Published:Updated:

MI v KKR: பழைய பாட்ஷாவாக மீண்டும் மாறிய மும்பை; வெங்கடேஷின் சதத்தை வீணாக்கிய கொல்கத்தா!

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற பாலிசிதான் வின்டேஜ் மும்பையின் பாலிசி. அந்த பழைய பாலிசியை நேற்று மீண்டும் தூசி தட்டியுள்ளனர்.

Published:Updated:

MI v KKR: பழைய பாட்ஷாவாக மீண்டும் மாறிய மும்பை; வெங்கடேஷின் சதத்தை வீணாக்கிய கொல்கத்தா!

வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற பாலிசிதான் வின்டேஜ் மும்பையின் பாலிசி. அந்த பழைய பாலிசியை நேற்று மீண்டும் தூசி தட்டியுள்ளனர்.

பல ஆட்டங்களாக பாதாளத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் நேற்று கொல்கத்தா அணியை அதிரடியாக வீழ்த்தி 2020-ம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்துள்ளது.

கடைசி பந்து வரை சென்று பிரஷரை எகிற வைக்கும் வேலை எல்லாம் பழைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெருவாரியாக இருக்காது.‌ வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற பாலிசிதான் வின்டேஜ் மும்பையின் பாலிசி. அந்த பழைய பாலிசியை நேற்று மீண்டும் தூசி தட்டியுள்ளனர். விளைவு, 180 என்ற மிகப்பெரிய ஸ்கோரை இரண்டு ஓவர்கள் மிச்சம் வைத்து சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.
வெங்கடேஷ்
வெங்கடேஷ்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வயிற்றுக் கோளாறு காரணமாக கேப்டன் ரோஹித் அணியில் இல்லாமல் சூர்யகுமார் கேப்டனாகச் செயல்பட்டார். ஆனாலும் ரோஹித்தின் பெயர், 'Impact வீரர்கள்' பட்டியலில் இருந்தது. பெண் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கல்வியை ஊக்குவிக்க மும்பை அணி ஒவ்வொரு ஆண்டும் ஒரு போட்டியில் பெண் குழந்தைகளை அழைத்து வருவது வாடிக்கை. அதுபோல நேற்றும் சுமார் 19,000 பெண்களை அந்த அணி மைதானத்துக்கு அழைத்து வந்திருந்தது. கூடவே பெண்கள் ஐபிஎல் தொடரில் சமீபத்தில் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சில வீராங்கனைகளும் மைதானத்தில் இருந்தனர். டாஸ் போடும் போது பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் உடனிருந்தார். அதோடு, பெண்கள் அணியின் ஜெர்ஸி டிசைனிலேயே ஆடவர் அணியினருக்கும் ஜெர்ஸி தயாரிக்கப்பட்டிருந்தது.

அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர்
இது எல்லாவற்றையும் தாண்டி பலரின் கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக களமிறங்கியதுதான். வாய்ப்புக்குக் காத்திருந்த அர்ஜுன் நேற்று களம் இறக்கப்பட்டார். களம் இறங்கிய கையோடு முதல் ஓவரை மிகச் சிறப்பாக வீசினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பை அணிக்கு இப்படி ஒரு முதல் ஓவர் அமைந்ததே இல்லை என்று கூட சொல்லலாம்.‌

அதற்கடுத்த‌ ஓவரிலேயே கிரீன் தமிழ்நாட்டின் ஜெகதீசனை வெளியேற்ற, மும்பை அணியின் கை ஓங்கியது.‌ ஆனால் ஓங்கிய கையை ஒற்றையாளாக மடக்க முன் வந்தார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் வீரரான வெங்கடேஷ். தனி ஒருவனாக மும்பையின் மொத்த பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். குர்பாஸ், ராணா போன்றோரையெல்லாம் மும்பை கட்டுக்குள் வைத்தாலும் வெங்கடேஷ் மட்டும் எந்த வலையிலும் சிக்கவில்லை.

23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.‌ அதன் பின்னும் அந்த வாள்வீச்சு போன்ற பேட்டிங் சிறிதும் குறையவே இல்லை.‌ ஆட்டத்தின் 12வது ஓவரில் ஷர்துல் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஆட்டத்தில் வெங்கடேஷ் அல்லாமல் மற்றொரு வீரர் அடித்த முதல் பவுண்டரி அதுதான்.

மறுபக்கம் சீனியர் சாவ்லா மிகச்சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

MI v KKR
MI v KKR
17வது ஓவரில் சதம் கடந்தார் வெங்கடேஷ். ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் மெக்கலம் அடித்த சதத்திற்கு பிறகு மற்றொரு கொல்கத்தா வீரர் அடிக்கும் முதல் சதம் இதுதான்.

