மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றிருந்தது.
அந்தப் போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் ஒரு ஓவர் கூட முழுவதுமாக வீசமுடியாமல் காயமடைந்திருந்தார். வேகப்பந்துவீச்சாளரான அவர், கடந்த ஐ.பி.எல் சீசனுக்கு முன்பு நடத்தப்பட்ட ஐ.பி.எல் ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை.

அதன் பிறகு காயத்திலிருந்து குணமடைந்து சர்வதேச போட்டிகளுக்குக் கடந்த ஜூலை மாதம் வந்தார். செப்டம்பர் மாதம் முதல் வாரத்திலேயே மீண்டும் காயம் ஏற்பட்டுக் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடிய தீபக் சஹார் 2 போட்டிகளில் விளையாடி மீண்டும் காயமடைந்தது குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, ”சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் தங்களது காயங்களின் மீது மருத்துவர்களை விடக் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் உங்களுக்குக் குணமாகிவிட்டது என்று கூறினாலும் முழுமையாக உங்களை நீங்களே பரிசோதித்துவிட்டு எந்தவித தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாடும் வகையில் அணிக்குத் திரும்ப வேண்டும்.

6 - 7 மாதங்கள் எந்தவித போட்டிகளிலும் விளையாடாமல் சிகிச்சை பெறுகிறார்கள். பின் மீண்டும் விளையாட வந்து குறைந்தபட்சம் நான்கு போட்டிகள் கூட விளையாட முடியாமல் மீண்டும் காயமடைந்து பெங்களூருவிற்குச் சென்றுவிடுகிறார்கள். இதுபோன்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கேப்டன், அணி நிர்வாகம், பிசிசிஐ என்று பலரும் இதில் இணைந்து வீரர்களின் உடல்நலனுக்குக் கவனம் செலுத்தும்போது வீரர்கள் பொறுப்பான முறையில் நடந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் பல இளம் வீரர்களை அணியில் எடுப்பதற்கான வாய்ப்புகளும் குறைகின்றன" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.