Published:Updated:

IPL 2023 Preview: அறிமுகத்திலேயே சாம்பியன்ஸ்; அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ஹர்திக் படை?

Gujarat Titans ( IPL )

"வெற்றி வந்தால் என் அணியின் வீரர்களுக்கு, தோல்வி வந்தாலோ முழுப்பங்கும் எனக்கு..." எனச் சொல்லியிருந்த ஹர்திக்கின் அந்த ஆளுமைதான் அணியை முன்னிலைப்படுத்தியது.

Published:Updated:

IPL 2023 Preview: அறிமுகத்திலேயே சாம்பியன்ஸ்; அதே மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா ஹர்திக் படை?

"வெற்றி வந்தால் என் அணியின் வீரர்களுக்கு, தோல்வி வந்தாலோ முழுப்பங்கும் எனக்கு..." எனச் சொல்லியிருந்த ஹர்திக்கின் அந்த ஆளுமைதான் அணியை முன்னிலைப்படுத்தியது.

Gujarat Titans ( IPL )

டெபாசிட் இழக்குமென கணிக்கப்பட்ட கட்சி, அதிகப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது!

கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஆஷிஸ் நெஹ்ரா, "முதல் சீசனிலிருந்தே தாக்கத்தை ஏற்படுத்துவோம்" எனக் கூறியிருந்ததை யாருமே பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் வீரர்கள், கேப்டன்ஷி, பயிற்சியாளர் என எதுவுமே ஈர்க்கத்தக்க அம்சங்களால் நிரம்பியிருக்கவில்லை. மற்ற அணிகளின் சீற்றத்தினை தாக்குப்பிடிக்காதென விமர்சனத் தோட்டாக்கள் தாக்கின. ஆனால் ஆச்சர்யங்களை அடுத்தடுத்து அளித்து 14 போட்டிகளில், 10-ல் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அங்கு ராஜஸ்தான் ராயல்ஸையும் வீழ்த்தி முதல் சீசனிலேயே சாம்பியனானது குஜராத்.

`Beginners' Luck' எனச் சிலரால் அதனை ஏற்க முடியாவிட்டாலும் உண்மையில் ஆர்ப்பாட்டமே இல்லாத ஓர் அழகான அபாரமான வெற்றி அது. இம்முறை குஜராத் எவ்வளவு பலம் கொண்டிருக்கிறது, சிஎஸ்கே, மும்பை மட்டுமே இதுவரை செய்து காட்டியிருந்த கோப்பையை டிஃபெண்ட் செய்யும் வித்தையை குஜராத்தும் நிகழ்த்திக் காட்டுமா?

Hardik Pandya - ஹர்திக் பாண்டியா
Hardik Pandya - ஹர்திக் பாண்டியா

பலங்கள்:

இறுதிப் போட்டியில் இருந்த வீரர்களில் ஃபெர்கூசனை மட்டும் கேகேஆரிடம் டிரேடிங்கில் கைமாற்றி விட்டிருந்த குஜராத் மற்றவர்கள் அனைவரையும் அப்படியே தக்க வைத்திருந்தது.

குஜராத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய பலம், அவர்களது பௌலிங். கடந்த சீசனில் பவர்பிளேயில் சிறந்த பௌலிங் ஸ்ட்ரைக்ரேட்டும் (21.33), டெத் ஓவர்களில் சிறந்த எக்கானமியும் (9.60) குஜராத்தின் வசமே. ஷமியும், ரஷித்தும் பகையை மிச்சமின்றி முடிக்கக் கூடியவர்கள். அவர்களது மோசமான நாள்களில்கூட விக்கெட் விழாது போகுமே தவிர ரன்கள் கசியாது. ஷமி எந்த ஒரு கட்டத்திலும் நம்பத்தகுந்தவராக மிளிர மத்திய ஓவர்களில் மட்டுமின்றி ஆரம்பத்திலேயேகூட ரஷித்தினைக் கருவியாக்கி அணியின் உத்வேகத்தை வேகமிழக்காது பாண்டியா பார்த்துக் கொண்டார்.

இவ்விருவரோடு பாண்டியாவும் சேரும்போது அந்த 12 ஓவர்கள் எதிரணிக்கான அத்தனை வாய்ப்புகளையும் தின்று செறித்து விடும்.

