Published:Updated:

RR v SRH: ஆர்ப்பரிப்பை அமைதியாக்கிய சைரன் சத்தம்;ஆட்டத்தின் ஒரே நோபால் போட்டியின் முடிவை மாற்றியதா?!

RR v SRH

ப்ளே ஆப் நெருங்கும் சூழலில் ராஜஸ்தானின் இந்த தோல்வி யாருக்கெல்லாம் சாதகமாகியிருக்கிறது?

Published:Updated:

RR v SRH: ஆர்ப்பரிப்பை அமைதியாக்கிய சைரன் சத்தம்;ஆட்டத்தின் ஒரே நோபால் போட்டியின் முடிவை மாற்றியதா?!

ப்ளே ஆப் நெருங்கும் சூழலில் ராஜஸ்தானின் இந்த தோல்வி யாருக்கெல்லாம் சாதகமாகியிருக்கிறது?

RR v SRH
``You can never never feel, you have won the game until you have won it"

நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இதைச் சொல்லியிருக்கிறார். ஐ.பி.எல் வெற்றி, தோல்வி இடையேயான வித்தியாசம் அந்த 2 புள்ளிகள் மட்டுமல்ல. ஒரு தவறான பந்து, ஒரு கேட்ச் ட்ராப், ஒரு தவறான ஷாட், ஒரு தவறான கணிப்பு அனைத்தையும் மாற்றிவிடும் என்கிற நிதர்சனம் மீண்டும் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. மேலும் ஒரு த்ரில், மேலும் ஒரு கடைசி பந்து வெற்றி.

RRvSRH
RRvSRH

பழைய பட்லரின் ஆட்டம், சஞ்சு சாம்சனின் சிறப்பான பேட்டிங், சாஹலின் அற்புதமான ஸ்பெல் அனைத்துமிருந்தும் ஆட்டம் ராஜஸ்தானின் கைவிட்டுப் போயிருக்கிறது. ராஜஸ்தானின் இந்த தோல்வி சில அணிகளின் ப்ளே- ஆப் நம்பிக்கையைக் கொடுத்திருந்தாலும் இந்த கடைசி நேர பரபர முடிவுகள் பலருக்கு அதிரச்சியையும் கொடுத்திருக்கலாம்.

இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி விளையாடிய முதல் 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகளுடனும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. கடந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறது.

இதுபோன்ற `ப்ளே ஆப்' -க்கு முந்தைய நேர பரம பத ஆட்டங்கள்தாம் ஐ.பி.எல்-லின் சிறப்பம்சம். குஜராத் டைட்டன்ஸுடனான மோசமான படுதோல்விக்குப் பிறகு பல மாற்றங்களுடன் விளையாடியது ராஜஸ்தான். டாஸ் வென்று முதலில் மீண்டும் முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 7 வது முறையாக முதலில் பேட் செய்கிறது ஆர்.ஆர். அதிரடி தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால்- பட்லர் ஜோடி களமிறங்கியது.

RRvSRH
RRvSRH

சில கேட்ச்சுக்கான வாய்ப்புகள் பவுண்டரிகளாக மாறியதுடன் ஆட்டம் தொடங்கியது. பவர்ப்ளேயில் அதிரடி ஆட்டம் காட்டிய ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு சஞ்சு சாம்சன் - பட்லர் ஜோடி ரன்களைக் குவித்தது. கடந்த சீசனின் பட்லர் மீண்டும் உருவெடுக்க, தனது சிறப்பான ஷாட்கள் வழியே தரமான ஆட்டத்தை சஞ்சுவும் கொடுக்க இந்த பார்ட்னர்ஷிப் 138 ரன்கள் சேர்த்தது. பட்லர் 95 ரன்களில் அவுட் ஆக, சாம்சன் 66 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜெய்ப்பூர் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. 215 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது சன்ரைசர்ஸ் அணி.

