Published:Updated:

RCB vs LSG: கோலியும் டூ ப்ளஸ்ஸியும் அடிக்கத் தவறிய 25 ரன்கள்தான் பெங்களூருவின் தோல்விக்குக் காரணமா?

Faf du Plessis - Virat Kohli

பலத்த அடிகள் ஒன்றும் ஆர்சிபிக்குப் புதிதல்ல எனினும் அடுத்தடுத்த இரு இடிகள் அணியை மொத்தமாக உருக்குலைத்துள்ளன. இதிலிருந்து அவர்கள் மீள்வார்களா?

Published:Updated:

RCB vs LSG: கோலியும் டூ ப்ளஸ்ஸியும் அடிக்கத் தவறிய 25 ரன்கள்தான் பெங்களூருவின் தோல்விக்குக் காரணமா?

பலத்த அடிகள் ஒன்றும் ஆர்சிபிக்குப் புதிதல்ல எனினும் அடுத்தடுத்த இரு இடிகள் அணியை மொத்தமாக உருக்குலைத்துள்ளன. இதிலிருந்து அவர்கள் மீள்வார்களா?

Faf du Plessis - Virat Kohli
பெங்களூரு - லக்னோவுக்கு இடையேயான போட்டியில் இருபக்கமுமே கேப்டன்ஷி கோளாறுகள், பௌலர்களின் தடுமாற்றங்கள், பேட்ஸ்மேன்களின் தவறுகள், ஃபீல்டிங் குளறுபடிகள் எனப் பல தளங்களிலும் விவாதத்திற்கு உரிய விஷயங்கள் விரவியிருந்தன.

ஆர்சிபியைப் பொறுத்தவரை இரு பாதிகளிலுமே மத்திய ஓவர்களில் காட்டிய மெத்தனப் போக்குதான் தோல்விக்குத் தகுதியானவர்களாக அவர்களை மாற்றியது. ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் பலவீனம் ஸ்பின் பந்துகள் என்றால் லக்னோவுக்கு அதுவே பலம். கேகேஆர் மற்றும் சன்ரைசர்ஸுக்கு எதிராக அவரவர் ஆடிய முந்தைய போட்டியின் முடிவுகளே அதற்கு ஆதாரம். எனவே இருமுனை ஸ்பின் தாக்குதல் வரும் முன்பே ரன்களை அடித்து ஏற்ற வேண்டுமென்ற கோலியின் எண்ணமெல்லாம் சரிதான். அதுதான் பவர்பிளேவுக்குள் அவர் சந்தித்த 25 பந்துகளில் 42 ரன்களை விளாச வைத்தது. 2016-ம் ஆண்டின் ப்ரைம் டைம் கோலி எல்லாம் அவ்வப்போது நினைவுக்கு வந்து கொண்டே இருந்தார். மார்க் உட்டின் பந்துகள் பெரும் சேதாரத்தை சந்தித்ததுகூட கோலிக்கு வீசப்பட்ட போது மட்டும்தான்.

Kohli
Kohli

ஃபுல் லென்த் டெலிவரியை பவுண்டரியாக கோலி மாற்றிய பின்பும் யார்க்கருக்கோ குட் லென்துக்கோ மாறாமல் ஷார்ட் ஆஃப் லெந்தில் மார்க் உட் வீச அதனை டீப் மிட்விக்கெட்டிற்கு மேலே கோலி அனுப்பிய ஷாட் எல்லாம் அதிஅற்புதமானது. ஆனால் காட்டாற்றின் வேகம் காட்டிய கோலியின் ஸ்ட்ரைக்ரேட் கடலில் கலக்கப் போகும் ஆற்றைப் போல பவர்பிளே முடிந்த பிறகு அப்படியே மட்டுப்பட்டது.

கோலி ஆட்டமிழப்பதற்கு முன்னதாக அவர் சந்தித்த கடைசி 19 பந்துகளில் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். கையில் பத்து விக்கெட்டுகள் அப்படியேயிருக்க இன்னிங்ஸின் பாதி ஓவர்களைத் தாண்டிய பின்னரும் டிஃபென்சிவ் ஜோனுக்குள்ளேயே சரண் புகுந்ததுதான் மிகப்பெரிய தவறானது.

