Published:Updated:

IPL 2023 Preview - RCB: ப்ளே ஆஃப்ஸைக் கடந்து `ஈ சாலா கப் நமதே'வை சாத்தியப்படுத்துமா ஆர்சிபி?

RCB டீம் ( File Photo )

காயங்கள்தான் இம்முறை ஆர்சிபியைக் கூறுபோடுகின்றன. ஓரளவு சமநிலையோடு காணப்பட்ட அணி வில் ஜேக்ஸ், பட்டிதர், மேக்ஸ்வெல், ஹாசில்வுட் என ஒருவர்பின் ஒருவது இருப்பும் கேள்விக்குறியாகும் போது, அணி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கிறது.

Published:Updated:

IPL 2023 Preview - RCB: ப்ளே ஆஃப்ஸைக் கடந்து `ஈ சாலா கப் நமதே'வை சாத்தியப்படுத்துமா ஆர்சிபி?

காயங்கள்தான் இம்முறை ஆர்சிபியைக் கூறுபோடுகின்றன. ஓரளவு சமநிலையோடு காணப்பட்ட அணி வில் ஜேக்ஸ், பட்டிதர், மேக்ஸ்வெல், ஹாசில்வுட் என ஒருவர்பின் ஒருவது இருப்பும் கேள்விக்குறியாகும் போது, அணி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கிறது.

RCB டீம் ( File Photo )
எப்போதுமே எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாத வகையில் செயல்படும் ஆர்சிபியின் நிலை இவ்வருடம் மாறுமா?

ஸ்டார் வீரர்கள் கூடவே பவனி வந்திருப்பினும், 15 சீசன்களில் எட்டு முறை ப்ளே ஆஃப்பை எட்டியிருப்பினும், மூன்று முறை இறுதிப் போட்டியை முற்றுகையிட்டிருப்பினும் 'கோப்பைகளற்ற அணி' என்ற சாபத்தோடுதான் ஐபிஎல்லில் அவர்களது சவாரி தொடர்கிறது. ஹாட்ரிக்காக கடந்த மூன்று சீசன்களிலுமே ஆர்சிபி ப்ளே ஆஃப்பிற்கு முன்னேறியது சற்றே நம்பிக்கை கீற்றை ஒளிரவிட, பிரதான அணியை அப்படியே வைத்துக் கொண்டு சில புனரமைப்புகளை மட்டும் ஏலமேஜையில் நிகழ்த்தியிருந்தனர். இதனால் ஓரளவு அணி உருவாரம் பெற்றாலும், கடந்த ஓரிரு நாள்களில் வந்த முக்கிய வீரர்கள் காயமடைந்த செய்திகள் அணியினை வெகுவாக உருக்குலைத்திருக்கிறது.

Faf
Faf
RCB

இத்தகைய இடையூறுகளை மீறி அடுத்தடுத்த எட்டு வைத்து தனது முதல் கோப்பையை ஆர்சிபியால் இம்முறையேனும் கையிலேந்த முடியுமா, எஞ்சியுள்ள படை அதற்கான வலிமை தாங்கியதா என்பது குறித்த ஓர் அலசல்.

பலங்கள்:

கோலியில் தொடங்கி ஹர்சல் பட்டேல் வரை பேட்டிங் படை, தொடர் வண்டியாக நீளுகிறது. இதனால் ஒவ்வொரு பெட்டியாக எதிரணி பௌலர்கள் முயன்று விடுவித்தாலும் எஞ்சிய கம்பார்ட்மென்ட்கள் இலக்கை நோக்கி அணியை எடுத்துச் செல்ல வாய்ப்புகள் அதிகம். கடந்த சில சீசன்கள் போல் அல்லாமல் கோலியும் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பி இருப்பது ஆர்சிபியின் பேட்டிங் சங்கிலியின் இணைப்புகளை உறுதி ஆக்கியுள்ளது.

