Published:Updated:

IPL 2023 Preview: `ஐ.பி.எல்-இன் சூப்பர் பவர்' - இழந்த அடையாளத்தை மீட்குமா மும்பை இந்தியன்ஸ்?

Mumbai Indians | மும்பை இந்தியன்ஸ்

வீரர்களை நட்சத்திரங்களாக மாற்றுவது மும்பைக்குப் பழக்கம்தான் எனினும் அனுபவமற்ற உள்ளூர் வீரர்களை அதிகமாகக் கொண்டிருப்பது அணியின் பெஞ்ச் வலிமையைச் சற்றே பலவீனப்படுத்துகிறது.

Published:Updated:

IPL 2023 Preview: `ஐ.பி.எல்-இன் சூப்பர் பவர்' - இழந்த அடையாளத்தை மீட்குமா மும்பை இந்தியன்ஸ்?

வீரர்களை நட்சத்திரங்களாக மாற்றுவது மும்பைக்குப் பழக்கம்தான் எனினும் அனுபவமற்ற உள்ளூர் வீரர்களை அதிகமாகக் கொண்டிருப்பது அணியின் பெஞ்ச் வலிமையைச் சற்றே பலவீனப்படுத்துகிறது.

Mumbai Indians | மும்பை இந்தியன்ஸ்

ஐந்து முறை சாம்பியன் என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கடந்த சீசனில் மும்பை தொலைத்திருந்தது.

"ஒருவரின் வெற்றி இணை போட்டியாளர்களாலேயே முடிவாகும்" என்ற Game Theory-ஐ பொய்யாக்கும்படி ஐபிஎல் பிரதேசத்தில் மும்பைதான் ஏனைய அணிகளின் இடத்தையே முடிவுசெய்து கொண்டிருந்தது. கடந்த தொடரோ, "ஐபிஎல் சாம்பியனுக்கும் அடிசறுக்கும் அதுகூட புள்ளிப்பட்டியலின் அடியில் தேங்கும்" என்ற திரைக்கதையால் புனையப்பட்டிருந்தது. அந்த வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து இழந்த மாண்பை மீட்டெடுக்கும் உத்திகளோடும் உத்வேகத்தோடும் மும்பை இம்முறை களமிறங்குகிறது.
Rohit Sharma
Rohit Sharma

கடந்த சீசனில் பௌலிங் ஸ்ட்ரைக்ரேட், எக்கானமி, பேட்டிங் ஆவரேஜ் என எல்லாப் பரிமாணத்திலும் மும்பைக்கு வீழ்ச்சியே! ஏல மேஜையில் எடுக்கப்பட்ட சில மோசமான முடிவுகள் ஒவ்வொரு போட்டியிலும் பிரதிபலிக்க, ஓப்பனர்கள் சொதப்ப, பாண்டியா பிரதர்ஸ் இல்லா வெற்றிடம் சூன்யமாக என எல்லாமே தவறாக 14 போட்டிகளில் 4-ல் மட்டுமே மும்பையால் வெல்ல முடிந்தது. அதன் பின்னூட்டங்களை மினி ஏலத்தின் போது கருத்தில் கொண்டு அக்குறைபாடுகளைக் களைந்தெறியும் வழிமுறைகளை மும்பை கையில் எடுத்திருந்திருந்தது.

அதன் முடிவுகள் என்ன, ஓட்டைகள் எல்லாம் அடைபட்டிருக்கிறதா அல்லது இம்முறையும் சேதாரத்தையே சந்திக்க உள்ளதா?