மறுபுறம் இருந்த டூ ப்ளஸ்ஸியின் ஆட்டம் கோலிக்கு அப்படியே எதிர்மாறாக இருந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டூ ப்ளஸ்ஸி தான் சந்தித்த முதல் 31 பந்துகளில் 33 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால் கோலி வெளியேறிய பின் ஆட்டத்தை முடுக்கினார். அதன்பிறகு அவர் சந்தித்த 15 பந்துகளில் 46 ரன்களைக் குவித்திருந்தார்.

இருவரும் முறையே முதலிலோ அல்லது முடிவிலோ அடித்து ஏற்றிய ரன்கள் கணக்கை நேர்செய்தாலும் முதல் 11 ஓவர்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து வீணாக்கிய 17 டாட் பால்களுமே லக்னோவின் வெற்றி வாய்ப்பை சற்றே அதிகப்படுத்தியது.

அதேசமயம் அதே 11 ஓவர்களில் 7 ஸ்பின்னர்களால் வீசப்பட்டிருந்தன. அதில் வெறும் 55 ரன்களை மட்டுமே இக்கூட்டணி எடுத்திருந்தது. ஆர்சிபியின் டாப் ஆர்டரின் ஸ்பின் பலவீனம் ஏற்கெனவே வெளிப்பட்டு அணிகள் அதனைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன என்பதற்கு இந்தப் போட்டியே சான்று. தங்கள் பங்கிற்கு ஆட்டத்தின் போக்கில் சிறு தேக்கத்தை இக்கூட்டணி உண்டாக்கிவிட்டது.

Faf du Plessis
Faf du Plessis
களத்தின் தன்மையையும் தங்களது டெத் ஓவர் பௌலிங் பரிதாபத்தையும் உணர்ந்திருந்தால் கைவசம்தான் இத்தனை விக்கெட் இருக்கிறதே என இன்னமும் சற்று முன்பாகவே ஆட்டத்தை வேகப்படுத்தி கூடுதலாக 20 - 25 ரன்கள் வருவதை உறுதி செய்திருப்பார்கள். மேக்ஸ்வெல் சத்தமேயில்லாமல் சம்ஹாரம் செய்தாலும் நடுவில் விழுந்த பள்ளம்தான் ஆர்சிபியின் புதைகுழி.

மறுபுறம் கே.எல்.ராகுலுமே கள முடிவுகளில் இடறினார். மார்க் உட் பந்தினையே பறக்கவிட்டுக் கொண்டிருந்த கோலியை வீழ்த்த இன்னமும் சற்று முன்பாகவே அமித் மிஸ்ராவைக் கொண்டு வந்திருக்கலாம். ரவி பிஷ்னாய் மற்றும் க்ருணாலின் வேகம் சற்றே அதிகமென்பதால் அதனை கோலியால் சமாளிக்க முடிந்தது. அமித் மிஸ்ராவைத் தாமதப்படுத்தாமல் முன்கூட்டியே இறக்கியிருந்தால் ஒப்பீட்டளவில் அவரது குறைந்த வேகமும் அதிக ஃப்ளைட்டும் கோலியை ஏமாற்றியிருக்க வாய்ப்புண்டு. அது மட்டுமின்றி மீதமிருந்த இரண்டு ஓவர்களையும் அமித் மிஸ்ராவை வீச வைத்திருக்கலாம். முதல் ஓவரை சிறப்பாக வீசிய உனத்கட்டின் ஓவரை அப்படியே நிறுத்தியது குற்றமென்றால் உச்சகட்ட கியரில் பயணித்துக் கொண்டிருந்த மேக்ஸ்வெல் மற்றும் டூ ப்ளஸ்ஸியைச் சந்திக்க 18-வது ஓவரில் அவரை இறக்கி அடித்துக் கொள்ளுங்கள் எனத் தாராளமாக வழியமைத்துக் கொடுத்ததுதான் ராகுல் செய்த மாபெரும் குற்றம்.

