குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நேற்று அஹமதாபாத்தில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் குஜராத் அணி சார்பில் கில் 58 பந்துகளில் 101 ரன்களை அடித்திருந்தார். அணியின் வெற்றிக்கு பெரியளவில் உதவியிருந்ததால் ஆட்டநாயகன் விருதையும் கில்தான் வென்றிருந்தார்.
இந்நிலையில் கில் குறித்து கோலியும்; கோலி குறித்து கில்லும் நெகிழ்ச்சியாக பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.

போட்டி முடிந்த பிறகு `Post Match Presentation' இல் பேசிய சுப்மன் கில், 'சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டியில்தான் நான் அறிமுகம் ஆகியிருந்தேன். இப்போது சன்ரைசர்ஸூக்கு எதிராகவே என்னுடைய முதல் சதத்தையும் அடித்திருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு முழு சுற்றை சுற்றி முடித்ததைப் போல இருக்கிறது' என்றார்.
ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பேசுகையில்,
'எனக்கு 12-13 வயது இருக்கும்போதிலிருந்தே விராட் கோலியைத்தான் தீவிரமாக பின்பற்றி வருகிறேன். கிரிக்கெட்டைப் புரிந்துகொள்ளத் தொடங்கிய பிராயத்திலிருந்தே அவரைத்தான் எனக்கான முன்னுதாரணமாக வைத்திருக்கிறேன்.
அவரிடமிருந்து எக்கச்சக்கமான விஷயங்களை கற்றிருக்கிறேன். கிரிக்கெட் மீதான அவருடைய தீவிர ஆர்வமும் முனைப்பும்தான் எனக்கான ஊக்கமாக இருந்திருக்கிறது.' என கோலி குறித்து ரொம்பவே நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில் குறித்து ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார். அதில்,

'மென்மேலும் முன்னேறு. அடுத்தத் தலைமுறைக்கு தலைமை தாங்கு. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.' என கில்லை வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
கில் பற்றிய கோலியின் பாராட்டு இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.