பலங்கள்:

வேகப்பந்துவீச்சு பல முனைகளிலிருந்தும் கட்டமைக்கப்பட வேண்டியது. கடந்த சீசனில் அவரால் ஆட முடியாது எனத் தெரிந்தும் மும்பை ஆர்ச்சரைக் கொண்டு பந்தயம் கட்டியது. அதன் விளைவு வேகப்பந்துவீச்சு கொஞ்சமும் அச்சுறுத்துவதாக இல்லை. பும்ரா ஒருபக்கமிருந்து அழுத்தம் கொடுத்தாலும் டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித் இருவரது முனைகளிலிருந்தும் 8+ எக்கானமியோடு ரன்கள் கசிந்தன. பெரிதாக விக்கெட் டேக்கிங் பௌலர்களாகவும் இவர்கள் வலம் வரவில்லை. இந்த சீசனில் அது சற்றே சரி செய்யப்பட்டிருக்கிறது.

இம்முறை இணைந்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற ஆளுமையின் வேகமும் அவரது பயமுறுத்தும் பவுன்சர்களும் பௌலிங்கில் மும்பைக்கான எல்லா இடையூறுகளையும் அடித்து உடைக்கக்கூடியது. அவருக்கு உறுதுணையாக நிற்கவும் விக்கெட் எடுப்பதில் கடந்தமுறை இருந்த பின்னடைவை ஈடுகட்டவும் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃபை மும்பை 75 லட்சங்களைக் கொட்டி உள்ளே இழுத்திருக்கிறது. பும்ராவும் இல்லாத நிலையில் பவர்பிளேயில் விக்கெட் எடுக்கக்கூடிய பௌலராக இவர் மிரட்டுவார்.

Green
Green
மும்பையின் பேட்டிங் வரிசையை நீண்டதாக மட்டுமின்றி வலுகொண்டதாகவும் 17.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள கேமரூன் க்ரீன் மாற்றியுள்ளார். ஓய்வறிவித்து பயிற்சியாளர் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பொல்லார்ட் இல்லாதது மும்பைக்கு மிகப்பெரிய இழப்புதான். அதனை நேர்செய்யவே க்ரீனைக் கொண்டு வந்துள்ளனர். ரோஹித், இஷான், சூர்யாவோடு ஏற்கெனவே பலங்கொண்டிருந்த பேட்டிங் யூனிட்டிற்கு இவரது வரவு இன்னமும் சார்ஜ் ஏற்றியிருக்கிறது.

அதுவும் ரன்களை வேகமாக சேர்க்கக்கூடிய பவர் ஹிட்டர்களால் அணி நிரம்பியிருப்பதும் சாதகமானதே. க்ரீனைப் பொறுத்தவரை பேட்டிங்கில் மட்டுமின்றி பௌலிங்கிலும் அவருக்கான திட்டங்களை எதிரணி வகுக்க வேண்டியதிருக்கும்.

டிம் டேவிட்டின் தற்போதைய ஃபார்மும் மும்பைக்குச் சாதகமாகவே உள்ளது. 160+ ஸ்ட்ரைக் ரேட்டோடு வரிசைகட்டி மிரட்டும் அவரது கேமியோக்கள் எதிரணியை முட்டிவீழ்த்தும் ஏவுகணைகள். டிவால்ட் ப்ரெவிஸும் இதேபோல் சில பந்துகளிலேயே ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். முன்னதாக இருந்த டீ காக், பொல்லார்ட், பாண்ட்யா பிரதர்ஸை உள்ளடக்கிய அணி இணையற்றது. ஓப்பனர்கள் கூறுபோட, மிடில் ஆர்டர் உருகுலைக்க, ஃபினிஷர்கள் வதம் செய்வர். அத்தகைய பழைய அணிக்குச் சமமாக இல்லாவிட்டாலும் ஓரளவு நம்பிக்கை தருவதாகத் தற்போதைய பேட்டிங் படை உள்ளது.

