Published:Updated:

Chepauk Stories: வடிவேலு பாணியில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகரின் சாகச அனுபவம்!

JayRam ( Sriram )

"தோனி இந்த வருசத்தோட ரிட்டையர் ஆகிருவாராமே?" என்றேன். சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்த ஜெய்ராம் திடீரென டெரர் ஆனார். "அதெல்லாம் எப்டி ஆவாரு ப்ரோ. அவர் ஃபிட்னஸ பார்த்தீங்களா. 2025 வரை கட்டாயம் ஆடுவாரு."

Published:Updated:

Chepauk Stories: வடிவேலு பாணியில் சேப்பாக்கம் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகரின் சாகச அனுபவம்!

"தோனி இந்த வருசத்தோட ரிட்டையர் ஆகிருவாராமே?" என்றேன். சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்த ஜெய்ராம் திடீரென டெரர் ஆனார். "அதெல்லாம் எப்டி ஆவாரு ப்ரோ. அவர் ஃபிட்னஸ பார்த்தீங்களா. 2025 வரை கட்டாயம் ஆடுவாரு."

JayRam ( Sriram )
ஐ.பி.எல் தொடரால் சேப்பாக்கம் மைதானமே களைகட்டியிருக்கிறது. போட்டிகள் இல்லாத நாள்களிலும் கூட மைதானத்தைச் சுற்றிய பகுதிகள் பரபரப்பாகவே இருக்கின்றன. வீரர்களின் பயிற்சிகளை ஆங்காங்கே இருக்கும் சுவர் துளைகள் வழி காணவே பெரும் ரசிகர் கூட்டம் திரண்டு நிற்கிறது. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் எப்படியாவது டிக்கெட் கிடைத்துவிடாதா எனக் கண்ணில்படுபவர்கள் அத்தனை பேரிடமும் அணுகுவதைப் பார்க்க முடிந்தது.

பத்திரிகையாளர் சந்திப்பிற்காகச் சென்றிருந்த நம்மிடமும் ஒரு ரசிகர் டிக்கெட் கேட்டு அணுகினார். ஆனால், ஒரே வித்தியாசம் எல்லா ரசிகர்களும் மைதானத்திற்கு வெளியே இருக்க, இவர் மட்டும் மைதானத்திற்குள்ளேயே இருந்தார். அவரிடம் ஒரு இரண்டு நிமிடங்கள் பேச்சு கொடுத்ததில் தீவிர தோனி ரசிகர் என்பதைத் தெரிந்துக்கொள்ள முடிந்தது. "சரி, எங்கிருந்து வருகிறீர்கள்? எப்படி மைதானத்திற்குள் வந்தீர்கள்?" எனக் கேட்ட போதுதான் அந்த ரசிகர் அத்தனை சுவாரஸ்ய கதைகளையும் கொட்டத் தொடங்கினார்.

Chepauk
Chepauk
`குசேலன்' படத்தில் சலூன் கடை சண்முகமாக வரும் வடிவேலு சூப்பர்ஸ்டாரைப் பார்ப்பதற்காக ஷூட்டிங் வண்டியில் ஏறிக் கூட்டத்தோடு கூட்டமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைவார் அல்லவா? அதேபோன்றுதான் இந்த ரசிகரும் மைதானத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

அத்தனை கட்டுப்பாடுகளையும் அலேக்காகக் கடந்தவர் உள்ளே ஜாலியாக வீரர்களின் பயிற்சி செஷனைப் பார்வையிட்டுவிட்டு மைதானத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் நம்முடைய கண்ணிலும் சிக்கினார். அவரது பெயர் ஜெய்ராம். விசாகப்பட்டினத்திலிருந்து இந்தப் போட்டியைக் காண்பதற்கென்றே வந்திருக்கிறாராம்.

"சின்ன வயசுலருந்தே தோனி ஃபேன் ப்ரோ. ஹைதராபாத்துக்கு தோனி எப்போ வந்தாலும் நேர்ல அடிச்சு பிடிச்சு போய் பார்த்துட்டு வந்துருவேன். இந்த தடவ அங்க சிஎஸ்கேவுக்கு மேட்ச்சே இல்ல. அதான் சேப்பாக்கத்துக்கு வந்தாச்சு. தோனிய பார்த்துடனும்னு கிளம்பி வந்துட்டேன். முதல் மேட்ச்சுக்கே வரணும்னு நினைச்சேன். முடியாம போயிருச்சு. இந்த மேட்ச் வந்தே தீரனும்னு காலைல முதல் ஃப்ளைட்ட பிடிச்சு சென்னை கிளம்பி வந்துட்டேன்!" என்றபோது அவர் கண்ணில் பேரார்வம் எட்டிப் பார்த்தது.

