முதல் முறையாக மொஹாலி மைதானத்தில் 200 ரன்களை சேஸ் செய்தது, கடந்த ஆட்டத்தில் ஸ்டம்புகளை பறக்கவிட்ட அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சை பதம் பார்த்தது, எல்லாவற்றுக்கும் மேலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் ட்விட்டர் அட்மினை பழி தீர்த்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நேற்றைய இரவு மிகவும் பொன்னான இரவாக அமைந்தது.

நேற்று மொஹாலியில் நடந்த ஆட்டத்தில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த இருவரும் கடந்த முறை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மோதியபோது பஞ்சாப் வெற்றி பெற்றது. அப்போது பஞ்சாப் அணியின் ட்விட்டர் அட்மின் சில பல போஸ்ட்களை போட அது பல மும்பை ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. மொத்த வன்மத்தையும் சேகரித்து வைத்து இந்த போட்டிக்காக காத்திருந்தனர் மும்பை ரசிகர்கள். ரசிகர்கள் ஒரு பக்கம் சண்டை போட்டுக் கொண்டாலும் தவான் மற்றும் ரோகித் இருவரும் ஜாலியாக இருந்தனர். எந்த அளவுக்கு என்றால்,
டாஸ் ஜெயித்த ரோகித் "இப்ப நான் என்ன செய்ய வேண்டும் நண்பா" என்று கேட்க தவான் அதற்கு பவுலிங் போடு என சொல்ல ரோகித்தும் நாங்கள் பந்து வீசுகிறோம் என்று கூறினார். ரசிகர்களுக்கு "மீசக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம் டா" என்ற பாடல் கூட காதில் கேட்டிருக்கும். அப்படி ஒரு நட்பு.
பந்து வீச ஆரம்பித்தது மும்பை. பிரண்ட்ஸ் படத்தில் "இப்போ எத ஒடச்சீங்க" என்று கேட்டதற்கு "அதே தான்...அதே தான்" என்று ஆதங்கப்படும் வடிவேலுவின் கதை தான் நேற்று மும்பை பந்து வீச்சுக்கும் நடந்தது. வேகமாக ஒரு விக்கெட் - சாவ்லா தனியாக வேறு பிட்ச்சில் பந்து வீசுவது போல சிறப்பாக வீசுவது - மற்ற எல்லாரும் சேர்ந்து பாரி வள்ளல் பரம்பரையாய் மாறி ரன்கள் தருவது. இதுதான் இந்த ஆண்டின் மும்பையின் பவுலிங். ஜெராக்ஸ் எடுத்தது போல நேற்று இதே தான் நடந்தது. அர்ஷத் கான் பிரப்சிம்ரனை வேகமாக அவுட் ஆக்கினார். அதன் பின் சாவ்லா, தவான் மற்றும் ஷார்ட்டை வெளியேற்றினார். அதன் பின் எப்போதும் கடைசியாக வரும் ஜித்தேஷ் மும்பை பந்துவீச்சை பார்த்ததும் இன்று வேகமாக வந்து விட்டார்
லிவிங்ஸ்டன் அவருடன் இணைந்து கொண்டார். இது மேட்ச்சா அல்லது நெட் பிராக்டிஸா என்றே தெரியாத அளவுக்கு மும்பை பந்துவீச்சு இருந்தது. மாத்வால், அர்ஷத் கான் என அனைவரின் பந்துகளும் பவுண்டரிக்கு பறந்ததால் எங்க சிங்கத்தை தொட்டு பாருங்கள் என்று ஆர்ச்சரை கோதாவில் இறக்கி விட்டார் ரோகித். "அவனுகளால எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடிச்சாங்க" என்று ஆர்ச்சர் வந்து சொல்லும் அளவுக்கு அவருக்கும் அடி.

