ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காயத்தால் அவதியுற்று வந்த இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லிக்குப் பதிலாக கேதர் ஜாதவை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் மராத்தி மொழியில் கமென்டேட்டராக பணியாற்றி வரும் கேதர் ஜாதவ் திடீரென ஐ.பி.எல்-இல் கம்பேக் கொடுக்கவிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கேதர் ஜாதவ் சென்னை அணிக்காக ஆடிய போது அவரின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் சென்னை அணியுமே அவரை 2020 சீசனோடு விடுவித்துவிட்டது. 2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணி அவரை அவரின் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கே வாங்கியது. அங்கே கிடைத்த சில வாய்ப்புகளிலும் அவர் சரியாக பர்ஃபார்ம் செய்யவில்லை. இதனால் அங்கிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
2022 சீசனுக்கு முன்பாக மெகா ஏலம் நடந்திருந்தது. இந்த மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. இந்த 2023 சீசனுக்கு முன்பாக ஒரு மினி ஏலம் நடந்திருந்தது. அதிலும் கேதார் ஜாதவை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. தொடர்ச்சியாக விற்கப்படாத வீரராகவே இருந்தார்.

இந்தச் சமயத்தில்தான் கேதர் ஜாதவ் ஒரு பேட்டியில், "நான் 10-12 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிவிட்டேன். அதுவே எனக்கு பெரிய திருப்தியைக் கொடுத்திருக்கிறது. மேலும், ஐ.பி.எல் ஆடாவிட்டால் இந்த உலகமே முடிந்துவிட்டதை போலெல்லாம் வருந்தத் தேவையில்லை.
ஒரு கிரிக்கெட்டருக்கு இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்பதுதான் கனவாக இருக்க வேண்டுமே தவிர, ஐ.பி.எல்-இல் ஆட வேண்டும் என்பதெல்லாம் கனவாக இருக்கக்கூடாது. இந்திய அணியில் உங்களின் நுழைவைக் கொஞ்சம் வேகப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே ஐ.பி.எல் உதவும்" என்று பேசியிருந்தார்.
வாய்ப்புகள் கிடைக்காததால் மராத்தி மொழியில் கமென்டரி செய்து கொண்டிருந்த கேதர் ஜாதவை இப்போது ஆர்சிபி அணி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர்சிபி அணியில் மாற்று வீரர்களாகத் திடீரென உள்ளே வந்தவர்கள் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹீரோக்களான வரலாறும் இருக்கிறது.

2011-ல் வேகப்பந்து வீச்சாளர் டிர்க் நேனஸ்க்குப் பதில் கெய்லை அணிக்குள் கொண்டு வந்தார்கள். அந்த சீசனில் மட்டும் கெய்ல் 608 ரன்களை அடித்திருந்தார். அதன்பிறகும் அதிரடி சூறாவளியாக பெங்களூர் அணிக்காக முக்கிய வீரராக ஆடியிருந்தார்.
கடந்த சீசனில் லவ்னித் சிசோடியாவிற்கு பதில் ரஜத் பட்டிதரை எடுத்திருந்தார்கள். அவர் வெறும் 8 போட்டிகளில் 333 ரன்களைக் குவித்து அசத்தியிருந்தார். இவர்களின் வரிசையில் இப்போது ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கும் கேதர் ஜாதவும் கலக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.