கடைசி கட்டத்தில் ரசல் சிறிது அதிரடி காட்டினாலும் மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீச, 200 போக வேண்டிய ஸ்கோர் 185 ரன்களில் நின்றது. 186 ரன்கள் என்பதே டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சிக்கலான இலக்குதான். ரோஹித் இல்லாததால் கிரீன் மற்றும் கிஷன் களம் இறங்குவர் என்று பலரும் நினைத்த நிலையில், இன்னிங்ஸ் இடைவேளை முடிந்ததும் Undertaker போல திடீரென பேட்டுடன் களத்திற்குள் நின்றார் ரோகித்.‌ Impact வீரராக ரோஹித் வந்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகு மும்பை இன்னிங்ஸ் ஆரம்பித்தது. மும்பை விளையாடத் தொடங்கியது என்று கூறுவதை விட பல அணிகளுக்கு ஒரு சிக்கலான சேஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்று பாடம் எடுத்தது என்றே கூறலாம். உமேஷ் வீசிய முதல் ஓவரை மட்டும் சரியாக பார்த்து விளையாண்டது மும்பை. பிட்ச்சில் பெரிதாக எந்த மூவ்மெண்ட்டும் இல்லை என்று உணர்ந்த உடனேயே, ஷர்துல் வீசிய இரண்டாவது ஓவரை 16 ரன்களுக்கு பறக்கவிட்டார் கிஷன். அடுத்த ஓவரிலும்‌ 17 ரன்கள் வந்தன. இதைப் பார்த்த ராணா, தங்கள் அணியின் மூத்த ஸ்பின்னரான நரைனை அழைத்து வந்தார். ஆனால் அவர் ஓவரும் 22 ரன்களாக மாறியது. ஐந்தாவது ஓவரை சிக்ஸ்ருடன் தொடங்கிய ரோஹித் அதே ஓவரில் மிஸ் டைம் ஷாட் மூலமாக அவுட் ஆனார். மும்பை, பவர்பிளே ஓவர்களில் 72 ரன்கள் எடுத்தது.

சிறிதும் தாமதிக்காமல் பவர்பிளேயை முழுவதுமாக பயன்படுத்தியதால்தான் இது சாத்தியமானது. இப்போது பல அணிகள் பவர்பிளேயை முழுமையாகப் பயன்படுத்தத்தான் செய்கின்றன. ஆனாலும் எதிர்பார்த்த ரன்கள் வராததற்கு காரணம் மிடில் ஓவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான். நேற்று மும்பை இந்த தவற்றையும் செய்யவில்லை. மிடில் ஓவர்களிலும் ஓவருக்குக் குறைந்தது எட்டு ரன்கள் என்று கணக்கில் விளையாடியது.

MI v KKR
MI v KKR
25 பந்துகளில் 58 ரன்கள் என அதிரடி காட்டிய கிஷன், வருண் சக்ரவர்த்தி பந்தில் வீழ்ந்தார். அதன் பிறகு இணைந்த திலக் மற்றும் சூர்யகுமார் இணை ஆட்டத்தை மிக நேர்த்தியாக வெற்றிக்கு நேராய் நகர்த்தியது.

ஆட்டம் கை மீறி போவதை உணர்ந்த கொல்கத்தா அணி சூர்யகுமாரை வீழ்த்த தங்களின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பெர்குசனை அழைத்தது‌.

கடந்த போட்டியில் ஃபைன் லெக் திசையில் தூக்கி அடித்து அவுட்டானது போல் சூர்யகுமார் இம்முறையும் அவுட் ஆவார் என நினைத்து அதே மாதிரி ஒரு பந்தைப் போட்டார் பெர்குசன். ஆனால் பந்து சிக்ஸாக மாறியது. அடுத்த பந்தும் சூர்யாவின் டிரேட் மார்க் 'flick shot' மூலம் சிக்ஸராக மாறியது. அதன் பிறகு ஆட்டம் முழுவதுமாக மும்பையின் கைவசம் மாறியது. கடைசி கட்டத்தில் திலக் மற்றும் வதீராவை கொல்கத்தா அவுட் ஆக்கினாலும் டிம் டேவிட் இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட, 18வது ஓவரியிலேயே ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றது. அதிரடி பவர்பிளே, மிடில் ஓவர்களில் நல்ல பார்ட்னர்ஷிப், கடைசிவரை ஆட்டத்தை இழுத்துச்‌‌ செல்லாமல் வென்றது என அனைத்திலும் சிறப்பாக இருந்தது மும்பை. இத்தனை நாளாக அணி தேர்வில் சிக்கலிருந்த நிலையில் இப்போது மும்பை ஓரளவு நல்ல அணியைக் கட்டமைத்து விட்டதாகவே தெரிகிறது.

MI
MI
மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு என மூன்று அணிகளும் நான்கு புள்ளிகளுடன் இருப்பதால் வரும் போட்டிகளில் எந்த அணி புள்ளிப் பட்டியலில் மேலே இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.