தொடர் தோல்வி முகம் கண்டு வந்த சன்ரைசர்ஸ் நேற்று சீராக ரன்களைச் சேர்த்து வந்தனர். முதல் 4 பேட்டர்களுமே நம்பிக்கை அளிக்கும் விதமாக பேட்டிங் செய்தனர்.

பேட்டிங்கின் போது இருந்த தீவிரம் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் இல்லை. முருகன் அஷ்வின், குல்தீப் யாதவ் என அணியில் புதிதாக சேர்த்த யாருடைய பந்துவீச்சும் பெரிய திருப்பத்தை அல்ல, தேவையான பங்களிப்பைக்கூட செய்யவில்லை. சாஹல் மற்றும் அஷ்வினின் சுழல் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியைக் கட்டுப்படுத்தியிருந்தது. சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் என்ற சாதனை அவர் வசம் சென்றது. 18-வது ஓவரில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு வெற்றி என்ற எண்ணத்தைக் கொடுத்துச் சென்றார்.

RRvSRH
RRvSRH

2 ஓவர்களில் 41 ரன்கள் என்ற நேரத்தில் இந்த சீசன் ஐ.பி.எல்-லுக்கு புதிதாக வந்த ப்ளிப்ஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கடந்த முறை கிடைத்த வாய்ப்பில் நன்றாக பந்து வீசிய குல்தீப் யாதவ் இம்முறை வீச முயன்ற மூன்று யாக்கர்களும் புல்டாஸாக மாற மூன்றையும் ப்ளிப்ஸ் சிக்சராக்கினார். மொத்தம் 7 பந்துகளில் 25 ரன்கள் விளாசியவர் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவர் 17 ரன்கள் என்ற இலக்கு சந்தீப் சர்மா பௌலிங் சென்னை அணிக்கு எதிராக வென்று கொடுத்ததைப் போல இந்த முறையும் நடக்கும் என நம்பிக்கையுடன் இருந்தனர் ராஜஸ்தான் ரசிகர்கள்.

முதல் பந்தில் வைட் யாக்கர் வீச ஷார்ட் தேர்டு மேன் திசையில் எளிமையான கேட்ச்சை தவறவிட்டார் இம்பேக்ட் ப்ளேயர் மெக்காய். கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திய அப்துல் சமத் அடுத்த பந்தை சிக்சராக மாற்றினார்.

ஜோ ரூட் முயன்றும் அது சிக்சராகிப் போனது. அடுத்த மூன்று பந்துகளையும் துல்லியமாக வீசிய சந்தீப் கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவை என்கிற நேரத்தில் அப்துல் சமத் அடித்த பந்தை பட்லர் கேட்ச் பிடிக்க வெற்றிக் களிப்புடன் சந்தீப் வான் நோக்கி விரல்களை உயர்த்த, அரங்கில் ஒலித்த `சைரன்' சப்தம் வெற்றி ஆர்ப்பரிப்பை அமைதியாக்கியது. நோ பால் காரணமாக மீண்டும் பந்து வீச அழைப்பு விடுக்க, இந்த முறை அப்துல் சமத் பந்தை சிக்சராக்கினார். ஜெய்பூரில் 200 ரன்கள் என்ற நேற்றைய சாதனையை நேற்றே முறியடித்தது சன் ரைசர்ஸ். ஐ.பி.எல் 2023 -ல் ராஜஸ்தான் தன் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக ஹைதராபாத்தில் 202 ரன்கள் அடித்து வென்றிருந்து. அந்த வெற்றிக்கு பதிலடியாக ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வீழ்த்தியிருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

