ஒரே போட்டியில் ஒரு மூன்று நான்கு ஹைலைட்டான மொமன்ட்டுகளும் மூன்று நான்கு பட்டாசான பெர்ஃபார்மென்ஸ்களும் இருந்தால் எப்படியிருக்கும்? நேற்றைய போட்டி அப்படித்தான் இருந்தது.
குஜராத்தும் கொல்கத்தாவும் மோதிய அந்தப் போட்டியில் ஒரு ஹைலைட்டான மொமன்ட்டை முறியடிக்கும் வகையில் இன்னொரு மொமன்ட் அதை முறியடிக்கும் வகையில் அதற்கு மேல் இன்னொன்று என நிகழ்ந்துகொண்டே இருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் போன்று கடைசியில் ரிங்கு சிங்கின் அந்த அசாத்தியமான ஆட்டமும் நிகழ்ந்திருந்தது.

இந்தப் போட்டியில் குஜராத் அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 204 ரன்களை எடுத்தது. தமிழக வீரர்களான சாய் சுதர்சனும் விஜய் சங்கரும் ரொம்பவே சிறப்பாக ஆடியிருந்தனர். சாய் சுதர்சன் இந்த சீசனில் மற்றுமொரு அரைசதத்தை பதிவு செய்திருந்தார். 38 பந்துகளில் 53 ரன்களை எடுத்திருந்தார். இதில் கவனிக்க வேண்டியது ஸ்பின்னர்களை அவர் எதிர்த்து ஆடிய விதம். கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் மூவருமே பெங்களூருவிற்கு எதிரான கடந்த போட்டியில் பயங்கரமாக வீசியிருந்தனர். பெங்களூர் அணியின் 10 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகளை இவர்களே வீழ்த்தியிருந்தனர். ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு அணிக்கு எதிராக ஸ்பின்னர்கள் எடுத்த அதிகபட்ச விக்கெட் இதுதான். இப்படி ஒரு ரெக்கார்டை கடந்த போட்டியில் செய்திருந்த பௌலர்களுக்கு எதிராக சாய் சுதர்சன் பெரும் முதிர்ச்சியுடன் ஆடியிருந்தார். கூடவே சுப்மன் கில்லும் நன்றாக ஒத்துழைத்திருந்தார்.
இருவரும் தாறுமாறாக எந்த பெரிய ஷாட்டுக்கும் முயற்சிக்காமல் தரையோடு தரையாக உருட்டியே ஆடினார். ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகிக்கொண்டே இருந்ததால் பெரிதாக எந்த அழுத்தமும் ஏற்படவில்லை. சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து பெரிய சிக்சர்களை பறக்க விடவும் சுதர்சன் தவறவில்லை. சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி என இருவரின் பந்துகளிலுமே சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். அரைசதத்தைக் கடந்தவர் சுனில் நரைனின் பந்தில்தான் அவுட்டும் ஆனார்.
விஜய் சங்கர் நீண்ட காலமாகவே ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக நேற்று ஒரு அற்புதமான இன்னிங்ஸை ஆடிவிட்டார். 24 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார். கடைசிக்கட்டத்தில் இன்னிங்ஸை பயங்கர அதிரடியாக முடித்திருந்தார்.

ஃபெர்குசன் மற்றும் ஷர்துல் தாகூர் வீசிய கடைசி 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்கள் வந்திருந்தது. இந்த இரண்டு ஓவர்களில் மட்டும் விஜய் சங்கர் 5 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இப்படி ஒரு விஜய் சங்கரை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. நீண்ட மோசமான காலகட்டத்திலிருந்து விஜய் சங்கர் மீண்டு வந்திருக்கிறார். இத்தனை நாளாக கொஞ்சம் சுமாராகத்தான் ஆடியிருந்தேன் என விஜய் சங்கருமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இனி சீராக ஆடும்பட்சத்தில்தான் இந்திய அணிக்கான தேர்வு குறித்தும் சிந்திக்க முடியும் என்றும் பேசியிருக்கிறார்.
பேட்டிங்கில் இவர்கள் இருவரும் சிறப்பாக ஆட, பந்துவீச்சில் கேப்டன் ரஷீத் கான் அசரடித்தார். கொல்கத்தா அணி கொஞ்சம் எழும்பி டார்கெட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த தருவாயில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசரடித்தார். 17 வது ஓவரில் ரஸல், நரைன், ஷர்துல் தாகூர் என மூவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்து வீழ்த்தினார். ரஷீத்தின் கூக்ளிகளுக்கான வலிமை இன்னும் ஒரு சதவிகிதம் கூட குறையவில்லை என்பதற்கான உதாரணம்தான் இந்த ஹாட்ரிக்.

கொல்கத்தா அணியின் சார்பில் இந்த 200+ சேஸிங்கின் போது வெங்கடேஷ் ஐயர் 80 ரன்களை எடுத்திருந்தார். வெங்கடேஷ் ஐயர் - நிதிஷ் ராணா கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது.
கொல்கத்தா அணி இந்த சேஸிங்கை உயிர்ப்போடு வைத்திருந்ததற்கு இவர்களின் கூட்டணியே மிக முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால், கடைசியில் இந்த அத்தனை பெர்ஃபார்மென்ஸ்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் ரிங்கு சிங் அதிரடி சூறாவளியாக கலக்கிவிட்டார். ரிங்கு சிங் சந்தித்த கடைசி 7 பந்துகளில் மட்டும் 40 ரன்களை எடுத்திருந்தார்.
ஐ.பி.எல் வரலாற்றில் வெறும் 7 பந்துகளில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். கடைசி 5 பந்துகளில் அவர் அடித்த சிக்சரெல்லாம் அசாத்தியம் மட்டுமே. அந்த 5 பந்துகளில் முதல் 3 பந்துகளை யாஷ் தயாள் ஃபுல் டாஸாக வீசியிருந்தார். யார்க்கராகவோ அல்லது வைட் யார்க்கராகவோ வீச வேண்டும் என்பது யாஷின் திட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், யாஷால் அதை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
'You Miss I Hit' பாணியில் ரிங்கு சிங் சிக்சர்களை பறக்கவிட்டார். அடுத்த இரண்டு பந்துகளை வீசும் முன்பு கேப்டன் ரஷீத் கான் யாஷிடம் வந்து சில நிமிடங்கள் பேசினார். இப்போது யாஷ் வேறு மாதிரியான திட்டமிடலுக்குள் செல்கிறார். அடுத்த இரண்டு பந்துகளையும் பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் ஒன்களாக வீசினார். ஸ்லோயர் ஒன்களை குஜராத் மாதிரியான பெரிய மைதானத்தில் சிக்சராக மாற்றுவது போன்ற ரொம்பவே கடினம். ஆனால், ரிங்கு அதையும் செய்தார்.

பின்னங்காலை ஊன்றி சக்தியைக் கூட்டி அந்த இரண்டு பந்துகளையுமே கூட சிக்சராக்கினார். சாத்தியமே இல்லை என்கிற சூழலிலிருந்து கொல்கத்தா அணி ஒரு அசகாய வெற்றியை ரிங்குவின் மூலம் பெற்றது.
நேற்றைய போட்டியில் எத்தனையோ அருமையான பெர்ஃபார்மென்ஸ்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் காலம் கடந்தும் நிற்கப்போவது ரிங்கு சிங் அடித்த அந்த 5 சிக்சர்கள்தான்!