Published:Updated:

PBKSvRCB: `ஆரஞ்சும் எங்களுக்குத்தான் பர்ப்பிளும் எங்களுக்குத்தான்' - ஆர்சிபி மாஸ் காட்டியது எப்படி?

ஆர்சிபியில் ஆரஞ்சுக் கேப்பினை டூ ப்ளஸ்ஸிஸும் பர்ப்பிள் கேப்பினை சிராஜும் கைப்பற்ற தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி.

Published:Updated:

PBKSvRCB: `ஆரஞ்சும் எங்களுக்குத்தான் பர்ப்பிளும் எங்களுக்குத்தான்' - ஆர்சிபி மாஸ் காட்டியது எப்படி?

ஆர்சிபியில் ஆரஞ்சுக் கேப்பினை டூ ப்ளஸ்ஸிஸும் பர்ப்பிள் கேப்பினை சிராஜும் கைப்பற்ற தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி.

டூ ப்ளஸ்ஸிஸின் காயத்தால் 556 நாட்களுக்குப் பின் கேப்டனாக கோலி வழிநடத்த பஞ்சாப்பை பஞ்சாப்பில் வைத்தே வீழ்த்தி இரு புள்ளிகளை தனதாக்கி சிஎஸ்கேவிடம் பெற்ற காயத்திற்கு சற்றே மருந்திட்டுக் கொண்டுள்ளது ஆர்சிபி.
RCB
RCB

ரன்களுக்கான உத்திரவாதத்தை சேதாரம் இல்லாத ஸ்ட்ரைக் ரேட்டோடு தந்து விடும் டூ ப்ளஸ்ஸிஸ், புதுப் பந்தில் ரத்தம் பாய்ச்சுவதோடு மட்டுமின்றி டெத் ஓவர்களிலும் அணிக்கான ரட்சகராகும் சிராஜ் - இவர்களைச் சுற்றி மட்டுமே அணி தற்சமயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சுக் கேப்புக்கான பந்தயத்தில் டூ ப்ளஸ்ஸிஸிற்கு அடுத்து இருப்பவர் கோலி தான். இருப்பினும் கேஎல் ராகுலின் பாதிப்பின் நீட்சி போல கோலியின் இந்த சீசன் ஆட்டங்கள் இருந்து வருகின்றன. பவர்பிளேயில் அதிலும் வேகப் பந்து வீச்சுக்கு மட்டும் பாய்பவர் ஸ்பின்னர்களைக் கண்டால் பதுங்கி விடுகிறார். இந்தப் போட்டியிலும் அதே சட்டகத்திற்குள் கைதாகி நின்ற கோலியின் ஆட்டத்தால் ரன்களின் வரத்து வெகுவாகவே குறைந்தது. இந்தப் போட்டியிலேயே வேகப் பந்து வீச்சிற்கு எதிராக அவரது ஸ்ட்ரைக்ரேட் 165.4 ஆனால் ஸ்பின் பந்துகளுக்கு எதிராகவோ வெறும் 76 மட்டுமே.

பொதுவாகவே ஒருநாள் போட்டிகளைப் போல அதிகப் பந்துகளை தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளாமல் நான்கு அல்லது ஐந்து பந்துகளில் அடித்து ஆடத் தொடங்குவது தான் அவரது பாணி. ஆனால் அந்தக் கோலியைத்தான் ஒட்டுமொத்த ஆர்சிபியும் தற்போது தேடிக் கொண்டு உள்ளது. கேப்டனான போட்டியில் கூட மீண்டு எழாமல் அதிலும் அதே டிஃபென்சிவ் மோடிலேயே கோலி பிரயாணித்தார்.

Virat Kohli
Virat Kohli

களத்தடுப்பின் போது ஆக்ரோஷத்தை அங்குலம் அங்குலமாக வெளிப்படுத்துபவர் அதனை பேட்டிங்கில் மட்டும் மறப்பது தான் அவரை பின்தங்க வைத்து விமர்சனங்களுக்கான எரிபொருள் ஆகிறது. ஆக ஆர்சிபியின் கதையை முடிக்க வேண்டும் என நினைக்கும் எதிரணி ஸ்பின்னர்களைக் கொண்டு கோலியை அட்டாக் செய்தாலே போதும் என்பதே நிதர்சனம். ஆர்சிபிக்கு எதிராக என்றாலே பவர்பிளேவிற்கு உள்ளாகவே ஸ்பின்னர்களை எதிரணிகள் கட்டம் கட்டி இறக்குவதும் இதனால்தான். டூ ப்ளஸ்ஸிஸ் முன் சக்கரமாக வண்டியை முன்னோக்கி நகர்த்த பின் சக்கரமாக அதனை பின்னோக்கி கோலி இழுக்கிறார். அணி தள்ளாடுகிறது.

