கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
போட்டியின் வெற்றிக்குப் பிறகு விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே உற்சாகமாகக் காணப்பட்ட விராட் கோலி க்ருனால் பாண்டியாவின் கேட்ச்சைப் பிடித்த பிறகு தனது மகிழ்ச்சியை ஆக்ரோஷமான முறையில் வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார். இதன் பின் லக்னோ அணிக்காக நவீன் உல் ஹக் பேட்டிங் செய்தபோது, விராட் கோலி அவருடனும் சிறிது நேரம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தார்.

போட்டி முடித்த பிறகு மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்துக்கொண்டு நடந்து வந்தபோது லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் விராட் கோலியுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கைல் மேயர்ஸின் கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார். ஒரு கட்டத்தில் மைதானத்தில் வைத்து விராட் கோலியும், கவுதம் கம்பீரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அணி வீரர்கள், நடுவர்கள் என எல்லோரும் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வந்தன. இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்
அதில் “ஒரு விஷயத்தை ஒருவர் சொல்லக் கேட்கிறோம் எனில் அது அவருடைய கருத்துதானே தவிர, அது உண்மை அல்ல. அதேபோல ஒரு விஷயத்தைப் பார்க்கிறோம் என்றால் அது ஒருவருடைய கண்ணோட்டமே தவிர அதுவும் உண்மை அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி அவர் பெங்களூர் அணி வீரர்களிடையே பேசிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. அதில்,“உங்களால் ஒன்றைக் கொடுக்க முடியுமென்றால், அதைத் திருப்பி வாங்கிக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால் கொடுக்காதீர்கள்” என கோலி பேசியிருக்கிறார். போட்டிக்கு இடையே நடந்த வாக்குவாதங்களை மனதில் வைத்து அவர் இப்படி பேசியிருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது.
இந்நிலையில் நவீன் உல் ஹக்கும் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில் 'நீங்கள் எதற்கு தகுதியானவரோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். அதுதான் இங்கே நடந்திருக்கிறது' என கூறியுள்ளார்.


களத்தில் வாக்குவாதங்களில் ஈடுபட்ட கோலிக்கும் கம்பீருக்கும் போட்டியின் ஊதியத்தில் மொத்தமாக 100 சதவிகிதத்தையும் நவீன் உல் ஹக்கிற்கு போட்டியின் ஊதியத்தில் 50 சதவிகிதத்தையும் பிசிசிஐ அபராதமாக விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.