லக்னோ vs கே.கே.ஆர் இடையேயான நேற்றைய ஆட்டத்தில் த்ரில் வெற்றியோடு பிளேஆஃப்ஸின் எலிமினேட்டர் போட்டிக்குத் தகுதி பெற்றது லக்னோ அணி. லக்னோ அணி 8 விக்கெட்டுகளுக்கு 177 என இலக்கை நிர்ணயிக்க, ஒரே ரன்னில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டது கே.கே.ஆர்.
இதில் 33 பந்துகளில் 67 ரன்களைச் சேர்த்த கொல்கத்தா அணியின் ரிங்கு சிங்கின் ஆட்டம் வீணானது என்றாலும் இந்திய அணிக்கான ஒரு சிறந்த ஃபினிஷர் உருவாகிவருவதை ரிங்கு சிங் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருந்தார். இதனால் ரிங்கு சிங்கின் நேற்றைய ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சமூகவலைத்தளங்களிலும் ரிங்கு சிங்கிற்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரே, நேற்றைய போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங்கைப் பார்த்துப் பாராட்டியிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து ரிங்கு சிங் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவுதம் கம்பீர், "என்ன ஒரு முயற்சி, ரிங்கு சிங்கின் திறமை அபாரமானது" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல ஹர்பஜன் சிங், "ஐபிஎல் வரலாற்றில் புகழ்பெற்ற மேட்ச் ஃபினிஷர்கள் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துவிட்டார் ரிங்கு சிங். இந்த சீசனில், அவரது அபாரமான ஆட்டங்களின் மூலம், ஆண்ட்ரே ரஸல், கீரன் பொல்லார்ட் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்த சீசனில் அவர், மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுவிட்டார். அவருக்கு நான் தலைவணங்குகிறேன். ரிங்கு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐபிஎல் 2024ல் தவிர்க்க முடியாத சிறந்த வீரராக ரிங்கு சிங் இருப்பார்" என்று பாராட்டியுள்ளார்.
ரிங்கு சிங்கின் ஆட்டம் குறித்து உங்களது கருத்துகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.