'சரித்திர நாயகன்' ஜெய்ஸ்வால்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். இந்த சாதனையை பாராட்டாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல முடியும். நிதிஷ் ராணா வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே 26 ரன்களை எடுத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் ஓவரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். இந்த நடப்பு ஐபிஎல் தொடரில், 575 ரன்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரரும், ஜெய்ஸ்வால் தான்.

பட்லருக்கு அபராதம்:
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஜோஸ் பட்லர் ரன்- அவுட் ஆனார். ஹர்ஷித் வீசிய இரண்டாவது ஓவரின் 4வது பந்தை ஜோஸ் பட்லர் எதிர்கொண்டு விளையாடினார். பந்தை அடித்து விட்டு ரன் ஓடிய போது, கொல்கத்தா வீரர் ரஸல் அவரை ரன் அவுட் செய்தார்.பெவிலியனுக்கு திரும்பும்போது, இவர் பௌண்டரி லைனை பேட்டால் சேதப்படுத்தினார்.
ஐபிஎல் விதிமுறையை மீறியதற்காக, ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்துள்ளது, ஐபிஎல் நிர்வாகம். போட்டிக்கு பிறகு பேசிய ஜெய்ஸ்வால், "இன்று, என்னுடைய தவறான அழைப்பின் காரணமாக பட்லர் தன்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தார். நான் அதை மிகவும் மதிக்கிறேன். இது விளையாட்டில் நடக்கும் என்று நமக்கு தெரியும். யாரும் அதை வேண்டுமென்றே செய்வதில்லை," எனக் கூறினார்.

சர்ஃபிங் செய்த கான்வே!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவான் கான்வே, நேற்று முன்தினம் மகாபலிபுரத்திற்கு சென்றுள்ளார். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான மகாபலிபுரத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அவர், கடற்கரை கோவில் மற்றும் அங்கிருந்த கட்டடக்கலையை பார்வையிட்டார். மகாபலிபுரம் கடற்கரையில் சர்ஃபிங் செய்து விளையாடினார், கான்வே. இவர் சர்ஃபிங் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சஹலின் புதிய அத்தியாயம்!
நேற்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹல், அசத்தலான 4 ஓவர்களை வீசினார். இதில் 25 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் (187) வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ட்வைன் பிராவோ-வை கடந்த ஆட்டத்திலேயே சமன் செய்திருந்தார். சஹலுக்கு பிறகு, பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
வரலாற்றில் இன்று!
கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. அதுவரை சிறப்பாக விளையாடி வந்த ஷேன் வாட்சன், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஷர்துல் தாகூரின் விக்கெட்டை வீழ்த்தினார் மலிங்கா. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்டது, சி.எஸ்.கே அணி.

இன்றைய தினம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் ஸ்பெஷல். இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, மும்பை அணியின் பிளே-ஆஃப் கனவு நெருங்கி வரும். இந்த சிறப்பான நாளில் மும்பை அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.