Published:Updated:

MI v SRH: வான்கடேவை சிக்ஸர்களால் அளந்த க்ரீன், அபார வெற்றி பெற்ற மும்பை; பிளேஆஃப் கனவும் நிறைவேறுமா?

MI v SRH - கேமரூன் க்ரீன்

ஸ்டார் வீரர்களைச் சேர்த்துக் கொள்வது மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட வீரர்களை ஸ்டார்கள் ஆக்குவதும் மும்பைக்கு வழக்கம்தான். சிஎஸ்கே போன்ற சாம்பியன்களின் சாயலும் அதுதான். அதுதான் மும்பையை முந்தியிருக்கச் செய்திருக்கிறது.

Published:Updated:

MI v SRH: வான்கடேவை சிக்ஸர்களால் அளந்த க்ரீன், அபார வெற்றி பெற்ற மும்பை; பிளேஆஃப் கனவும் நிறைவேறுமா?

ஸ்டார் வீரர்களைச் சேர்த்துக் கொள்வது மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட வீரர்களை ஸ்டார்கள் ஆக்குவதும் மும்பைக்கு வழக்கம்தான். சிஎஸ்கே போன்ற சாம்பியன்களின் சாயலும் அதுதான். அதுதான் மும்பையை முந்தியிருக்கச் செய்திருக்கிறது.

MI v SRH - கேமரூன் க்ரீன்
மடியில் கனமின்றி வழியில் பயமின்றி பயணித்த சன்ரைசர்ஸைத் தனக்கான வாழ்வா சாவா போராட்டமே என்றாலும் கொஞ்சமும் மரண பயமின்றி மும்பை வென்றுவிட்டது. லீக்கில் தங்களது அதிமுக்கியமான கடைசிப் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி இரு புள்ளிகளை சுலபமாகப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

வெற்றியை நோக்கி எட்டு வைப்பதென்பது மலை உச்சிகளுக்கிடையே கட்டிய கயிற்றின் மேல் பயணமே. அதிலும் தலையின் மீது சுமையோடு கடந்தால் அது இன்னமும் கடினம். ரன்ரேட்டின் மீது ஒரு கண்ணையும் பெங்களூருவின் தட்பவெப்ப நிலை மேல் இன்னொரு கண்ணையும் வைக்க வேண்டியிருந்த மும்பையும் இதே நிலையிலேதான் இருந்தது. சன்ரைசர்ஸுக்கோ இழக்க எதுவுமில்லை என்பது துணிச்சல் தர அபிஷேக், திரிபாதி உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய வீரர்களை வெளியமர்த்தி அடுத்த சீசனுக்கான ஆடிசனாகப் புதிய வீரர்களைக் களமிறக்கி வெள்ளோட்டம் பார்த்தது.

MI v SRH
MI v SRH

கடந்தாண்டு நெட் பௌலராக தங்களுடன் பயணித்த விவ்ரான்த் ஷர்மாவினை இந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.2.6 கோடி தந்து சன்ரைசர்ஸ் வாங்கியது. பேட்டிங் ஆல்ரவுண்டரான விவ்ரான்த் டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அதிரடியாக ரன் குவிப்பதற்கு பேர் போனவர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஏற்கெனவே இறக்கப்பட்டிருந்தாலும் அப்போட்டியில் இரு ஓவர்களை வீசும் வாய்ப்பு மட்டுமே விவ்ரான்த்துக்குக் கிடைத்தது. இப்போட்டியில் ஓப்பனராக அவரது பேட்டிங் திறனையும் பரிசோதிக்க சன்ரைசர்ஸ் தீர்மானித்திருந்தது.

இந்த சீசனில் சன்ரைசர்ஸுக்காக ஆடிய ஏழாவது ஓப்பனிங் கூட்டணி விவ்ரான்த் - மயாங்க் அகர்வால். இதற்கு முன்னதாக ஆடிய எந்த இணையுமே பவர்பிளே தாண்டி நீடித்ததில்லை. 50 ரன்களைக் கூட ஒருமுறை மட்டுமே ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்தது. ஆனால் கடைசிப் போட்டியில் அமைந்த இக்கூட்டணி சன்ரைசர்ஸுக்கு வெற்றிகரமான தொடக்கத்தைத் தந்தது. ஒருவர் அடித்து ஆடுவது இன்னொருவர் ஆங்கர் ரோலைக் கையிலெடுப்பது என்றில்லாமல் மெதுவாகவே இருவரது தொடக்கமும் இருந்தது.