12வது ஓவரில் மூன்றாவது விக்கெட்டை எடுத்த மும்பையால் கடைசி வரை அடுத்த விக்கெட்டை எடுக்கவே முடியவில்லை. கடைசி 8 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது பஞ்சாப். லிவிங்ஸ்டன் 82 ரன்களுடனும் ஜித்தேஷ் 49 ரன்களுடனும் இன்னிங்ஸை முடிக்க பஞ்சாப் 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்தது.
மும்பை பேட்டிங் தொடங்கியது. ஏற்கெனவே பந்துவீச்சை நினைத்து எரிந்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் இதயத்தில் எண்ணெய் ஊற்றினார் கேப்டன் ரோஹித். டக் அவுட் ஆனார். சொந்த அணி ரசிகர்களையே "எப்ப தான் அவுட் ஆவாரோ?" என்று வாடிக்கையாக ஏங்க வைக்கும் இஷான் கிஷன் இம்முறை ரிஷி தவான் ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார். "இப்ப தான் யா பிரைட்டா ஆரம்பிக்கிறான்" என நிமிர்ந்து உட்கார்ந்தனர் ரசிகர்கள். கடந்த சில ஆட்டங்களாக மும்பை பேட்டிங்கை காப்பாற்றிய கிரீன் இம்முறை லீவ் எடுத்துக் கொள்ள களத்திற்குள் சூர்யகுமார் வந்தார்.

வெளியேவே ஒரு பத்து பந்துகளை சந்தித்துவிட்டு வந்தது போல வந்தார் சூர்யகுமார். எட்டு திசைகள் மட்டும் இருந்த காரணத்தினால் அவரால் அதில் மட்டுமே அடிக்க முடிந்தது. நிச்சயமாக ஏன் ஒன்பதாவது திசை இல்லை என வருத்தப்பட்டிருப்பார். சுட்டிக் குழந்தை சாம் கரன் வீசிய 13வது ஓவரை உண்மையிலே ஏதோ குழந்தை வீசுவது போல நினைத்து புரட்டி புரட்டி எடுத்தார் சூர்யகுமார். பதிலுக்கு அர்ஷ்தீப் சிங் ஓவரை இஷான் பொளந்து கட்ட மும்பை வெற்றியை நோக்கி விறு விறு என வந்தது.
31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து சூர்யகுமார் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் கிஷனும் அவுட் ஆனார். கிஷன் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார்.

கிஷன் அவுட் ஆனதும் திலக் களத்திற்கு வர ஆக்சன் படங்களில் கூட கிடைக்காத கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு கிடைத்தது. கடந்த போட்டியில் திலக்கின் ஸ்டம்ப்புகளை உடைத்த அர்ஷ்தீப் பந்து வீச வர, அந்த ஓவரில் தன்னுடைய மொத்த கோபத்தையும் கொட்டினார் திலக். அர்ஷ்தீப் வீசிய 8 பந்துகளில் ஒரு பவுண்டரி மூன்று சிக்சர்கள் என 24 ரன்கள் எடுத்தார். 19வது ஓவரிலேயே மும்பை வென்றது.

ட்விட்டரில் மும்பை ரசிகர்கள் பஞ்சாப் அட்மினை சுத்து போட்டனர். ரோகித் அவுட் ஆனதும் சற்று நக்கலாக போட்ட பதிவை அட்மின் அழிக்கும் அளவுக்கு ரசிகர்களின் ட்ரீட்மெண்ட் அமைந்தது. புள்ளிப் பட்டியலை மனதில் வைத்துக் கொண்டு "என்ற பங்காளிய திட்ட நீ யார் ரா" என சென்னை ரசிகர்களும் மும்பைக்கு சப்போட் செய்ய ஆக்சன் படமாக ஆரம்பித்த ஆட்டம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறியது. மும்பை 10 புள்ளிகள் உடன் 6வது இடத்தில் உள்ளது. பத்து புள்ளிகளுடன் நான்கு அணிகள், 11 புள்ளிகளுடன் இரண்டு அணிகள் என 6 அணிகள் மூன்று இடத்திற்கு போட்டி போடுவதால் வரும் ஆட்டங்கள் மெர்சலாக இருக்கப் போகிறது.