ஜெய்ராம் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியராம். கைநிறைய சம்பளம் வாங்குகிறாராம். சேப்பாக்கம் செல்லலாம் என நண்பர்களை அழைத்துப் பார்த்திருக்கிறார். கூட்டமாகச் சேர்ந்து கோவா ட்ரிப் ப்ளான் போட்டதை போல ஆனதால் ஜெய்ராம் மட்டும் தனியாக கிளம்பி சேப்பாக்கம் வந்து மைதானத்திற்கு அருகேயே அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். "சரி, ஆன்லைன்ல மேட்ச் டிக்கெட் எதாவது போட்ருக்கலாம்ல?" என்று கேட்டவுடன்,

"எந்த ஆப்லயும் டிக்கெட்டே கிடைக்கல ப்ரோ. ஓப்பன் ஆகி ஒண்ணு ரெண்டு நிமிசத்துலயே Sold Out (விற்பனை முடிந்தது) ன்னுதான் காமிக்குது. அதான் ப்ளாக்லயாச்சும் வாங்கிராம்லனு நேர்லயே கிளம்பி வந்துட்டேன்" என்றார்.
JayRam
JayRam

"எப்படி இத்தனை போலீஸ்காரர்கள் இருக்கும் போது இத்தனை தைரியமாக உள்ளே நுழைந்தீர்கள்?" எனக் கேட்டேன். ஜெய்ராம் தன்னுடைய சாகசக் கதையை விளக்கத் தொடங்கினார். "அந்த மெயின் கேட் கிட்ட பைக்கெல்லாம் பார்க் பண்றதுக்கு ஒரு சின்ன சந்து மாதிரி இருந்துச்சு ப்ரோ. உள்ள நிறைய போலீஸ் இருந்தாங்க. ஆனாலும், ஒரு மாதிரி தைரியமா முறுக்கலா உடம்ப வச்சுக்கிட்டு ஃபுல் கான்ஃபிடன்ஸா மூஞ்ச வச்சுக்கிட்டு அந்த பார்க்கிங் ஏரியாக்குல்ல நுழைஞ்சிட்டேன். யாருமே எதுவும் கேட்கல. அதுக்குள்ள வந்தா ஒரு குட்டி ரூம் ஒண்ணு ஓப்பனா இருந்துச்சு அதோட இன்னொரு வாசலும் ஓப்பனா இருந்துச்சு. அது மைதானத்துக்குள்ள வர்ற மாதிரி இருந்துச்சு. அப்படியே உள்ள ஓடி வந்துட்டேன்."

மேலும் தொடர்ந்தவர், "நான் எந்தத் தப்பு பண்றதுக்காகவும் உள்ள நுழையல. எனக்கு தோனிய பார்க்கனும். நாளைக்கு மேட்ச் பார்க்கணும். அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதான் உள்ள நுழைஞ்சிட்டேன். உள்ள போயி ப்ராக்டீஸெல்லாம் பார்த்தேன். ஆனா, இன்னைக்கு தோனியே வரல. அதான் கொஞ்சம் வருத்தம்", என்றவர் திடீரென தோனி சார்ந்த தன்னுடைய பழைய நினைவுகளுக்குள் மூழ்கிப்போனார்.

"ஒரு தடவை ஹைதரபாத்துக்கு தோனி வர்றதா சொன்னாங்க. அப்ப எனக்கு 14 வயசுதான் இருக்கும். ஒரு கியர் சைக்கிள் வச்சிருந்தேன். அந்த சைக்கிளைத் தூக்கிட்டு சிஎஸ்கே கொடிய பிடிச்சிட்டு 40 கி.மீ சைக்கிள்லயே போயி ஏர்போர்ட் வாசல்ல தோனியைப் பார்த்துட்டு வந்தேன்.

`ஒன் சன்... ஒன் மூன்... ஒன் தோனி'தான் ப்ரோ!

(இடையிடையே தோனி குறித்து இப்படி பன்ச் டயலாக்குகளையும் அள்ளிவிட்டார்) அப்புறம் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் ஒன்னு வைசாக்ல நடந்துருக்கு. அதுல தோனி சென்ச்சூரி போட்டிருப்பாரு. ஐ.பி.எல்ல தோனி புனேக்கு ஆடும்போது ஒரு மேட்சல கடைசி ஓவர் 24 ரன் அடிப்பாரே அந்த மேட்ச்சும் நேர்ல பார்த்துருக்கேன்.