ஃப்ளாட் பிட்ச், வெகு சுமாரான மும்பை பௌலிங் என எல்லாமே சாதகமாக இருந்தும் பவர்பிளேயில் 53 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. அக்கட்டத்தில் மயாங்க் 12 பந்துகளில் 21 ரன்களை சேர்ந்திருந்தாலும், விவ்ரான்த் 27 ரன்களை 112 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்து மிக மந்தமாகவே தொடங்கியிருந்தார். முதல் ஓவரில் பெஹ்ரென்ட்ரஃபின் பந்தினை அவர் இறங்கி வந்து சந்தித்து பவுண்டரிக்கு பார்சல் செய்து தனது கணக்கைத் தொடங்கிய போது அதிரடியாக ஆடுவார் எனக் கருதப்பட அதற்கு எதிர்மாறான ஆட்டத்தையே அவர் ஆரம்பத்தில் ஆடினார். அவர் சுற்றிக் கொண்டே இருந்த பேட்டில் சில நேரம் பந்தும் பலநேரம் காற்றுமே சிக்கின. பவர்பிளே முடிந்த பின்தான் ரன்சேர்ப்பை துரிதப்படுத்தினார் விவ்ரான்த்.

MI v SRH
MI v SRH
முதல் 24 பந்துகளில் 27 ரன்களை மட்டுமே எட்டியிருந்த விவ்ரான்த் அதற்கடுத்த 12 பந்துகளிலேயே அரைசதத்தை எட்டிவிட்டார். பியூஷ் சாவ்லாவின் சுழல்பந்துகளும் ஜோர்டனின் மோசமான பந்துவீச்சும் அவருக்கு இரையாகின. இருப்பினும் முதல் 24 பந்துகளை அவர் சரியாக அணுகாததும் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. சன்ரைசர்ஸ் 20 ரன்கள் குறைவாக முடிக்கவும் இதுவும் காரணமானது. முதல் 10 ஓவர்களில் 93 ரன்களை சன்ரைசர்ஸ் எட்டியிருந்தது.

டி20-ஐ பொறுத்தவரை ஒரே ஒரு பார்ட்னர்ஷிப்பாலும் சிறந்த ஓப்பனிங்காலும் மட்டுமே பெரிய ஸ்கோரினை எல்லா சந்தர்ப்பங்களிலும் எட்டிவிட முடியாது. கேமியோக்களும் எகிறும் ஸ்ட்ரைக்ரேட்களும் புடை சூழ்வதே அதனை நிகழ்த்தும். பாதி ஓவர்கள் முடிந்த நிலையில் இருக்கும் ரன்ரேட் தொடர்ந்து அதிகரிப்பது முக்கியம். அதுவும் விக்கெட் எதுவுமே விழாத சூழலில், ஆடுகளமும் நேசக்கரம் நீட்டும் நிலையில் துணிந்து ஆடி ரன்ரேட்டை ஏற்றுவதில் கவனம் கொண்டிருக்க வேண்டும். சூர்யா, க்ரீன் உள்ளிட்ட பலம் வாய்ந்த பவர் ஹிட்டர்கள் உலவும் மும்பைக்கு எதிரான போட்டியில் 230-க்கு குறைவான எதுவுமே போதாதென்ற கண்ணோட்டத்தோடு ஆட சன்ரைசர்ஸ் தவறிவிட்டது. 10-ல் வட்டமிடும் ரன்ரேட்டோடே இந்தக் கூட்டணி 14வது ஓவர் வரை கடத்திவிட்டது. 69 ரன்களை அடித்த நிலையில் ஆட்டமிழந்த விவ்ரான்த் சர்வதேசப் போட்டியில் ஆடாத இந்திய வீரர் ஒருவர் தனது அறிமுக ஐபிஎல் போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோராக 69 ரன்களைப் பதிவேற்றி வெளியேறினார். ஆனால் அத்தனை ஓவர்கள் நின்றும் 146.8 ஸ்ட்ரைக்ரேட்டில்தான் அவரால் ரன்கள் குவிக்க முடிந்ததென்பது சன்ரைசர்ஸுக்குப் பாதகமானது.