தவறுகளாலேயே பிணையப்பட்டிருந்த முதல் பாதியில் மேக்ஸ்வெல்லின் இன்னிங்ஸும், மார்க் உட்டின் ஸ்பெல்லும்தான் சற்றே ஆறுதல். 24 பந்துகளில் வந்த அரைசதம் மட்டுமல்ல ஆட்டத்தின் அணுகுமுறையையே தான் இறங்கிய நேரத்திலிருந்து மாற்றிவிட்டார் மேக்ஸ்வெல். ஆர்சிபியில் அவர் இணைந்த நாள்களில் இருந்து அவரைவிட அதிகமான ரன்களை (890) வேறு யாரும் ஆர்சிபிக்காக அடிக்கவில்லை. மறுபுறம் மார்க் உட்டோ கோலிக்கு வீசிய முதல் ஓவரில் மட்டுமே சற்றே அதிகமாக 14 ரன்களைக் கசிய விட்டிருந்தார். மற்ற அத்தனை ஓவர்களிலுமே இறுக்கிப் பிடித்த லைன் அண்ட் லெந்தோடு அவரது வேகம் அச்சுறுத்த வெறும் 8 எக்கானமியோடு முடித்திருந்தார்.

ரன்ரேட் பவர்பிளேயில் 9.33 ஆகவும், மத்திய ஓவர்களில் ரவி பிஷ்னாயின் காஸ்ட்லியான 15-வது ஓவரைக் கழித்துப் பார்த்தால் வெறும் 7.6 ஆகவும், டெத் ஓவர்களில் 15 ஆகவும் மிரட்டியது. இதிலிருந்தே எந்தளவு நடுவில் சில ரன்கள் காணாமல் களவு போயிருக்கின்றன என்பது தெளிவாகும். ஆர்சிபியின் மிடில் ஓவர் குறைபாடுகள் பேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங்கிலும் தொடர்ந்தன.

Siraj
Siraj

இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே மினி கெயிலாகப் பயமுறுத்தி வரும் மேயர்ஸை சிராஜ் டக்அவுட் ஆக்கினார். வேய்ன் பார்னெல்லின் இரட்டை விக்கெட்டோ ஏறக்குறைய ஆர்சிபி வென்று விட்ட தோற்றத்தையே உருவாக்கியது. 37/3 என்ற லக்னோவின் பவர்பிளே ஸ்கோர் ஆர்சிபியின் ஆதிக்கத்தை ஆவணப்படுத்தியது. இங்கேயும் கேஎல் ராகுல் ஆடிய விதமும் அவரது ஸ்ட்ரைக்ரேட்டும் எப்படி அவரது இடத்தை அது நியாயப்படுத்தியது என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டேதான் இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது என அமைதி காத்தாரா அல்லது யாராவது வந்து அடிக்கட்டும் எனப் பொறுமை காத்தாரா என்பதுதான் விளங்கவில்லை.

கே.எல்.ராகுலின் அகராதியில் பல ஆண்டுகளாக காணாமலே போயிருந்த அந்த இன்டென்ட் என்ற வார்த்தைக்கு ஸ்டோய்னிஸும் பூரணும் தெளிவான விளக்க உரையே எழுதிவிட்டனர். 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டுமென்ற சமயத்தில் கொஞ்சமும் சோர்ந்துவிடாமல் அடித்துக் கொண்டே இருக்க மிகப்பெரிய பவர் ஹிட்டர்கள் தேவை. இருவரிடமும், குறிப்பாக பூரணிடமிருந்து 15 பந்துகளில் வந்த அரைசதம் அவ்வளவு கொட்டித்தந்து ஏன் அவரை வாங்கினார்கள் என்பதற்கு விளக்கம் கொடுத்து கொண்டே இருந்தது.

