Published:Updated:

PBKS v DC: `இப்ப அடிச்சாதான் உண்டு' - பஞ்சாபை நேரம் பார்த்து சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

PBKS Vs DC

கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு நான்கு அணிகளும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம்.

Published:Updated:

PBKS v DC: `இப்ப அடிச்சாதான் உண்டு' - பஞ்சாபை நேரம் பார்த்து சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ஸ்!

கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு நான்கு அணிகளும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம்.

PBKS Vs DC
இறுதி வாரத்தை அதே சமயம் மிக முக்கியமான கட்டத்தை நெருங்கியிருக்கிறது ஐ.பி.எல் லீக் சுற்று. ஒரே ஒரு அணி மட்டுமே ப்ளே ஆப்பிற்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் மற்ற எல்லா அணிகளின் வாய்ப்புகளும் பிற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்தே இருக்கின்றன. இந்தநிலையில்தான் ஒரு மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் தரம்சாலா கிரவுண்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் களம் கண்டன பஞ்சாப்பும் டெல்லியும்.
PBKS Vs DC
PBKS Vs DC

இந்த கிரவுண்டில் முதல் தர கிரிக்கெட் போட்டி நடந்து ஒரு மாமங்கம் ஆனதால் பிட்ச்சைப் பற்றிய தெளிவில்லாமலேயே டாஸுக்கு வந்தார்கள் இரு கேப்டன்களும். பஞ்சாப்ன் கேப்டன் தவான் டாஸை வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியில் ரிஷி தவானுக்கு பதில் அதர்வா டைட், சிக்கந்தர் ராஸாவிற்கு பதில் ரபாடா. டெல்லி அணியில் மீண்டும் ப்ரித்வி ஷாவிற்கு வாய்ப்பு. மிட்ச் மார்ஷுக்கு காயமென்பதால் அவருக்கு பதில் நார்க்கியா.

சாம் கர்ரன் வீசிய முதல் ஓவரில் நான்கே ரன்கள். ரபாடாவின் அடுத்த ஓவரில் 2 ரன்கள். 'ரைட்டு. பழைய வரலாறு திரும்புது போல' என சோகமானார்கள் டெல்லி ரசிகர்கள். ஆனால் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து 'அதெல்லாம் இல்ல' என அறிக்கைவிட்டார் வார்னர். ரபாடா வீசிய நான்காவது ஓவரில் ஸ்கொயர் லெக் பக்கௌம் மிட்விக்கெட் பக்கமும் தலா ஒரு சிக்ஸ் அடித்தார் வார்னர். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். அங்கே ஓபனிங் பேட்ஸ்மேன்கள் இருவரும் முறுக்கிய ஆக்ஸிலேட்டர் அடுத்த சிலபல ஓவர்களுக்கு குறையவே இல்லை.

ரன்ரேட்டைக் கட்டுப்படுத்த அர்ஷதீப்பை கொண்டு வந்தார் தவான்.

'இப்ப அடிச்சாத்தான் உண்டு' என வேட்டியை மடக்கிக் கட்டிக்கொண்டு, நின்று வெளுத்தார் ஷா. இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ். சரியென பஞ்சாப்பை அவ்வப்போது பந்தை வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் எல்லீஸை இழுத்துவந்தார் தவான். அவருக்கும் இரண்டு பவுண்டரிகளை கிஃப்ட்டாய் கொடுத்தார் வார்னர்.
PBKS Vs DC
PBKS Vs DC

பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 61/0. இந்த சீசனில் பவர்ப்ளேயில் சராசரியாய்ய் இரண்டு விக்கெட்களை இழந்துவரும் டெல்லிக்கு இது ஒரு வரவேற்க்கத்தக்க தொடக்கம்.

ஸ்பின்னைச் சரணடைந்தார் தவான். சஹார் ஓவரிலும் ஷா புண்ணியத்தில் இரண்டு பவுண்டரிகள். ரன்ரேட் குறையவே குறையாததால் பவுலர்களை ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார் தவான். பத்து ஓவர்கள் முடிவில் டெல்லி 94/0 எடுத்திருந்த நிலையில் வந்தது பஞ்சாப்புக்கான விடிவுகாலம். கர்ரன் வீசிய லெக்கட்டரை தவறாய்க் கணித்து வார்னர் அடிக்க, மிட் ஆஃப் பக்கம் பறந்தது. பந்துக்கு சமமாய் பறந்து அதை லபக்கினார் தவான். முதல் விக்கெட். இந்த ஆட்டத்தில் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் 148.