RRvSRH
RRvSRH

அதிர்ச்சியான தோல்வியால் துவண்டு போயினர் ராஜஸ்தான் அணியின் வீரர்கள். நேற்றைய போட்டியில் இரு அணிகளையும் சேர்த்து ஒரே ஒரு நோ பால் மட்டுமே வீசப்பட்டது. ஆனால், அந்த ஒன்று ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்துபோனது. ராஜஸ்தான் அணி தன் பேட்டிங்கை பலப்படுத்த பௌலிங் வலுவிழந்து கிடந்தது. மலிங்கா போன்ற பௌலிங் ஜாம்பவான் பயிற்சியாளராக இருக்கும் ராஜஸ்தானில் ஆட்டத்தை மாற்றும் வேகப்பந்து வீச்சாளர் உருவாகாமல் இருப்பது ஆச்சர்யம். போல்ட் இல்லாமல் போனதும் புதிதாக வந்த முருகன் அஸ்வின் ரன்களை வாரி வழங்கியதும் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள். சந்தீப் சர்மா, போல்ட்டை தவிர வேறு எந்த வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இல்லை. டாஸின் போது, `ஆட்டத்தின் முடிவுகளால் ஆள் மாற்றம் நடக்கவில்லை, சிறிய காயங்கள் காரணமாகதான் இந்த மாற்றம்' எனக் குறிப்பிட்டிருந்தார் சஞ்சு சாம்சன்.

டி-20 பார்மெட்டின் க்ரூசியல் எனச் சொல்லப்படுகிற 19 -வது ஓவரை சில ஆட்டங்களில் சந்தீப்புக்கு வழங்கியிருக்கிறார் சஞ்சு சாம்சன். ஆனால், நேற்றைய தினம் குல்தீப் யாதவ் வீசிய அந்த ஓவர்தான் ஆட்டத்தை மொத்தமாக மாற்றியது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி எடுத்த பல முடிவுகள் சாதகமாக இல்லை. `இம்பாக்ட் ப்ளேயர்' என்கிற வசதியை பல அணிகள் சாதுர்யமாகப் பயன்படுத்த ராஜஸ்தான் அணி இதுவரை அதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறதா என்பது கேள்விக்குறியே. ராஜஸ்தான் அணி இந்த சீசனில் சேஸிங்கைவிட டிபண்ட் செய்வதில்தான் தன்னை வலிமையாக எண்ணியிருந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் பேட்டிங்கின்போது இருந்த நம்பிக்கை பீல்டிங்கின்போது ராஜஸ்தானிடம் இல்லை. ராகுல் திரிபாதியின் ட்ராப், ரன் - அவுட்டின் போது ஸ்டம்பைத் தட்டியது என சஞ்சு செய்த சிறு தவறுகளும்கூட இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக எஞ்சி நிற்கின்றன.

RRvSRH
RRvSRH

`இறுதிவரை வெற்றி யார் வசம்' என்கிற ஐ.பி.எல்லின் பரபரப்பில், ஒரு சிறு மெத்தனம்கூட இல்லாமல் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலுமே துல்லியமும், கவனமும் தேவைப்படுகிற ஒன்று. துல்லியமாக வீசப்படுகிற யாக்கர்களும், வைட் யாக்கர்களும்தான் இங்கு வெற்றிக்கான முகாந்திரங்கள், கொஞ்சம் பிசகினாலும் அது தோல்விக்கான முகாந்திரம்தான். ராஜஸ்தானின் இந்த தோல்வி ஆர்.சி.பி, எல்.எஸ்.ஜி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். 14 போட்டிகளையும் எல்லா அணிகளும் விளையாடி முடிக்கும் வரை இந்த பரமபத ஆட்டம் சூட்டோடுதான் இருக்கும்.

`நாம் தேர்வு செய்கிற 11 நபர்களைவிட, அந்த 11 நபர்கள் அன்றைய தினம் களத்தில் அளிக்கிற பங்களிப்புதான் அனைத்தையும் தீர்மானிக்கிறது' - என்கிற கிரிக்கெட் குறித்த சொல்லாடல் மீண்டும் நிதர்சனமாகியிருக்கிறது.

உங்கள் கணிப்பின்படி, ப்ளே ஆப் செல்லும் வாய்ப்புள்ள நான்கு அணிகள் எவை என கமென்ட்டில் சொல்லவும்.