தன்னைச் சுற்றி அவரே மனதால் அமைத்துள்ள வளையத்தை உடைத்து வெளியேறி ஸ்பின்னர்களையும் கோலி கவனித்தால் மட்டுமே அணியின் நம்பிக்கையை அவர் காப்பாற்ற முடியும்.

நடப்புத் தொடரிலேயே க்ருணால் பாண்டியாவை எதிர் கொண்ட போதும், இறங்கி வந்து பந்துகளை எதிர்கொண்ட போதும், ஸ்வீப் ஷாட்டினை ஆட தொடர்ந்த முயன்ற போதும் ஒருவகையில் அதிலிருந்து மீள முயற்சிப்பது வெளிச்சத்திற்கு வந்தது. எனினும் 17-வது ஓவர் வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றும் 150-ஐ கூடக் கடக்க முடியாமல் வெறும் 125 ஸ்ட்ரைக்ரேட்டோடு மட்டுமே அவரால் ஆட முடிந்திருக்கிறது என்பது போட்டியை ஏறக்குறைய எதிரணியிடம் எழுதித் தருவதைப் போன்றதுதான். விக்கெட்டுகளைக் கைவசம் வைத்திருந்தும் துணிந்து ஆடாதது வழக்கமான கோலியின் சாயலுக்குள் பொருந்தாத ஒன்று. இதுதான் கோலியால் உடனே கவனிக்கப்பட வேண்டியதும்.

மறுபுறமோ சாம் கரண் தலைமையிலான பஞ்சாப்பும் முதல் பத்து ஓவர்களில் விட்டதை அடுத்த பத்து ஓவர்களில் பிடித்து விட்டது. 91 ரன்களை முதல் பாதியில் அதுவும் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி கடந்திருக்க, பஞ்சாப் அடுத்த பத்து ஓவர்களில் வெறும் 83 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது. ஹர்ப்ரீத் ப்ரார் இரு விக்கெட்டுகளால் அணிக்கான ப்ரேக் த்ரூ கொடுக்க ராகுல் சஹாரின் 6 என்ற எக்கானமியும் ஆர்சிபியின் ரன்குவிப்புக்கு வேகத்தடை இட்டன. சாம் கரணின் ஆஃப் கட்டர்களும், யார்க்கர்களுமே உடைவாளோடு அரண் அமைத்தன. டெத் ஓவர்களில் மொத்தமே 44 ரன்களை மட்டுமே ஆர்சிபி எடுக்க அனுமதித்து இருந்தனர்.

RCB
RCB

இவை எல்லாம் ஒரு பக்கம் தனது இழுவைக்கு போட்டியை நகர்த்தினாலும் கேப்டனாக இல்லா விட்டாலும் ஒரு இம்பேக்ட் ப்ளேயருக்குரிய இலக்கணத்தை வகுப்பதாக டூ ப்ளஸ்ஸிஸின் ஆட்டம் இருந்தது. பவர் பிளேவிற்குள் ஓரளவே ரன்களைச் சேர்த்தாலும் அதற்கு வெளியே ஆட்டத்தை அவர் கையகப்படுத்தும் விதம் தான் ஆர்சிபிக்கு நம்பிக்கை திவலைகளை சேகரிக்க உதவுகிறது. இந்தப் போட்டியிலும் 150 ஸ்ட்ரைக்ரேட்டோடு அவர் சாவி கொடுக்காவிட்டிருந்தால் ஸ்கோர் மரணப் படுக்கையில் விழுந்து பஞ்சாப்பால் பரிதாபகரமான நிலையை ஆர்சிபி எட்ட வேண்டியதிருந்திருக்கும்.