ஒவ்வொரு அயல்நாட்டு வீரருக்கும் மாற்று வீரரைக் கொண்டிருப்பது கூடுதல் பலம். கைவசமிருக்கும் டுவான் ஜான்சன் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸையும் சில போட்டிகளில் மும்பை பரீட்சித்துப் பார்க்கலாம்.
இஷான் கிஷன்
இஷான் கிஷன்

பலவீனங்கள்:

பேட்டிங் படை வலுவானதுதான் என்றாலும் அதனை உற்றுநோக்கினால் உள்ளே இழையோடியுள்ள சில குறைபாடுகளும் காட்சிக்கு வருகின்றன. ஏலம் நடந்த சமயத்தில் அதிவேக இரட்டை சதமடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்ல மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையும் இஷான் புளகாங்கிதம் அடைய வைத்தார். ஆனால் அது தவிர்த்து டி20-ல் சமீபத்தில் அவரது ஆட்டம் சிறப்பானதாக இல்லை. இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஆடியுள்ள கடைசி ஆறு டி20-களில் மொத்தமாகவே 64 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ரோஹித் கடந்த நவம்பருக்குப்பின் எந்த சர்வதேச டி20யிலும் ஆடவில்லை. இவர்களது ஆட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால் அது மும்பையின் தலைவலிகளில் ஒன்றாக உருவெடுக்கும். திலக்கின் குறைந்த ஸ்ட்ரைக்ரேட்டும் மும்பை கவனம் கொள்ள வேண்டிய பிரச்னைதான்.

பேட்டிங் படையில் உள்ள இன்னொரு குழப்பம் க்ரீனின் பேட்டிங் பொஷிசன். க்ரீன் பிக் பேஷ் லீக்கில் மிடில் ஆர்டரில் இறங்கிய போது, வெறும் 15 ஆவரேஜோடு 108 ஸ்ட்ரைக்ரேட்டோடே ரன்களைச் சேர்த்துள்ளார். பெரிதாகச் சோபித்ததில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுக்காக ஓப்பனிங்கில் இறங்கிய போட்டிகளிலோ 187 ஸ்ட்ரைக்ரேட்டோடு அதிரடியாக ரன்களைக் குவித்துள்ளார். அப்படிப்பட்டவரை மிடில் ஆர்டரிலோ ஃபினிஷராகவோ ஆடவிடுவதைவிட ஓப்பனிங்கில் ஆடவைப்பது மட்டுமே மும்பைக்கு சாதகமானதாகவும் அவர்கள் செலவழித்த 17.5 கோடிகளுக்கு இணையான பலனை விளைவிப்பதாகவும் இருக்கும்.

க்ரீனுக்கு வழிவிட ரோஹித், இஷான் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் தங்களது ஓப்பனர் இடத்தை விட்டுத்தர வேண்டிய நிலை உருவாகிறது. டீ காக் விடைபெற்றபின் கிடைத்த இடத்தை இஷான் தாரைவார்ப்பாரா அல்லது இளைஞர்களுக்கு ரோஹித் வழிவிடுவாரா என்பது குழப்பமே. அப்படிக் கிடைக்கும் இடத்திற்கு க்ரீனால் முழுமையான நியாயம் கற்பிக்க முடியுமா என்ற கேள்வியுமுள்ளது. ஏனெனில் அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்கள் பெரும்பாலும் சோபித்ததில்லை. காரணம் அந்த விலையோடே கூடவே வரும் ஆடியே ஆகவேண்டுமென்ற அழுத்தம். இது க்ரீன் விஷயத்தில் எப்படி முடிகிறதென்பதைப் பொறுத்தே மும்பையின் விடிவு இருக்கிறது.

Rohit Sharma
Rohit Sharma
வீரர்களை நட்சத்திரங்களாக மாற்றுவது மும்பைக்கு பழக்கம்தான் எனினும் அனுபவமற்ற உள்ளூர் வீரர்களை அதிகமாகக் கொண்டிருப்பது அணியின் பெஞ்ச் வலிமையை சற்றே பலவீனப்படுத்துகிறது.