தோனியெல்லாம் வேற ப்ரோ. நம்மல மாதிரி கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்து வந்தவரு. அதனாலதான் தோனி மேல இத்தனை விருப்பம். `வாழ்க்கைன்னா கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனா, அதெல்லாம் நாம ஒரு குட்டி ஸ்மைலோட எதிர்கொள்ளனும்னு தோனி சொல்லிருப்பாரு' அதைத்தான் இப்ப வரை ஃபாலோ பண்றேன்.

அடுத்த வருசம் விசாக்ல இருந்து ஜார்க்கண்ட் வரை பைக்லயே போயி தோனிய பார்த்துட்டு வரணும்னு ப்ளான் வச்சிருக்கேன்.

Flight is flying in the sky My heart is flying in Dhoni's heart. (அடுத்த பன்ச்)
JayRam
JayRam

வீட்ல தோனி தோனின்னு சாவாதன்னு சொல்லுவாங்க. அதெல்லாம் கேட்குறதில்ல. தம்பி கோலி ஃபேனு. அவனுக்கும் எனக்கும்தான் வீட்ல போர்க்களமா இருக்கும்."

"தோனி இந்த வருசத்தோட ரிட்டையர் ஆகிருவாராமே?" என்றேன். சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டிருந்தவர் திடீரென டெரர் ஆனார். "அதெல்லாம் எப்டி ஆவாரு ப்ரோ. அவர் ஃபிட்னஸ பார்த்தீங்களா. 2025 வரை கட்டாயம் ஆடுவாரு.

இந்த முறையும் சென்னைக்குதான் கப்பு. அடுத்த முறையும் சென்னைக்குதான் கப்பு. 2025லயும் சென்னைக்குதான் கப்பு. ஹாட்ரிக் கப் அடிச்சுட்டுதான் தோனி ரிட்டையர் ஆவாரு! No Dhoni... No Cricket... தோனி இல்லன்னா கிரிக்கெட்டே இல்ல.(அடுத்த பன்ச்!)"

தோனி பற்றிய அரைமணி நேர சொற்பொழிவிற்குப் பிறகு, "எப்டியாச்சு ஒரு டிக்கெட்டாச்சும் வாங்கிக் கொடுத்துருங்க ப்ரோ..." என ஒரு நிமிடம் அமைதி ஆனார். ஜெய்ராமின் கண்களில் ஒரு தேஜஸ் தெரிந்தது. எப்படியும் இவன் வாங்கிக் கொடுத்துடுவான் என நம்பியிருப்பார் போல. (கோபாலு... வெளியூர் ஆளுல்ல... உள்ளூர் மேட்டர் தெரிஞ்சா...) நல்லவேளையாக ஒரு போலீஸ்காரர் வந்து ஜெய்ராமை யாரென விசாரித்து அப்படியே அள்ளி வெளியே கூட்டிச் சென்றுவிட்டார். (என்னிடம் டிக்கெட் இருந்து நான் கொடுக்க நினைத்த வேளையில் அந்த போலீஸ்காரர்தான் வந்து கெடுத்துவிட்டார் என ஜெய்ராம் நினைத்திருக்கக்கூடும். ஹப்பாடா...)

ஜெய்ராமை வழியனுப்பிவிட்டு வந்தபோது சுவர்களில் இருக்கும் சிறு ஓட்டை வழியாக ஒரு பெரும் கூட்டமே ராஜஸ்தான் வீரர்கள் பயிற்சி செய்வதை பார்த்துக் கொண்டிருந்தது. இதில் பலருமே ஜெய்ராமை போல டிக்கெட் கிடைக்காதா என ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பவர்கள்தான்!

Chepauk
Chepauk
சேப்பாக்கம் சமாச்சாரங்களையெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஜெய்ராமிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது. `I bought ticket bro. 2000 ticket 5000 I bought that bro'. வெளியூர்க்காரனுக்கும் உள்ளூர் ரகசியம் தெரிஞ்சு போச்சுங்கய்யா!

சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஜெயராமால் ப்ளாக்கில் 5000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட முடியும். சுவர்களின் ஓட்டை வழி ஏக்கத்தோடு பார்க்கும் சாமானிய ரசிகர்களுக்கு அது சாத்தியப்படுமா?!