ஆர்.சி.பி-யின் KGF கூட்டணி:
இந்த 2023 நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டூ ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இத்தொடரில் 5 வது முறையாக, 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியுள்ளனர்.
விராட் கோலி மற்றும் டூ ப்ளெஸ்ஸிஸ் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 148 ரன்கள் அடித்தனர். இதே ஜோடி இணைந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் 137 ரன்கள் எடுத்தது.நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டூ ப்ளெஸ்ஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து 127 ரன்கள் அடித்தனர். மேலும் இந்த ஜோடி, சி.எஸ்.கே அணிக்கு எதிராகவும் 126 ரன்களை எடுத்து அசத்தியது. இதே ஜோடி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராகவும் 115 ரன்களை விளாசியது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும்.

அமெரிக்காவில் சி.எஸ்.கே: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரைப் போலவே, அமெரிக்காவிலும் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடர் வருகின்ற ஜுலை மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் விளையாடும் டெக்சாஸ் மாகாண அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது.
இந்த அணிக்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அணியின் லோகோ-வை சி.எஸ்.கே அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மிரட்டும் டூ ப்ளெஸ்ஸிஸ்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டூ ப்ளெஸ்ஸிஸ், 39 பந்துகளில் 62 எடுத்து அசத்தினார். இதன் மூலம், டி20 போட்டிகளில் 9000 ரன்களைக் கடந்துள்ளார். டூ ப்ளெஸ்ஸிஸ், 9,000 ரன்களைக் கடக்கும் 17வது வீரர் ஆவார். 317 இன்னிங்ஸ்களில் விளையாடி இப்பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், இந்த ஐபிஎல் 2023 தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 405 ரன்களை அடித்திருக்கிறார். வேறு எந்த வீரரும் இந்த சீசனில் 300 ரன்களைக்கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சி.எஸ்.கே-வின் சிங்கப் பாதை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சி.எஸ்.கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. சி.எஸ்.கே அணி, இத்தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 235 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி எடுத்த மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர், இதுவே. இந்த ஆட்டத்தின் மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, ரஹானே ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த ஆட்டத்தின் மற்றொரு நாயகன், கான்வே. 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்து 4 அரைசதங்கள் அடிக்கும் 9-வது வீரரானார், டெவான் கான்வே. டு பிளெஸ்ஸிஸ்க்கு பிறகு சி.எஸ்.கே அணிக்காக இந்த செயலை செய்யும் வீரர், கான்வே தான்.

போல்ட் & கோலியின் 100: நேற்று சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாடியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான ட்ரென்ட் போல்ட், 4 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை 84 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலி, இதே ஆட்டத்தில் இரண்டு கேட்ச்களைப் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் 100 கேட்ச்களைப் பிடித்த முதல் ஆர்.சி.பி வீரர் என்ற பெருமையைப் பெற்றார், கோலி.