117 ரன்களை லக்னோவின் மத்திய ஓவர்கள் மட்டுமே பார்த்திருந்தன. பவர்பிளேயில் பிடித்ததை இங்கேதான் ஆர்சிபி கோட்டைவிட்டது. அதிலும் பூரணைக் கட்டிப்போட டூ ப்ளஸ்ஸி முயற்சி மேற்கொள்ளவே இல்லை. மேக்ஸ்வெல்லைத் தயங்காமல் இறக்கியிருந்தால் சற்றே ரன்கள் கசிந்தாலும் விக்கெட்டிற்கும் வாய்ப்பு இருந்திருக்கும். 5வது விக்கெட் விழுந்தவுடன் சற்றே ஆர்சிபி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில்தான் பூரண் - பதோனி தங்களது வேரினை ஆழமாகப் பாய்ச்சினார். போதாக்குறைக்கு மொத்தமாக 9 வொய்டுகளை வீசியிருந்ததே எந்தளவிற்கு அவர்களது பந்தவீச்சு கட்டுப்பாடற்று இருந்தது என்பதை விளக்கும்.

முன்பாக ஆர்சிபியின் டெத் ஓவர் பௌலிங் பலவீனம் பலராலும் பேசப்பட்டது. ஆனால் இப்போட்டியில் ஆர்சிபி தவறியது அதில் அல்ல. இப்போட்டியில் இறுதி 5 ஓவர்களில் வெறும் 42 ரன்களை மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஈடேற முயற்சி செய்திருந்தனர். முதல் பாதியைப் போலவே நடுகல்லை உருவி எடுத்தது போல் மிடில் ஓவர்களில் ஏற்பட்ட தடுமாற்றமே இங்கேயும் பிரதிபலித்தது. 'அவ்வளவுதான் பேட்டிங் ஆட ஆளில்லை' என சற்றே மெத்தனமாக ஆர்சிபி இருந்ததுதான் தவறானது.

LSG
LSG

மாதக்கணக்கில் படிக்க கிடைத்த நாள்களை எல்லாம் வீணடித்து விட்டு பரிட்சைக்கு முன் இரவு முழுவதும் படிக்கும் மாணவன் போலவே ஆர்சிபி செயல்பட்டது. மத்திய ஓவர்களில் எல்லாம் விட்டுவிட்டு இறுதி ஓவர்களில் வந்து அழுத்தத்தை ஏற்ற முயற்சி செய்து அதிலும் தோற்றிருந்தது. இவை மட்டுமல்ல பதோனியின் ராம்ப் ஷாட், அதிலேயே ஹிட் விக்கெட், ஹர்சல் படேல் இறுதி ஓவரில் நான் ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த பிஷ்னாயை ரன் அவுட் ஆக்க முயன்றது, கடைசிப் பந்தில் தினேஷ் கார்த்திக்கின் காஸ்ட்லியான கீப்பிங் மிஸ், ஹெல்மெட்டைத் தூக்கி எறிந்த அவிஷ் கான் என பல சம்பவங்களும் நடந்தேறின.

ஆனாலும் ஆர்சிபி மூச்சு முட்டி தோற்பது மட்டும் மாறவில்லை. பட்டிதர் இல்லாத சுமையை ஆர்சிபியால் ஆங்காங்கே உணராமல் இருக்க முடியவில்லை. டாப்ஆர்டரின் ஸ்பின் பலவீனத்தையும், டெத்ஓவர் பௌலிங் பலவீனத்தையும் நீக்க முற்படாவிட்டால் ஏற்கெனவே அவர்கள் வசமுள்ள மோசமான ஹோம் கிரவுண்ட் வெற்றிக்கான ரெக்கார்ட் இன்னமும் மோசமாகும், ப்ளே ஆஃப் வாய்ப்பும் பகல் கனவாகும்.

மொத்தத்தில் கடந்தாண்டு எலிமினேட்டரில் வாங்கிய அடிக்கு பெங்களூரு வரை வந்து பழிதீர்த்து விட்டுச் சென்றிருக்கிறது லக்னோ!