மும்பையின் ஸ்பின் படையும் அவ்வளவு அச்சுறுத்துவதாக இல்லை. பழுத்த அனுபவமுடையவரென்றாலும் ப்யூஸ் சாவ்லா அவரது ப்ரைம் டைமைக் கடந்துவிட்டார். குமார் கார்த்திகேயா மற்றும் ஷோகீனின் உள்ளூர் கிரிக்கெட் தரவுகள் சிறப்பாகவே இருந்தாலும் இவ்வளவு பெரிய மேடையில் அவர்களது பந்துவீச்சு எப்படியிருக்கும் என்பதே மும்பையின் வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்யும். அதிலும் சுழலுக்கு மட்டுமே ஆதரவளிக்கும் களங்களில் அணியின் மொத்த எதிர்பார்ப்பும் இவர்களை நோக்கி திரும்பும். அந்த அழுத்தத்தை இவர்கள் எந்தளவு கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே எல்லாமே நடந்தேறும்.

முடிவான ஆனால் மும்பையின் முக்கியமான பலவீனம் பும்ரா இல்லாததுதான். மும்பையின் முதுகெலும்பாக மலிங்கா எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் பல சீசன்களாக பும்ரா இருந்து வந்துள்ளார். அப்படிப்பட்டவர் இல்லாமல் அணி சந்திக்கப் போகும் ஒரு ஐபிஎல் கண்டிப்பாக சவால்களைக் கொண்டதுதான்.

அவருக்கு இணையாக என்றல்ல அவரது திறனில் சரிபாதி கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளரைக்கூட மும்பையால் கையகப்படுத்த முடியவில்லை. அர்ஜுன் டெண்டுல்கர் இம்முறை அறிமுகப்படுத்தப்படுவார் என்ற பேச்சுக்கள் அடிபட்டாலும் ஆர்ச்சருக்கு பார்ட்னராக நின்று பந்துவீசுமளவிற்கு அர்ஜுனைப் பயன்படுத்துவதை எல்லாம் மும்பையால் யோசிக்கக்கூட முடியாது, குறிப்பாகத் தொடரின் தொடக்கத்தில் எல்லாம் நிச்சயமாக முடியாது. சின்ன சின்ன பரிசோதனை முயற்சிகளைச் செய்யவும் சற்றே மும்பை தயங்கும் ஏனெனில் கடந்த சீசன் தந்த பாடங்கள் அப்படிப்பட்டவை.

Bumrah
Bumrah
IPL

பும்ரா இல்லாததன் தாக்கம் அங்கோடு முடியவில்லை, கோர் அணியின் வடிவமைப்பிலேயே சற்றே குழப்பத்தை உண்டாக்குகிறது. ஆர்ச்சருடன் கண்டிப்பாக ஜேசன் இறங்க வேண்டும். க்ரீனும் விவாதங்களற்ற தேர்வாகி விடுவார். இந்நிலையில் டிம் டேவிட் அல்லது டிவால்ட் ப்ரூவிஸ் இருவரில் ஒருவரை மட்டுமே பயன்படுத்த முடியுமென்ற சூழல் உருவாகும். ஆக பௌலிங் பலவீனத்தை சரிசெய்ய பேட்டிங்கின் வலுவைக் குறைத்துக் கொள்ளும் நிலைக்கு அணி தள்ளப்படும். ஆக ஆடப்போகும் களத்திற்கு ஏற்றவாறு மைக்ரோ பிளான்களை மும்பை வகுக்க வேண்டியதிருக்கும். பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்ளைக் கொண்டு வந்து பழக்கமில்லாத மும்பையின் டெம்ப்ளேட்டே அந்தப்புள்ளியில் அடிவாங்கும். இதற்கேற்ற மும்பையின் திட்டங்களே அவர்களை தொடரில் முன்னிலைப்படுத்தும் ஏனெனில் சிறிய தவறுகள்கூட இங்கே பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

கேம் தியரியையே மாற்றி மற்ற அணிகளை ஆட்டுவித்த வல்லமையுள்ள தனது மந்திரக்கோலை மும்பை இம்முறை மறுபடியும் கண்டெடுக்குமா அல்லது தோல்வியின் நிழலோடே பயணித்த சென்ற சீசனின் மீட்டுருவாக்கமாக இதுவும் மாறுமா?