ராகுல் உள்ளே வந்தவுடன் ஆங்கில கேங்ஸ்டர் படம் போல வார்த்தை அர்ச்சனைகள் செய்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

Rohit Sharma
Rohit Sharma

இதேபோலத்தான் இந்திய கேப்டன் ஹிட்மேன், முதல் போட்டியில் இதே சின்னசாமி மைதானத்தில் பத்து பந்துகளுக்கு ஒரு ரன் எடுத்தார் என்பதை மறந்து விடக்கூடாது. ரோஹித், கோலி, ராகுல் - அணியின் டாப் 3 வீரர்களும் இப்படி பெங்களூர் டிராஃபிக் போல மெதுவாக ஆடினால் அடுத்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி கூட வாய்க்காது. ஆப்கானிஸ்தான் கூட‌ அசால்ட்டாக இந்தியாவை ஆஃப் செய்து விடும்.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், இரண்டு விக்கெட்டுகள் இழந்த போதும் நசீம் ஷா பீரங்கி குண்டுகளாக பந்துகளை எறிந்த போதும் அசராமல் கீப்பர் தலைக்கு மேல் ஒரு சிக்ஸர் அடித்தார் பட்லர். ஆனால் இந்தியாவோ அரையிறுதியில் மிக கூலாக முதல் 6 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்தது. எப்போது சிலிண்டர் விலை போல இந்தியாவின் ரன் ரேட் கடகடவென ஏறுகிறதோ அப்போதுதான் விமோசனம்!