சேட்டை புடிச்ச பையன் சார்!
மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் பெங்களூர் அணி பந்து வீசியது. இன்னிங்ஸின் 11வது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் 5வது பந்தை ஜிதேஷ் ஷர்மா எதிர்கொண்ட போது, பந்து நேராக அவரது காலில் பட்டது. இதற்கு, ஆட்ட நடுவர் அவுட் என கையை தூக்கினார். பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த விக்கெட்டிற்கு DRS ரிவ்யூ கேட்டது.

இந்த ரிவ்யூ-வின் போது ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலியும் மேக்ஸ்வெல்லும் மைதானத்திலேயே "ராக்-பேப்பர்-சிஸ்ஸர்" என்ற விளையாட்டை விளையாடினர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. போட்டிக்கு பின்னர் மேக்ஸ்வெல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை டேக் செய்து, "கோலி மோசமாக கணிக்கின்றார். எப்போதும் பேப்பரையே காண்பிக்கிறார்" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
வார்னரின் அதிரடி:
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்த 2023 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. வழக்கம் போல, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார். இந்த ஆட்டத்தில் 41 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். இதுவரை, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 26 இன்னிங்ஸ்களில் 1042 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம், கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில், ரோஹித் சர்மா 32 இன்னிங்ஸ்களில் 1040 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆப்பிள் சி.இ.ஓ-விற்கு பரிசளித்த டெல்லி:
டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியை, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் நேரில் கண்டுகளித்தார். இவரின் வருகையைக் கண்டு மகிழ்ச்சியடைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம், பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளது. இந்த பேட்டில் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன், சவுரவ் கங்குலி, டேவிட் வார்னர், ப்ரீத் ஷா உள்ளிட்ட பல வீரர்களின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.
இது இஷாந்த் சர்மாவின் கம்பேக்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக களமிறங்கினார், இஷாந்த் சர்மா. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் நேற்று விளையாடியுள்ளார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசியதில், 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த கம்பேக் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதையும் வென்று கலக்கியுள்ளார். இதன் மூலம், மீண்டும் ஐபிஎல் தொடரில் இனிய தொடக்கத்தை அமைத்துள்ளார், இஷாந்த் சர்மா.

`வெறித்தனம்' விராட்:
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு, நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கேப்டனாக களமிறங்கினார் விராட் கோலி. 556 நாட்களுக்கு பிறகு, ஆர்.சி.பி அணியின் கேப்டனாக தனது முதல் வெற்றியை விராட் கோலி பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டனாக 6,500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 600 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.
இது மட்டுமில்லாமல், ஐபிஎல் தொடரில் 30+ ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 221 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், 100வது முறையாக 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.