175 என்பது பஞ்சாப்பால் எட்டியிருக்கக் கூடியதே ஆனால் பஞ்சாப்பின் டாப் ஆர்டர் மோசமான தொடக்கத்தைக் கொடுத்தது. முதல் ஓவரிலேயே அதர்வாவின் விக்கெட்டோடுதான் சிராஜ் தொடங்கியிருந்தார். ஆர்சிபிக்கு தொடக்கத்திலும் முடிவிலும் அவர் கொடுக்கும் உந்தத்தை மற்றவர்களின் ஸ்பெல்களும் ப்ளூ ப்ரிண்டாக்கி பின்பற்றினாலே எத்தகைய ஸ்கோரினையும் அணியால் டிஃபெண்ட் செய்ய முடியும். இன்ஸ்விங்கரோடு அதர்வாவுக்கு பிரியா விடை சொன்னவர் லிவிங்ஸ்டனோனையும் வெளியேற்றி பஞ்சாப்பை உருக்குலைத்தார்.

இறுதி ஓவர்களிலும் மிக நெருக்கடியோடு நகர்ந்து கொண்டிருந்த போட்டியை சிராஜின் ஒரே ஓவர் மாற்றியமைத்தது. ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் நாதன் எல்லீஸின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் எடுத்து போட்டிக்கு கிட்டத்தட்ட எண்ட் கார்ட் போட்டது சிராஜ்தான். நம்பர் 1 ஒருநாள் ஃபார்மட் பௌலராக வலம்வரும் சிராஜின் ரிதம் முந்தைய சீசன்களில் போல் ஐபிஎல்லால் அடி வாங்காமல் அப்படியே தொடர்வதும் முன்னிலும் சிறப்பானதாக இருப்பது இந்திய அணிக்கே நன்மை பயப்பது தான். அதிலும் ஆடியுள்ள எல்லாப் போட்டிகளிலுமே அவரது பந்துகளைத் தொட பேட்ஸ்மேன்கள் பயம் கொள்வதும் நல்ல அறிகுறியே. ஃபீல்டிங்கிலும் சிராஜ் தனது இருப்பினை பதிவு செய்து கொண்டே இருந்தார். ஹர்ப்ரீத் சிங்கினை அவர் ரன் அவுட் செய்ததும் சாம் கரணினை ஹசரங்கா ரன் அவுட் செய்த இரண்டுமே தான் போட்டியில் ஆர்சிபியை மீண்டும் திரும்பக் கொண்டு வந்த தருணங்கள்.

Siraj
Siraj

இம்பேக்ட் பிளேயருக்கான நாள் என்பது போல் பஞ்சாப்பின் சார்பில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிறப்பாக ஆட இறுதியில் ஜிதேஷ் ஷர்மாவும் சற்று நேரம் ஆர்சிபிக்கு ஆட்டம் காட்டினார். கிட்டத்தட்ட போட்டியை வென்று தந்து விடுவார் என்ற நிலையே நீடித்தது ஆனால் சமீபத்திய காலங்களில் ஹர்சல் படேல் அணிக்கு செய்த ஒரே நன்மையாக அவரது விக்கெட்டை வீழ்த்த ஆல்அவுட் ஆகி பஞ்சாப் தோல்வியைத் தழுவியது. கடந்த போட்டியில் பேட் மற்றும் பந்தினால் மாயம் செய்து நின்று போராடி லக்னோவுக்கு எதிராக வெற்றியைப் பதிவேற்ற வைத்தது மட்டுமில்லாமல் ஆட்ட நாயகனாகவும் ஜொலித்த சிக்கந்தர் ரசாவினை பஞ்சாப் இப்போட்டியில் வெளியே அமர்த்தியிருந்தது. இதுவும் அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பிரப்சிம்ரன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா இறுதியில் அடித்த ரன்களை மட்டும் கழித்துப் பார்த்தால் இன்னமும் மோசமானதொரு தோல்வியை அணி பெற்றிருக்கும் என்பது புரிய வரும்.

RCB
RCB
ஆர்சிபியில் ஆரஞ்சுக் கேப்பினை டூ ப்ளஸ்ஸிஸும் பர்ப்பிள் கேப்பினை சிராஜும் கைப்பற்ற தொடரில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி. இந்த இருவர் தவிர்த்து மற்ற வீரர்களின் பங்களிப்பும் முழுமையாக இருந்து கோலியும் பழைய அவதாரத்தை வெளிக்கொணர்ந்தால் மட்டுமே அடுத்தடுத்த சவால்களை ஆர்சிபியால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.