பௌலிங்கிற்கு சளைத்ததல்ல பேட்டிங்கும். ரஷித் கான் வரை நின்று ஆட்டங்காட்டுவார்கள். அதிலும் பாண்டியா, கில், திவேதியா, சாய் சுதர்சன் என இந்திய வீரர்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருப்பதுதான் கூடுதல் சிறப்பு. கில்லின் கில்லர் ஃபார்மும் மில்லரின் மலைக்க வைக்கும் ரன்குவிப்பும் பேட்டிங் படைக்கு ஐந்து நட்சத்திரக் குறியீட்டினைத் தரவைப்பவை. சென்றமுறை சில போட்டிகளில் வெற்றி லோயர் மிடில் ஆர்டரால் முடிவு செய்யப்பட்டது. இது தலைகீழாக நிறுத்தப்பட்ட சீட்டுக்கட்டுக் கோபுரத்தினைப் போல எப்போதும் ஆபத்தானதே. அதேபோல் சஹா சற்றே மெதுவாக ரன்களைச் சேர்த்தார். மினி ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள ஆங்கர் ரோல் வகிக்கக்கூடிய வில்லியம்சனின் அனுபவமும், சாதிக்க விரும்பும் பரத்தின் துடிப்பும் டாப் ஆர்டரில் நிலைப்புத்தன்மையைக் கூட்டும்.

குஜராத்தின் ஆதாரம், ஹர்திக் பாண்டியா. சொந்தத் தொழிலில் ஈடுபடுவரிடம் கூடுதல் பொறுப்பும் கவனமும் ஒட்டிக்கொள்வதைப் போல, அணித்தலைவர் பொறுப்பினை தனது தோளில் தாங்கி சிறப்பாகச் செய்திருந்தவர். தோனியின் சாயல் சற்றே தொனிக்க, "வெற்றி வந்தால் என் அணியின் வீரர்களுக்கு, தோல்வி வந்தாலோ முழுப்பங்கும் எனக்கு" என சொல்லியிருந்த ஹர்திக்கின் அந்த ஆளுமைதான் அணியை முன்னிலைப்படுத்தியது.

Hardik Pandya
Hardik Pandya
IPL

காயத்திலிருந்து மீண்டுவந்து நான்கு ஓவர்களையும் அதுவும் மணிக்கு 140+ கிமீ வேகத்தில் பாயும் பந்துகளையும் வீசி ஒரு முழுமுதல் பௌலராகவே ஜொலித்தார். 487 ரன்களை 44.27 ஆவரேஜோடு குவித்ததோடு எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதில் இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை முடக்கிய 3/17-ம் அடக்கம். அவரது நிதானம், தந்திரோபாயங்கள், பௌலர்களைக் கையாண்ட விதம் என எல்லாமுமே ஒரு பரிபூரண தலைவராகவே அவர் இருக்கிறார் என்பதை உணர்த்தியது. தற்போது இந்திய ஜெர்ஸியிலும் அவ்வப்போது தலைமையேற்கத் தொடங்கியிருக்கும் பாண்டியாவிடம் முன்னிலும் அதிகமான முனைப்பைக் காணலாம்.

அணிக்குள் உள்ள ஒருங்கிணைப்பும், ஒருவரை மட்டுமே நம்பி இல்லாமல் ஏதோ ஒரு நாளில் யாரோ ஒருவர் நட்சத்திரமாக ஜொலிப்பதுவும் குஜராத்தின் பலத்தை பன்மடங்காக்குகிறது. கடந்த சீசனில் மொத்தம் எட்டு பேர் ஆட்டநாயகர்கள் விருதைப் பெற்றிருந்தனர். அவரவர் பாத்திரங்களுக்குள் அவரவர் பொருந்திப் போவது அணியை முன்னிலைப்படுத்தக் கூடியது.

பலவீனங்கள்:

பெரிதாகக் குறைகள் தென்படாவிட்டாலும் அவை இல்லாமல் இல்லை. கடந்தமுறை குஜராத்தின் பவர்பிளே ஓவர்கள் வறட்சியோடே காணப்பட்டன. அதில் ரன்ரேட் பெரும்பாலும் 8-க்குக் கீழாகவே இருந்தது. ஓப்பனர்களாகக் களம் கண்ட கில் மற்றும் சஹாவிடமிருந்து அதிரடியாக ரன்கள் சேராததே காரணம். இம்முறை கில் கியரை மாற்றி வேகமெடுக்கலாம் என்றாலும் வில்லியம்சன் வழக்கம்போல மெதுவாகத் தொடங்கினால் அதிரடித் தொடக்கம் தர முடியாமல் போகலாம். இது பின்வரிசை வீரர்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

Hardik Pandya and Sanju Samson
Hardik Pandya and Sanju Samson
IPL

போன சீசனில், சேஸிங் செய்த போட்டிகளில் ஏழு முறை கடைசி ஓவரில்தான் போட்டியை குஜராத் முடித்திருந்தது. அதிலும் மூன்று முறை இறுதி நான்கு ஓவர்களில் 50 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டிய சூழலில் திவேதியா, ரஷித் கான் என பின்வரிசை வீரர்கள்தான் கைவரிசை காட்டியிருந்தனர். கடந்தாண்டு ரஷித்தின் ஸ்ட்ரைக்ரேட் 200-ஐ தாண்டி மிரட்ட மில்லர் மற்றும் திவேதியாவுடையதோ 140-ஐ கடந்திருந்தது. எனினும் இது எல்லா சமயங்களிலும் நடந்தேறும் எனக் கூற முடியாது. ஒரு வலுவான டெத் பௌலிங் படை சூழும் போது, சரணடையவே நேரிடும். எனவே பவர்பிளேயில் ரன்கள் துரிதகதியில் சேர்வது அவசியம்.