Virat Kohli - விராட் கோலி
Virat Kohli - விராட் கோலி
கோலி ஒரு முனையில் தனது இன்னிங்ஸைக் கட்டமைத்து ரன்கள் வந்து கொண்டே இருப்பதை உறுதி செய்ய, இன்னொரு முனையிலிருந்து மற்றவர்களால் ரன்வேட்டை வேகம் எடுத்தாலே எதிரணி திணற வேண்டியதிருக்கும்.

டூ ப்ளஸ்ஸி - கெய்க்வாட் இணை சிஎஸ்கேவுக்காக ஆடிய போட்டிகளில் கெய்க்வாட் தன்னை நிலைநிறுத்த எடுக்கும் நேரத்தில் தொய்வு ஏற்படாத அளவு டூ ப்ளஸ்ஸி ரன்ரேட்டை முடுக்குவார். கடந்த சீசனில் ஆர்சிபியில் அந்த டூ ப்ளஸ்ஸி முழுமையாக வெளிப்படவில்லை. சமீபகாலமாக 150-க்கும் அதிகமான ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்களைக் குவித்து வரும் டூ ப்ளஸ்ஸி, கெய்க்வாட்டுடன் ஆன அதே பழைய பாணியில் கோலியுடனான தனது பார்ட்னர்ஷிப்களை எடுத்துச் சென்றாலே தேக்கமின்றி ரன்கள் குவிக்கப்படும்.

பெஹ்ரென்ட்ராஃபை விடுவித்த தவறினை டாப்லீயை ஹேசல்வுட்டுக்கு பேக் அப்பாக உள்ளே கொண்டு வந்து நேர் செய்திருந்தது ஆர்சிபி. ஹேசல்வுட் காயத்திலிருந்து மீண்டு வருவதால் தற்போது அவரும் ஆடமுடியாத சூழல் உருவாகி உள்ளது. ஆயினும் அதனால் எந்தப் பின்னடைவும் ஏற்பட்டு விடாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் டாப்லி.

Siraj | RCB | IPL 2021
Siraj | RCB | IPL 2021

சிராஜ் கடந்த சீசனில் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் விட்டிருந்தாலும் இந்திய ஜெர்ஸியில் அவரது சமீபத்திய செயல்பாடுகள் ஆர்சிபிக்கு நம்பிக்கையை விதைக்கின்றன. கடந்த ஓராண்டில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தவிர்க்க முடியாத தேர்வாகிவிட்ட சிராஜ் பவர்பிளேயில் ஆர்சிபியின் கூர்மிகு ஆயுதம். அதே ரிதத்தோடு தாளம் தப்பாமல் அவர் தொடர்ந்தால் பவர்பிளேயில் அவர் அதிஆபத்தானவரே.

Hasaranga
Hasaranga

சுழலுக்குத் தலைமையேற்கும் ஹசரங்கா பேட்டிங் மற்றும் பௌலிங் ஆகிய இருவழிப் பாதைகளிலுமே எதிரணியைப் பந்தாடி ஆர்சிபியை முன்னால் நகர்த்துபவர். கடந்த சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிரான அவரது 5/18 ஸ்பெல் அவரால் ஏற்படுத்தக்கூடிய சேதாரத்திற்கான ஆதாரம். சுழலுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்களில் இன்னமும் செறிவூட்டப்பட்ட அவரது ஸ்பெல்கள் வெற்றிக்கான அடித்தளமாகும். ஷபாஸ் அஹமத்தும் அவருக்குத் தோள் கொடுப்பதால் சுழல் படை வலுவாகவே உள்ளது.