'அவராவது இரக்கப்பட்டு அடிப்பாரு, நானெல்லாம் இறங்குனாலே அடிப்பேன்' என முதல் பந்திலிருந்தே வெளுக்கத் தொடங்கினார் ரூஸோ. சஹாரின் ஸ்பின்னுக்கு மட்டுமே ஓரளவு தணிந்தவர் மற்ற எல்லாருடைய பந்துகளையும் சென்னை வெயில் போல சுட்டுப் பொசுக்கிக்கொண்டே இருந்தார். ரபாடா வீசிய 13வது ஓவரில் மட்டும் 17 ரன்கள். வேகம், பவுன்ஸ் என மிரட்டும் பழைய ரபாடா இல்லை இது. இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் ஐந்தே விக்கெட்கள். எகானமியும் அவரின் ஐ.பி.எல் கேரியரிலேயே இந்த சீசனில்தான் மோசம். 10.11 எகானமி.

ஓரளவு அடக்கிவாசித்த சஹாரின் கடைசி ஓவரிலும் 13 ரன்கள் அடித்தார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். அதே ஓவரில் இந்த சீசனின் முதல் அரைசதத்தையும் எடுத்து பெருமூச்சுவிட்டார் ஷா. தொடரைப் பொறுத்தவரை இது ரொம்பத் தாமதம் என்றாலும் அவரின் கேரியரில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கக்கூடிய அரைசதம் இது. அடுத்த ஓவரிலேயே 'அடிச்சவரைக்கும் போதும்' என அவரை பெவிலியன் அனுப்பினார் கர்ரன். ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 148/2. 16வது ஓவரை ப்ரார் வீச்ச, அவரைக் கணிக்கக் கொஞ்சம் நேரமெடுத்துக்கொண்டார்கள் பேட்ஸ்மேன்கள். அடுத்த மூன்று ஓவர்களில் பெரிதாய் ரன்கள் இல்லை. ரூஸோ மட்டும் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ஆனால் அதற்கும் சேர்த்துவைத்து கடைசி இரண்டு ஓவர்கள் பஞ்சாப் பவுலர்களை படுத்தினார்கள் டெல்லி பேட்ஸ்மேன்கள். எல்லீஸின் 19வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 18 ரன்கள். ப்ராரின் கடைசி ஓவரை ரூஸோ எல்லாப் பக்கமும் சிதறவிட்டார். இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் என 23 ரன்கள். 200 ரன்களை இந்த சீசனில் முதன்முறையாகக் கடந்தது டெல்லி. 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள். காட்டடி அடித்த ரூஸோ 37 பந்துகளில் 82 ரன்கள்.

PBKS Vs DC
PBKS Vs DC

ஒருநாள் அடிப்பார்கள், மறுநாள் அப்படியே சுருள்வார்கள் - இதுதான் இந்த சீசனில் பஞ்சாப் மிடில் ஆர்டரின் நிலை. அதனால் முடிந்தவரை நின்று வெற்றிக்குப் பக்கத்தில் அழைத்துப்போக தவானின் இருப்பு மிக முக்கியம். கலீலின் முதல் ஓவரை மொத்தமாய் ப்ரப்சிம்ரன் சிங்கே சாப்பிட்டுவிட, இஷாந்த் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே ஃபர்ஸ்ட் ஸ்லிப் பக்கம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவான். கலீலின் அடுத்த ஓவரிலும் வெறும் இரண்டே ரன்கள்.

பெரிய டார்கெட்டை சேஸ் செய்ய பவர்ப்ளே ஸ்கோர் மிக முக்கியம் என்பதால் வேகம் கூட்டினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். இஷாந்த் ச்சர்மாவின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, நார்க்கியாவின், முகேஷ் குமாரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என பவர்ப்ளே முடிய ஸ்கோரை 47/1 என கொண்டுவந்தார்கள். அப்போதே தேவைப்படும் ரன்ரேட் 12-ஐ தொட்டிருந்தது. போதாக்குறைக்கு ப்ரப்சிமரனும் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அடுத்த ஓவரிலேயே வெளியேறினார்.