அதிரடியில் நம்பிக்கையற்றது போல் அவர்களது சிக்ஸரின் எண்ணிக்கையும் இருந்தது. 16 போட்டிகளில் 79 சிக்ஸர்களே அடிக்கப்பட்டு இருந்தன. அதாவது 24.1 பந்துகளுக்கு ஒருமுறைதான் சிக்ஸர் வந்திருந்தது. இது சமயத்தில் பின்னடைவாகலாம். பொதுவாகவே பாண்டியா, மில்லர், திவேதியா தவிர்த்த மற்றவர்களது பேட்கள் அதிரடி மொழி பேசத் தயங்குகின்றன. இதுவும் அணிக்கு சரிவையே தரும்.

பௌலிங்கும் விக்கெட் வேட்டைக்கு முன்னதாகச் சொன்ன மூவரையே நம்பியுள்ளது. கடந்த சீசனில் அல்ஜார்ரி ஜோசஃப் 9 போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். எக்கானமியும் 9-ஐ நெருங்கியிருந்தது. குவாலிஃபயரில் கூட, 2 ஓவர்களுக்கு மேல் அவரைத் தொடர வைக்க முடியாத அளவு 13.50 எக்கானமியோடு பந்துகளை வீசியிருந்தார். விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை. யாஷ் தயாலையும் சில போட்டிகளில் குஜராத் பயன்படுத்தியது. 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்தான். ஆனால் 9.25 எக்கானமியுடன். வேகப்பந்து வீச்சை வேகமெடுக்க வைக்க எடுக்கப்பட்ட அயர்லாந்தின் ஜோஸ்வா லிட்டிலால் காயத்தால் ஆட முடியாமல் போயிருக்கிறது. மாற்று வீரர்களான ஷிவம் மவி மற்றும் ஓடியன் ஸ்மித் கூட விக்கெட் வீழ்த்துவார்கள் என்ற உத்தரவாதமில்லாத பௌலர்கள்தான். இதனை எதிரணிகள் குறிவைத்தால் அது பாதகமாக உருவெடுக்கலாம்.

ரஷீத் கான்
ரஷீத் கான்

சுழல்பந்தும் ரஷித் கானையே நம்பியுள்ளது. சுழலுக்கு சாதகமான களங்களில் வித்தைக் காட்டும் திறன்மிக்க வேறு அனுபவமிக்க ஸ்பின்னர்கள் இல்லை. போன இறுதிப்போட்டியில் சாய் கிஷோரின் அனுபவமின்மை வெளிப்பட ஓவருக்கு பத்து ரன்களை வாரி வழங்கியிருந்தார். பார்ட் டைம் லெக் ஸ்பின்னரான திவேதியாவோ தொடர் முழுவதும் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்தவில்லை. குஜராத்தும் அவரது ராஜஸ்தான் நாள்கள் போல இல்லாமல் அவரை ஃபினிஷராக மட்டுமே கருத்தில் கொள்கிறது. சில போட்டிகளில் அணி சேஃப் ஜோனில் நுழைந்த பின்பு ஓவர்களை முடிக்க மட்டுமே வீசினார். இம்முறையும் சுழல்பந்து வீச்சின் குறை அப்படியேதான் இருக்கிறது. மொத்தத்தில் பாண்டியா, திவேதியாவை உள்ளடக்கி ஆறு பௌலர்கள் இருந்தாலும், எல்லோருமே விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியவர்களாக இல்லை.

பலவீனங்களை இருட்டடிப்பு செய்யுமளவு பலங்களே அதிகமாக இருப்பினும் கடந்தமுறை இத்தவறுகளைக் கவனித்த எதிரணிகளுக்கு அதனைக் குறிவைத்து தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வியூகங்களை வகுப்பதற்கு ஓராண்டு காலம் இருந்திருக்கிறது. எனவே அவர்களது அடுத்த நகர்வுகளையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப குஜராத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

உச்சத்தை அடைவதை விட அதனைத் தக்கவைத்துக் கொள்வதுதான் இன்னமும் சவாலானது. அது கொண்டுவரும் அழுத்தம் எத்தகையவர்களையும் திணறடிக்கும். இதனை குஜராத் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமே!