ரிங்கு சிங், இந்த ஐபிஎல் சீசனில் சிறந்த ஃபினிஷராக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒருவர். இந்த சீசனின் 14 போட்டிகளில், 59.25 ஆவரேஜ் மற்றும் 149.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 474 ரன்கள் எடுத்து பலரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
லக்னோ vs கே.கே.ஆர் இடையேயான ஆட்டத்தில் 33 பந்துகளில் 67 ரன்களைச் சேர்த்து, இந்திய அணிக்கான ஒரு சிறந்த ஃபினிஷர் உருவாகிவருவதை ரிங்கு சிங் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருந்தார். இதனால், ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து பலரும், ஐபிஎல் வரலாற்றில் புகழ்பெற்ற மேட்ச் ஃபினிஷர்கள் பட்டியலில் தனது பெயரையும் பதிவு செய்துவிட்டார் ரிங்கு சிங், 2024-ல் தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரராக இருப்பார் என்றும் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதால் இந்திய அணியில் தேர்வாக அதிக வாய்ப்பிருப்பதாகவும் பலரும் ரிங்கு சிங்கை வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்களிடம் கலந்துரையாடிய ரிங்கு சிங், "இது போன்ற ஒரு சிறந்த சீசனில் விளையாடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணியில் தேர்வாவது பற்றியெல்லாம் நான் அதிகம் யோசிக்கவில்லை. முதலில் இப்போது நான் வீட்டிற்குச் சென்றதும், எனது வழக்கமான பயிற்சி, ஜிம்மிற்குச் செல்வது என என் வேலைகளை நான் தொடர்ந்து செய்யப்போகிறேன். என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் என்னை நன்கு அறிந்திருக்கிறார்கள். நான் விளையாடிய கடைசி சில ஆட்டங்களில் மக்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆனால், ஜிடிக்கு எதிரான ஆட்டத்தில் நான் அந்த ஐந்து சிக்ஸர்களை அடித்ததில் இருந்தே, நான் அதிகளவில் கவனம் பெற்றேன். இப்போது பலர் என்னை அடையாளம் காணத் தொடங்கினர். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.