வைரலான வாக்குவாதம்:
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆர்.சி.பி. அணியின் விராட் கோலி செய்த சம்பவங்களும் ஒவ்வொரு ரியாக்ஷன்களும் தான், இணையத்தில் இன்றைய ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது. ஏப்ரல் 10 தேதி, சின்னசாமி மைதானத்தில் லக்னோ அணியை பெங்களூர் அணி தோல்வியடைந்தது.
இந்த போட்டிக்குப் பிறகு மைதானத்திற்கு வந்த லக்னோ அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், வாயில் விரல் வைத்து `சத்தம் வரக் கூடாது' என்பது போல சைகை செய்தார். நேற்றைய போட்டியில் க்ருணால் பாண்டியவின் கேட்சைப் பிடித்த பிறகு, அதே போல வாயில் விரல் வைத்து சைகை செய்தார் கோலி. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சண்டையிட்ட மூவருக்கும் அபராதம்:
நேற்று போட்டியில் நடந்த சம்பவங்களைவிட, போட்டிக்குப் பிறகு நடந்த விஷயங்கள் தான் இணையத்தை அதிர வைத்துள்ளது. போட்டி முடிந்த பிறகு, லக்னோ அணியின் வீரரான கைல் மேயர்ஸ் விராட் கோலியிடம் பேசிக்கொண்டு வந்தார். இதைப் பார்த்த கவுதம் கம்பீர், விராட் கோலியிடம் பேசவிடாமல் கைல் மேயர்ஸை தனியாக அழைத்துச் சென்றார். இதனால், மைதனாத்திலேயே இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர்.
மேலும் லக்னோ அணியின் பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக், விராட் கோலியுடன் கைக்குலுக்கும் போது வாய்த்தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில், ஐ.பி.எல் நடத்தை விதிகளை மீறியதன் காரணமாக விராட் கோலிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 100 சதவிகிதம் (1.07 கோடி) அபராதமும், கவுதம் கம்பீருக்கு 100 சதவிகிதம் (25 லட்சம்) அபராதமும், நவீன் உல் ஹக்-கிற்கு 50 சதவிகிதம் (1.79 லட்சம்) அபராதமும் விதித்துள்ளது, ஐ.பி.எல் நிர்வாகம்.
ஸ்டோரியும் கமென்ட்டும்:
விராட் கோலி தனது பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். அதில் "Everything we hear is an opinion, not a fact. Everything we see is the perspective, not the truth." என எழுதப்பட்டுள்ளது. இது, கி.பி 161 முதல் கி.பி 180 வரை ரோமானியப் பேரரசை ஆட்சி செய்த மார்கஸ் ஆரேலியஸின் புகழ்பெற்ற வரிகள் ஆகும்.

அதே போல, ஆப்கானிஸ்தான் வீரரும் லக்னோ அணியின் பந்து வீச்சாளருமான நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடைசியாக பதிவிட்டுள்ள இரண்டு படங்களில் கமென்ட் பாக்ஸை ஆஃப் செய்துள்ளார். மேலும், மூன்று நாள்களுக்கு முன்னர் பதிவேற்றிய படத்திலும் கமென்ட் பாக்ஸ் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
தோனிக்குப் பிறகு ரஹானே:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம், சிஎஸ்கே குறித்தும் தோனி குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள இவர், "சி.எஸ்.கே அணி, 2022 சீசனில் ரவீந்திர ஜடேஜாவை அணியின் கேப்டனாக்க முயற்சி செய்தது.

ஆனால், கேப்டனாக விளையாடிய போது, அவரின் செயல்திறன் குறைந்தது. இதனால் தோனியின் ஓய்வுக்குப் பிறகு ரஹானேவை கேப்டனாக வர வேண்டும் என்று நினைக்கிறேன். தோனி போன்ற ஒரு வீரருக்கு கடவுள் கூட உதவ வேண்டும். சி.எஸ்.கே அணி ஐபிஎல் தொடரில் வெற்றிபெற வேண்டும். இந்த வெற்றியோடு தோனி விடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
அதிரடி அமித் மிஸ்ரா:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசிய அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார். இதன் மூலம் மலிங்கா, ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோரை முறியடித்து அதிக விக்கெட் வீழ்த்திய பௌலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ட்வைன் பிராவோ (183) முதலிடத்திலும், சஹால் (178) இரண்டாவது இடத்திலும், அமித் மிஸ்ரா (172) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.