சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்த அந்த ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தை பார்த்தீர்களா? கேலரியில் மேற்கூரை சேதமடைந்து பாழாகிக் கிடந்தது. ஏதோ புயலுக்குப் பாதிப்புக்குள்ளான மைதானம் போன்று காட்சியளித்தது. ஒரு முழுமையான கிரிக்கெட் மைதானம் போன்றே அது தெரியவில்லை. மைதானம் மட்டுமல்ல.
ஹைதரபாத் அணியும் இதே நிலையில்தான் நேற்று இருந்தது. சேதமடைந்து சின்னாபின்னமாகி கிழிந்து போன அணியாகத்தான் சன்ரைசர்ஸின் பெர்ஃபார்மென்ஸும் அமைந்திருந்தது.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார்தான் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். ராஜஸ்தான் அணியின் சார்பில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பட்லரும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். பட்லர் கடந்த சீசனில் எங்கே நிறுத்தினாரோ அங்கிருந்து அப்படியே தொடங்கினார். அதே வேகம்...அதே அதிரடி கொஞ்சம் அப்க்ரேடட் வெர்ஷனாக அசத்தியிருந்தார். இந்த ஆட்டத்தை அப்படியே ராஜஸ்தான் பக்கமாக ஒன் சைட் ஆட்டமாக மாற்றிவிட பட்லரும் வெறும் பவர்ப்ளே மட்டுமே போதுமானதாக இருந்தது. பவர்ப்ளேயின் நடராஜன் வீசிய ஓவரில் மட்டும் 5 பவுண்டரிகளை அடித்தவர், ஃபரூக்கியின் ஓவரில் 3 பவுண்டர்களை பறக்கவிட்டிருந்தார். இப்படியாக அந்த பவர்ப்ளேயில் பந்து வீசிய அத்தனை பேரையுமே பட்லர் ஒரு கை பார்த்தார். பட்லர் மட்டுமில்லை. அவருடன் சேர்ந்து யாஷஸ்வி ஜெஸ்வாலும் ஈடுகொடுத்து அதிரடியாக ஆடினார். 20 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பட்லர் 54 ரன்களில் ஃபரூக்கியின் பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

அடுத்ததாக உள்ளே வந்த சாம்சனுமே நன்றாக ஆடினார். யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். நின்று ஆடிய சாம்சனும் 32 பந்துகளில் 55 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். கடைசியில் ஹெட்மயர் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். இந்த சீசனின் முதல் 200+ ஸ்கோரை ராஜஸ்தான் அணியே எட்டியது.
சன்ரைசர்ஸ் அணியின் பௌலர்கள் எந்த விதத்திலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சன்ரைசர்ஸ் அணி 6 பௌலர்களை பயன்படுத்தியிருந்தது. இந்த 6 பௌலர்களில் 4 பௌலர்களின் எக்கானமி 10 க்கும் மேல் இருந்தது. கேப்டன் புவனேஷ்வர் குமாரே 3 ஓவர்களை வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டை எடுக்காமல் ஏமாற்றம் அளித்திருந்தார்.
ஸ்கோரை சேஸ் செய்த சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் இன்னும் சுமாராக பெர்ஃபார்ம் செய்தனர். முதல் ஓவரிலேயே ட்ரெண்ட் போல்ட் தனது மாயாஜாலங்களை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். அபிஷேக் சர்மா, திரிபாதி இருவரையுமே முதல் ஓவரிலேயே போல்ட் வெளியேற்றினார். அங்கிருந்தே சன்ரைசர்ஸ் வீழ தொடங்கிவிட்டது. இதன்பிறகு, யாருமே ஒரு சிறு நம்பிக்கையை கூட கொடுக்கவில்லை. எந்தவிதமான திட்டமிலுமே இல்லாமல் கடுமையாக சொதப்பியிருந்தனர். ஹாரி ப்ரூக் இப்போதைய கிரிக்கெட் உலகில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர். இங்கிலாந்து அணிக்காக Baz Ball பாணியில் டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடியாக வெளுத்து வாங்கக் கூடியவர்.

அவர் இங்கே இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 13 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகியிருந்தார். அதேநேரத்தில், அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் உள்ளே வந்தவுடனேயே பயங்கரமாக சுற்றி அவுட் ஆகிவிட்டு சென்றிருந்தார். ஒவ்வொரு வீரரும் தங்களின் விருப்பப்படி கால் போன போக்கில் ஆடியிருந்தனர். ஒரு அணியாக ஒரு சரியான திட்டமிடலோடு ஆடவே இல்லை.
20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்துப்போனது. ராஜஸ்தான் சார்பில் சுழல் சூறாவளி சஹால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
சன்ரைசர்ஸை பொறுத்தவரை இது ஒரு மோசமான தோல்வி. எந்தவிதத்திலும் ஒரு ஒழுங்கே இல்லாமல் தோற்றிருக்கிறார்கள். அடுத்தடுத்தப் போட்டிகளில் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.