ஐ.பி.எல் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 4 போட்டிகள் மட்டுமே மிச்சமிருக்கிறது. அவையும் இன்னும் 48 மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், இன்னமும் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெறப்போகும் அணிகள் எவை என்பதில் குழப்பம் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

குஜராத் அணி மட்டும்தான் ப்ளே ஆப்ஸிற்கு தகுதிப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் தங்களின் கடைசி லீக் போட்டியில் ஆடியிருந்தனர். அந்தப் போட்டியின் முடிவு ப்ளே ஆப்ஸ் ரேஸை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தானும் பஞ்சாபும் மோதிய அந்த போட்டியில் சேஸ் செய்த ராஜஸ்தான் அணி கடைசி ஓவர் வரை சென்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 187 ரன்களை அடித்திருந்தது. அந்த அணி 50 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சமயத்தில் கூட்டணி அமைத்த ஜிதேஷ் சர்மாவும் சாம் கரனும் நின்று விக்கெட் விடாமல் கூட்டணியை கட்டமைத்தனர். இருவரும் இணைந்து 64 ரன்களை சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் ஷாரூக்கான் அதிரடியாக 23 பந்துகளில் 41 ரன்களை எடுத்து அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தினார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 187 ரன்களை எடுத்திருந்தது.

ராஜஸ்தான் அணி கட்டாயம் வென்றே ஆக வேண்டிய சூழலில் களமிறங்கியது. பஞ்சாபுக்கும் அதேதான். முக்கியமான போட்டியில் முக்கிய வீரரான பட்லர் டக் அவுட் ஆனாலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் படிக்கலும் நின்று ஆடினர். இருவருமே அரைசதத்தை கடந்தனர். கடைசிக்கட்டத்தில் ஹெட்மயர் அதிரடியாக ஆட 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 14 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளில் வென்று ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளை பெற்று ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் இன்னும் நீடிக்கிறது. பஞ்சாப் அணி கட்டாயம் வென்றாக வேண்டிய இந்தப் போட்டியில் தோற்றதால் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
70 லீக் போட்டிகளில் 66 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. ஆனால், இன்னமும் குஜராத்தை தவிர எந்த அணியும் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இதில், பஞ்சாப், சன்ரைசர்ஸ், டெல்லி ஆகிய அணிகள் முழுமையாக ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. ஆக,
மீதமிருக்கும் 6 அணிகள் ப்ளே ஆப்ஸில் எஞ்சியிருக்கும் 3 இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இன்று சென்னை அணி இன்று எதிர்கொள்கிறது. குழப்பங்கள் எதுவும் இல்லாமல் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமெனில் சென்னை அணி இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும். ரன்ரேட்டையும் கொஞ்சம் பார்த்துக் கொண்டால் இரண்டாம் இடத்தைப் பிடித்து முதல் தகுதிச்சுற்றுக்கே தேர்வாகிவிடலாம். தோற்றால் நிலைமை கொஞ்சம் மோசமாகும். ஏகப்பட்ட கால்குலேட்டர் கணக்குகளுக்குள் செல்ல வேண்டியிருக்கும்.
இரவு நடக்கும் இன்னொரு போட்டியில் கொல்கத்தாவும் லக்னோவும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 103 ரன்கள் அல்லது அதற்கு மேலான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பில் நீடிக்க முடியும். கொஞ்சம் குறைவான வித்தியாசத்தில் வென்றாலும் பிரயோஜனம் இல்லை. சென்னைக்கு என்ன கதையோ அதேதான் லக்னோவுக்கும். போட்டியை வென்றே ஆக வேண்டும். இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டுமெனில் சென்னையை விட அதிகமான ரன்ரேட்டை கொண்டிருக்க வேண்டும். தோற்றால் கால்குலேட்டரும் கையுமாக சுற்ற வேண்டும்.
மும்பை அணி நாளை சன்ரைசர்ஸை வீழ்த்தியே ஆக வேண்டும் அதுவும் நல்ல ரன்ரேட் வரும் வகையில். இல்லையேல் மும்பைக்கு கஷ்டம்தான். ஒருவேளை மும்பை தோற்றுவிட்டால் பெங்களூர் அணிக்கு பிரச்சனையே இல்லை. அவர்கள் குஜராத்தை வென்றால் மட்டுமே போதும்.
ஆர்சிபியும் மும்பையும் தங்களின் கடைசிப் போட்டியில் தோற்றால் மட்டுமே ராஜஸ்தான் அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும்.
கடைசி லீக் போட்டியான பெங்களூர் Vs குஜராத் போட்டி முடியும் வரை ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெறப்போகும் அணிகளின் முழுமையான பட்டியல் நமக்கு தெரியவரப் போவதில்லை.

அதுவும் நல்லதுதான். ரன்னிங்...சேஸிங்...ஃபயரிங் என லீக் போட்டியின் க்ளைமாக்ஸ் அனலாக தகிக்கப் போகிறது