மிடில் ஓவர்களை எல்லா கேப்டன்களையும் போல ஸ்பின்னை வைத்தே நெருக்கினார் வார்னர். ஓவருக்குப் பத்து ரன்கள் குறையாமல் வந்தாலும் பவர்ப்ளே ஸ்கோர் குறைவென்பதால் துரத்தத் துரத்த அகப்படாத கானல் நீர்போல தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது டார்கெட். குல்தீப்பும் அக்‌ஷரும் இறுக்கிப்பிடிக்க 14 ஓவர்கள் முடிவில் 117/2 என்பதுதான் ஸ்கோர். கைவசம் விக்கெட்கள் இருப்பதால் மட்டையைச் சுற்றத் தொடங்கினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். அந்த ஓவரின் இறுதிப்பந்தில் ஜிதேஷ் சர்மாவிற்கு வழிவிட்டு ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார் அதர்வா டைட். ஆனால் ஜிதேஷோ பொறுப்பில்லாமல் டாப் எட்ஜில் கேட்ச் கொடுத்து வெளியேற கனம் மொத்தமும் லிவிங்ஸ்டன் தலையில்.

PBKS Vs DC
PBKS Vs DC

ஆனாலும் அதை அற்புதமாய் சுமந்தார் லிவிங்ஸ்டன். ஒருபக்கம் விக்கெட்கள் விழுந்தபடி இருந்தாலும் மற்றொருபுறம் நங்கூரம் போல நின்று வெளுத்தார். கலீலின் 17வது ஓவரில் மட்டும் 20 ரன்கள். முகேஷ் வீசிய 18வது ஓவரில் மூன்று சிக்ஸர்கள் என 21 ரன்கள். ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 176/5. 12 பந்துகளில் 38 ரன்கள். கொஞ்சம் முயன்றால் முடித்துவிடலாம்தான். ஆனால் அதற்கு வேட்டு வைத்தார் நார்க்கியா. 19வது ஓவரின் இரண்டாவது பந்தில் நன்றாக லெக் ஸ்டம்ப்பை காட்டி விலகி நின்ற கர்ரனை போல்டாக்கினார். அதற்கடுத்த பந்தில் லிவிங்ஸ்டனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க ஆசைப்பட்ட ப்ராரும் ரன் அவுட்டானார்.

கடைசி ஓவரில் 33 ரன்கள் தேவை பஞ்சாப் வெற்றிபெற. இமயமலையை எறும்பு ஏறுவது போன்ற வேலை. இந்த ஆட்டத்தில் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் வென்றால் ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெறக்கூட சின்னதாய் ஒரு வாய்ப்புண்டு என்பதால் அதையும் மனதில் வைத்துக்கொண்டு ஆடியிருக்கலாம் லிவிங்ஸ்டன்.
PBKS Vs DC
PBKS Vs DC

முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள். நான்காவது பந்தை நெஞ்சு உயரத்திற்கு இஷாந்த் தூக்கி வீச அதில் சிக்ஸ் அடித்து அடுத்த ஃப்ரீ ஹிட்டுக்காக காத்திருந்தார் லிவிங்ஸ்டன். மூன்று பந்துகளில் 16 ரன்கள் தேவை. ஆனால் அந்த மூன்று பந்துகளுமே டாட் பால்கள். 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி.

டெல்லியை 200 தாண்ட வைத்த ரூஸோ தான் ஆட்டநாயகன். டெல்லிக்கு சீசன் முடியும் தறுவாயில் இந்த வெற்றிகள் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கலாம். மறுபக்கம் பஞ்சாப்பின் ப்ளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.

கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு நான்கு அணிகளும் எஞ்சிய போட்டிகளில் பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்று பஞ்சாப் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பு சாத்தியம்.

அது கோஷ்டி சண்டையே இல்லாமல் காங்கிரஸ் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து அதில் சச்சரவும் இல்லாமல் பிரதமர் வேட்பாளரையும் முதல்வர் வேட்பாளர்களையும் அறிவிப்பது போல மிக அரிதான மெடிக்கல் மிராக்கிள். வாய்ப்பில்ல ராஜா!