மேக்ஸ்வெல்லுக்கான மாற்று வீரராக வில் ஜாக்ஸை ஏலத்தில் 3.2 கோடிக்கு ஆர்சிபி வாங்க, காயத்தால் அவர் விளையாட முடியாத சூழல் உருவாக அவருக்குப் பதிலாக மைக்கேல் பிரேஸ்வெல் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். தற்சமயம் மேக்ஸ்வெல் 100 சதவிகிதம் உடல்தகுதியோடு இல்லை என்ற செய்தி அவருக்குப் பதிலாக பிரேஸ்வெல் விளையாடக் கூடிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மத்தியவரிசையில் அதிரடியாக ரன்களைக் குவிப்பவர், ஆஃப் ஸ்பின்னர் எனப் பன்முக வீரராகப் பங்களிப்பவர்.

Maxwell
Maxwell
IPL

பலவீனங்கள்:

காயங்கள்தான் இம்முறை ஆர்சிபியைக் கூறுபோடுகின்றன. ஓரளவு சமநிலையோடு காணப்பட்ட அணி வில் ஜேக்ஸ், பட்டிதர், மேக்ஸ்வெல், ஹேசல்வுட் என ஒருவர்பின் ஒருவரது இருப்பும் கேள்விக்குறியாகும் போது, அணி ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்கிறது.

சர்வதேச பௌலர்களை எதிர்கொண்ட அனுபவமுள்ள கோலி, டூ ப்ளஸ்ஸி, மேக்ஸ்வெல் மூவரும் டாப் 4-ல் இடம் பெற்றிருந்தனர். கடந்த சீசனில் நாக்அவுட் போட்டியில் சதத்தோடு தன்னை நிருபித்திருந்த பட்டிதரும் அவர்களோடு இணைந்த போது அணி வலுவானதாகக் காணப்பட்டது. தற்சமயம் மேக்ஸ்வெல் மற்றும் பட்டிதரால் ஆட முடியாதெனில் ஓப்பனர்கள் மீதான பளு கூடும். மேக்ஸ்வெல் இடத்தை பிரேஸ்வெல் ஓரளவேனும் நிரப்புவார். ஆனால் பட்டிதருக்கு மாற்றாக ஒரு சிறப்பான இந்திய பேட்ஸ்மேன் இல்லாத குறை, பூதக் கண்ணாடியால் பெரிதுபடுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சுயாஸ் பிரபுதேஷாய் அவருக்கான மாற்று வீரராக இறங்க வாய்ப்புண்டு. உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு ஒளிர்ந்த வீரரென்றாலும் ஐபிஎல் மேடையின் தீவிரம் அவரை எப்படி ஆட்டுவிக்கும் என்பது கேள்விக்குறியே.

மொத்தத்தில் மத்திய வரிசை முடங்குவது ஓப்பனர்கள் மற்றும் பின்வரிசை வீரர்கள் மீது அழுத்தமாகக் கடத்தப்பட்டு தவறுகள் நடந்தேற சாத்தியம் உண்டாகும்.

கோலியின் சுழல் மற்றும் லெஃப்ட் ஆர்ம் பௌலரை எதிர்கொள்வதற்கான பலவீனங்கள் வேறு அவ்வப்போது மின்னி மறைந்து அணிக்கான அபாய விளக்கை ஒளிர விடுகிறது.
DK
DK
RCB

ஆர்சிபியின் பேட்டிங் யூனிட் கடந்தாண்டு ஒரு லைவ் கான்செர்ட்டை ஒத்திருந்தது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமற்ற மெதுவான பாடல்களைப் பாடி இறுதியில் உச்சகட்டத்தை அங்கே எட்டுவது போலத்தான் இங்கேயும் நடந்தேறியது. கோலி, டூ ப்ளஸ்ஸி மெதுவாகத் தொடங்க அது மத்திய வீரர்களால் சற்றே வேகம் எடுக்க இறுதிக்கட்டத்தில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் மாற்றி, போட்டியை தினேஷ் கார்த்திக் ஆர்சிபியின் பக்கம் திருப்பிவிட்டார்.

டூ ப்ளஸ்ஸி கூட "73 ரன்களை நான் அடித்திருந்த சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ரிட்டயர்ட் அவுட் ஆகி, தினேஷ் கார்த்திக்கை உள்ளே கொண்டு வரலாம் என நினைத்தேன்" என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு நம்பிக்கையை தினேஷ் கார்த்திக் சம்பாதித்திருந்தார்.

