நேற்று நடந்த போட்டியில் என்ன தான் சன்ரைசர்ஸ் பஞ்சாபை வீழ்த்தினாலும் கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் ஒரே மனிதரை நோக்கி தான் சுழன்றன. இளம் வீரர்கள் அதிகம் போட்டியிடும் தொடரில் 37 வயதான தவான் ஆடிய ஆட்டம் மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அவர் பக்கம் ஈர்த்துவிட்டது. பொறுமை, பொறுப்பு, அதிரடி, புத்திக்கூர்மை என அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற இன்னிங்ஸ் என்றால் இது தான் என ரசிகர்களுக்கு வரையறுத்துவிட்டுச் சென்றார் தவான்.

ரிங்க்கு சிங் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் அடுத்த போட்டி ஹைதராபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
யான்சன், கிளாசன், மார்கண்டே என மூன்று வீரர்களை இந்தப் போட்டியில் புதிதாக அணிக்குள் கொண்டு வந்தது ஹைதராபாத். பஞ்சாபில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் களம் கண்டார். கடந்த இரண்டு போட்டிகளாக அதிரடி துவக்கத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கிய ப்ரப்சிம்ரன் சிங் இம்முறை முதல் பந்திலையே புவனேஸ்வரிடம் அவுட் ஆகி பஞ்சாபின் சரிவைத் தொடங்கி வைத்தார். யான்சன் அடுத்த ஓவரில் ஷார்ட்டை வெளியேற்றினார். அதற்கடுத்த ஓவரில் ஜித்தேஷை அனுப்பியதோடு இல்லாமல் மெய்டனாகவும் வீசினார். இந்த ஐபிஎல் தொடரின் பெரும் பணக்காரர் சாம் கர்ரன் அதன் பின்பு சிறிது அதிரடி காட்டினாலும் இங்கிலாந்து வீரர்களுக்கு உரித்தானது போல இவரும் ஸ்பின் வந்தவுடனே ஆட்டம் இழந்தார்.
தன்னை மறுமுனையில் நிற்க வைத்துக்கொண்டு அத்தனை வீரர்களும் ஆட்டம் இழப்பதை பார்த்துக்கொண்டே இருந்தார் தவான். தேவையான நேரத்தில் பவுண்டரிகள் வந்தாலும் கிரிக்கெட்டின் அடி நாதமான strike rotation செய்ய ஆட்களின்றி தவித்தார். ஒரு கட்டத்தில் 38 பந்துகளில் அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோதே பஞ்சாப் 88 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது. மொத்த அணியும் கொடை சாய்ந்த நிலையில் அதை தூக்கிப் பிடிக்க தனி ஒருவனாக பாகுபலி அவதாரம் எடுத்தார் தவான்.

மறுபக்கத்தில் விளையாட ஆள் இல்லை என்றால் என்ன? அந்த பக்கத்துக்கும் சேர்த்து நானே விளையாடுகிறேன் என்று ஆட ஆரம்பித்தார். நடராஜன், உம்ரான் மாலிக் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோரது ஓவர்களில் எல்லாம் தன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனை பவுண்டரிகளை அடித்து ரன்களை உயர்த்திக் கொண்டே இருந்தார். ஒன்பது விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் பந்து வீச்சாளர்களால் இந்த 37 வயது வீரரின் விக்கெட்டை கடைசி வரை வீழ்த்த முடியவில்லை. 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 66 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார் தவான். பஞ்சாபின் மொத்த ரன்களில் சுமார் 69 சதவீத ரன்களை தவான் மட்டுமே அடித்து இருந்தார்.
வர்ணனையாளர் ஹர்ஷா போகலே இது பல சதங்களைவிட மேலான இன்னிங்ஸ் என பாராட்டினார்.

தன்னைச் சுற்றி அத்தனை பேரும் ஸ்விங், வேகம் மற்றும் ஸ்பின் என அத்தனை விதமான பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்த போதும் கொஞ்சம் கூட அசராமல் ஆடியிருந்தார் தவான். அதைவிட முக்கியமாக ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்தவுடன் அதைக் காரணம் காட்டி மிக மிக மந்தமான இன்னிங்ஸ் ஆடும் பல வீரர்கள் மத்தியில், 99 ரன்களை 150 என்னும் அற்புதமான ஸ்ட்ரைக் ரேட் உடனும் ஆடியிருந்தார். இந்திய அணியில் இருந்து மொத்தமாக தவான் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இப்படியொரு இன்னிங்ஸ் ஆடி தன்னுடைய இருப்பை இன்னமும் உலகுக்கு உரக்க அறிவித்தார்.
இன்னிங்ஸ் முடிந்ததும் சதத்தை தவற விட்டதில் சிறிதும் வருத்தம் இன்றி, புன்னகையுடன் கடந்து சென்றார். தன்னுடைய பழைய அணியான ஐதராபாத் ரசிகர்கள் இன்னமும் தன்னை நினைவில் வைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார் தவான். தொடர்ந்து ஆடிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும் கேப்டன் மார்க்ரம் மற்றும் திரிபாதி இணைந்து திறம்பட ஆடினர். முன்னதாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் அர்ஷ்தீப் பந்திலும் மயங்க் ராகுல் சஹார் பந்திலும் ஆட்டமிழந்தனர். திரிபாதி 48 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் எளிதாக வெற்றி பெற்றாலும் ஆட்டநாயகன் விருதை தவான் தான் வென்றார். அணி தோல்வியுற்ற போதும் தவான் வாங்கும் இரண்டாவது ஆட்டநாயகன் விருது இதுவாகும். சில நாட்களுக்கு முன்பாக கில் இப்போது இருக்கும் ஃபார்மை கருத்தில் கொண்டு, `நான் தேர்வாளராக இருந்தால் என்னைவிட அவரைத்தான் உலக கோப்பைக்குத் தேர்வு செய்வேன்' என்று கூறியிருந்தார். அதற்காக தான் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதையும் இன்று நிரூபித்து விட்டார் தவான்.
குறைவான ஸ்டிரைக் ரேட் என்று ஒற்றை காரணத்துக்காக தான் தவானை ஒரு நாள் அணியில் இருந்தும் ஓரங்கட்டி உள்ளது பிசிசிஐ. ஆனால் பல முன்னணி வீரர்களை விடவும் வேகமாக தன்னால் விளையாட முடியும் என்றும் நாசுக்காகவும் இந்த இன்னிங்ஸ் மூலம் தெரிவித்துள்ளார் . ஒரு நாள் ICC தொடர் என்றாலே மிகச் சிறப்பாக விளையாடும் தவானை இதன் பிறகும் ஓரம்கட்டி வைத்தால் மற்றொரு அரையிறுதி தோல்விக்கு இந்திய ரசிகர்கள் மனதளவில் தயாராகிக் கொள்வதுதான் சிறந்தது.