பவர்பிளேயிலும் மத்திய ஓவர்களிலும் கோட்டை விட்டதை டெத் ஓவர்களில் இறுக்கிப் பிடித்தது மும்பை. குறிப்பாக ஆகாஷ் மாத்வாலின் ஷார்ட் பால்களும், யார்க்கர்களும் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தன. ஓப்பனர்கள் அடித்தளத்தை அமைத்திருந்தாலும் அதன்பின் வந்த கிளாசன், மார்க்ராம், ஹாரி ப்ரூக் எல்லோருமே வருவதும் போவதுமாக இருந்தார்களே ஒழிய 230-க்கு மேல் வேண்டும் என்ற இன்டென்டோடு ஒருவருமே ஆடவில்லை. குறைந்தபட்சம் பட்டியலின் அடியில் முடிக்கக் கூடாதென்பதையாவது கருதுகோளாகக் கொண்டு இருந்திருக்கலாம். அது இல்லாததன் விளைவு, இறுதி 4 ஓவர்களில் 32 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸால் எடுக்க முடிந்தது.

MI v SRH
MI v SRH

ரன் வரம் அளிக்கும் வான்கடே + மும்பையின் பலமான பேட்டிங் வரிசை + சப்ஸ்ட்யூட்கள் பட்டியலில் ஒளிர்ந்த திலக் வர்மா என்ற பெயர் = மும்பையின் வெற்றி என்பது முதல் பாதியின் இறுதியிலேயே போட்டியின் முடிவும் எழுதப்பட்டுவிட்டது. அதுவும் 200 ரன்களை இந்தத் தொடரில் அசாத்தியமாகப் பலமுறை கடந்த மும்பைக்கு இது சவாலானதாக இருக்கப் போவதில்லை என்பதும் ஏறக்குறைய அப்போதே முடிவாகி விட்டது. மும்பையின் அணுகுமுறையிலும் தெளிவிருந்தது. ரன்ரேட் கண்களை மறைத்திருந்தால் தெளிவின்றி வீசப்படும் பந்தை எல்லாம் அடிக்க முனைந்து விக்கெட்டுகளை வரிசையாகக் காவு கொடுக்க வேண்டியதிருந்திருக்கும். அதை மும்பை செய்யவில்லை. ஓரளவு நிதானத்தோடே பயணித்தனர்.

பவர்பிளேவுக்கு உள்ளாகவே இஷான் கிஷானை புவனேஷ்வரின் Knuckle Ball வீழ்த்தியது. ஐந்தாவது ஓவரில் ரோஹித்தினை கிட்டத்தட்ட வீழத்தக் கிடைத்த வாய்ப்பை, ஒரு கேட்சை நழுவவிட்டு கோட்டை விட்டனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக பந்து எட்ஜ் வாங்கியுமே ரோஹித் தப்பிப் பிழைத்தார். 12வது ஓவரிலும் சன்வீர் விட்ட கேட்ச் ரோஹித்தைக் களத்திலேயே தொடர வைத்தது. அதிர்ஷ்டம் இப்போட்டியில் ரோஹித்தின் பக்கம் நிரம்பவே இருக்க அரை சதத்தினையும் அடித்தார். ரோஹித்துக்கு மறுபுறம் இருந்த க்ரீன் எதோ 300 ரன்கள் டார்கெட்டை எட்ட வேண்டும் என்பது போல் அதிவேகமாக ஆடிக் கொண்டிருந்தார். 24 பந்துகளில் அவரும் ரோஹித்தும் இணைந்து 50 ரன்கள் பார்டன்ஷிப்பை எட்டிவிட்டனர். இந்தத் தொடக்கம்தான் அவர்களை டிராக்கில் வைத்து அப்படியே உந்தி முன்தள்ளியது.