அதன் தொடர் நிகழ்வாகவே இந்திய அணிக்குள் திரும்பும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அங்கே அவரால் கோலோச்ச முடியவில்லை. அதன் பிறகு பல மாதங்களாக மறுபடியும் அவருக்கும் மைக்குக்குமான இடைவெளி குறைந்து அவருக்கும் பேட்டுக்குமான இடைவெளி அதிகரித்திருக்கிறது. இந்தாண்டும் அவரையும் ஹசரங்காவையுமே ஃபினிஷிங்கில் ஆர்சிபி நம்பியுள்ளது. தினேஷ் கார்த்திக் கடந்தாண்டைப் போல் ஆடமுடியாமல் போனால் அது அணிக்கு மிகப் பெரிய பாதகமாக மாறும்.

2021-ல் பர்ப்பிள் படேல் எனக் கொண்டாடப்பட்ட ஹர்சல் படேல் சமீப காலமாகவே ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கே உண்டான அச்சுறுத்தலோடு இல்லை. அவரது ஸ்லோ பால்களையும் கட்டர்களையும் பேட்ஸ்மேன்கள் வாசித்து அறியத் தொடங்கியது அவருக்கான பின்னடைவானது.

Harshal
Harshal
RCB
கடந்த சீசனில் 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். எக்கானமி 7.66 தான் என்றாலும் சில முக்கியத் தருணங்களில் இவரது ஓவர்களைக் குறிவைத்து பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்வது தொடர்ச்சியான நிகழ்வாகி விட்டது.

இந்திய அணியின் கதவுகளும் இவருக்குச் சாத்தப்பட்டதற்கான காரணமும் அதுதான். ஸ்லோ பால்கள் தவிர்த்த வேறு சில வித்தகங்களோடு அவர் திரும்பினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கடந்த ஆண்டின் மோசமான பவர்பிளே எக்கானமியையும் (8.46), டெத்ஓவர் எக்கானமியையும் (11.25) ஆர்சிபி தன்வசமே வைத்திருந்தது. இந்த முறையும் பௌலிங் யூனிட்டில் பெரிதான மாற்றங்கள் இல்லை. ஆக, அதே தவறுகள் திரும்ப நடந்தேறி முன்னிலும் மோசமான விளைவுகளை உண்டாக்கும் அபாயம் உள்ளது.

RCB
RCB
IPL

ஒட்டுமொத்தமாகச் சொன்னால் ஒரிரு நாளில் பலம் என்னும் கேடயம் நீக்கப்பட்டு ஆர்சிபியின் பலவீனங்கள் முன்னிலும் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. காயங்கள் பல கைகளாக நீண்டு ஆர்சிபியின் ப்ளேயிங் லெவனைக் குலைத்துப் போட்டு அணியை வடிவிழக்கச் செய்திருக்கின்றன. பேக்அப்புகள் பிளேயிங் லெவனுக்குள் நுழைய இம்பேக்ட் ப்ளேயருக்கான சப்ஸ்டிட்யூட்டுக்குக் கூட சரியான ஆள் இல்லாமல் இறங்குகிறது ஆர்சிபி. பட்டிதரும் ஹேசல்வுட்டும் விரைந்து மீண்டு வருவதே அவர்களது ஒரே வேண்டுதலாக இத்தருணத்தில் உள்ளது.

இத்தனை சவால்களையும் தாண்டி ஆர்சிபி தரமான சம்பவத்தை அரங்கேற்ற வேண்டுமென்பதே எங்கோ ஓர் மூலையில் ஈனஸ்வரத்தில் கேட்டுக் கொண்டிருக்கும் "ஈ சாலா கப் நம்தே" கோஷத்தை எழுப்பும் ரசிகனின் விருப்பமும்!