சன்ரைசர்ஸின் பக்கமும் புவனேஷ்வர் குமார் தவிர்த்து யாருமே சிறப்பாக பந்து வீசவில்லை. விவ்ரான்த் வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களை அள்ளிக் கொடுத்தார். எந்தப் பந்துமே பேட்ஸ்மேன்கள் சாய்ஸில் விடுவது போல் இல்லாமல் பேட்டுக்கு வாகாகவே வந்து கொண்டிருந்தது. நித்தீஷ் ரெட்டியின் ஓவர்களை க்ரீன் ஒரு கை பார்த்தார். கார்த்திக் தாகியின் நிலையும் அதுதான்.
MI v SRH
MI v SRH

பல போட்டிகளாக வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார் என உம்ரான் மாலிக்கிற்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்களும் குரல் எழுப்பி இருந்தனர். அடுத்த சீசனில் அவரை அவரே சன்ரைசர்ஸில் இருந்து விடுவித்துக் கொண்டு சரியாக பயன்படுத்தப்படும் இடத்துக்கு நகர வேண்டுமென்ற கருத்துக்கள் கூட எழுந்தன. ஆனால் இப்போட்டியில் தரப்பட்ட வாய்ப்பினையும் உம்ரான் சரியாகப் பயன்படுத்தவில்லை. வீசிய மூன்று ஓவர்களிலேயே 41 ரன்களை வாரிக் கொடுத்திருந்தார். அவரது வேகத்தைப் பயன்படுத்தியே க்ரீனும் சூர்யாவும் பந்தினை பவுண்டரி லைனுக்குத் துரத்தினர்.

ரோஹித் தொடர் முழுவதும் காட்டாத ஜாலத்தை அதிர்ஷ்டத்தின் துணை கொண்டு காட்டினார். சூர்யாவின் பேட்டும் வழக்கம் போல ஏமாற்றவில்லை. இருப்பினும் போட்டியை இரு ஓவர்கள் எஞ்சியிருந்த போதே மும்பை வென்றதும் மோசமான நிலையிலிருந்த அவர்களது நெட் ரன்ரேட் சற்றே அதிகரித்ததும் என எல்லாவற்றுக்கும் முழுமுதல் காரணம் கேமரூன் க்ரீனின் அதிரடிதான். 47 பந்துகளில் அவர் அடித்த அதிவேக சதம்தான் மும்பைக்கான வாய்ப்புக்கு உரமிட்டுள்ளது. கோடிகள் கொட்டிக் கொடுத்து அவர் வாங்கப்பட்ட போது பலவித விமர்சனங்கள் எழுந்தன. அத்தனையையும் நீர்த்துப் போகச் செய்து காணாமல் ஆக்கிவிட்டது அவரது செயல்பாடுகள்.

மும்பை, தன் முதல் இரு போட்டிகளை ஆர்சிபியிடமும் சிஎஸ்கேவிடமும் இழந்த விதம் படு மோசமானதாக இருந்தது. இருப்பினும் திலக் வர்மா, நேகல் வடேரா, ஆகாஷ் மாத்வால் உள்ளிட்ட இளைஞர்களிடமும் அவர்களது திறமைகள் மீதும் மும்பை வைத்த நம்பிக்கை அவர்களை அடுத்தடுத்து வெற்றியோடு முடிக்க வைத்திருக்கிறது.
MI v SRH
MI v SRH

ஸ்டார் வீரர்களைச் சேர்த்துக் கொள்வது மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட வீரர்களை ஸ்டார்கள் ஆக்குவதும் மும்பைக்கு வழக்கம்தான். சிஎஸ்கே போன்ற சாம்பியன்களின் சாயலும் அதுதான். அதுதான் மும்பையை முந்தியிருக்கச் செய்திருக்கிறது.

பிளேஆஃப்பிற்குப் போகிறது அல்லது இல்லை என்பதை எல்லாம் தாண்டி ஒரு கோர் அணியைக் கிட்டத்தட்ட செட் செய்துவிட்ட திருப்தி மும்பையின் மீது படிந்திருக்கிறது.