1430 நாட்களுக்குப்பின் பெங்களூரில் வைத்து ஆடிய போட்டியில் பெற்றிருக்கும் வெற்றியின் வாயிலாக தொடரை அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது ஆர்சிபி.
மும்பைக்கோ தொடரைத் தோல்வியோடு தொடங்குவது தங்களது பழைய ஃபார்முலாதானே என ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாத நிலை. ஏனெனில் தொடருக்கு முன்னதாக எவையெல்லாம் பழுதான பாகங்களாகக் கண்டறியப்பட்டதோ அவைதான் பலவீனங்களாக துருவேற்றி அணியை நொறுக்கிப் போட்டிருக்கின்றன.
டாஸை தோற்றதனால் பேட்டிங் செய்யும் சூழல் உருவான மும்பையின் மனதில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்?
பேட்டிங் பிட்ச், சேஸிங் சுலபம், பனிப்பொழிவு இரண்டாவது பாதியில் தங்களுக்கு இடையூறாகும், அதிலும் வலுவிழந்த தங்களுடைய பௌலிங் யூனிட்டிற்கு டிஃபெண்ட் செய்யுமளவு அதிக ஸ்கோரைத் தரவேண்டும், எனவே பெரிய இன்னிங்க்ஸ்களும், பார்ட்னர்ஷிப்களும் அதிமுக்கியம் என்பதெல்லாம் மின்னலாகத் தோன்றியிருக்கும். அதன்படி எல்லாவற்றையும் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். பெஹ்ரென்ட்ராஃபை இம்பேக்ட் ப்ளேயராக பின்னர் அழைத்துக் கொள்ளலாம் எனக் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை உள்ளே வைத்துக்கொண்டது வரை சரிதான். ஆனால் அதுதவிர மற்ற இடங்களில் நிகழ்ச்சி நிரலை தொலைத்த வர்ணனையாளர் போலவே மும்பை காணப்பட்டது.

ஆடியது சொற்ப டி20-களில் என்றாலும் ஓப்பனிங்கில் இறங்கி பவர்பிளேயில் பவுண்டரி லைனுக்கும் பந்துக்குமான பந்தத்தை உறுதிசெய்யும் க்ரீனை இறக்கியிருந்தால் அது ஸ்மார்டான நகர்வாகி, அவரது ஸ்பார்க் அணிக்குத் தேவையான கிக் ஸ்டார்ட்டைக் கொடுத்திருக்கும். மாறாக ஓப்பனராகத் தங்களது ரிதத்தை தேடிக் கொண்டுள்ள ரோஹித்தும் இஷானும் இறங்கியது அணியை இடறவைத்தது.
விளைவு, பவர்பிளேயிலோ அணி 29/3 என தள்ளாடியது.
இஷான், ரோஹித், க்ரீன், சூர்யா என டாப் 4-ல் யாருமே 15 ரன்களைக் கூடத் தாண்டவில்லை. ரன் எடுக்க முடியாதவாறு முந்தைய இருபந்துகளை டாட் பால்களாக்கி சிராஜ் வலைபின்ன இஷானிடம் அது அழுத்தமேற்றியது. ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து அதனைத் தணித்துக் கொள்ளாமல், Scrambled Seam டெலிவரியை பவுண்டரி லைனுக்குத் துரத்த முயன்று வெளியேறினார். க்ரீனை டாப்லீயின் இன்ஸ்விங்கரும் ரோஹித்தை ஆகாஷ் தீப்பின் குட்லெந்த் பாலும் வெளியேற்றின. மோசமான ஃபுட் வொர்க்குக் பலியாக இருவிக்கெட்களை மும்பை இழந்தது.
தனது கடந்த 15 ஐபிஎல் இன்னிங்க்ஸ்களில் 269 ரன்களை வெறும் 115 ஸ்ட்ரைக் ரேட்டோடு ரோஹித் சேர்த்துள்ளார். ஓப்பனர் என்ற இடத்திற்கும் கேப்டன் என்ற பொறுப்பிற்கும் சரியான நியாயம் கற்பிக்கவில்லை.

அடுத்துவந்த சூர்யா சிறப்பாகவே தொடங்கினார் ஆனால் தொடரவில்லை. பிரேஸ்வெல் ஷார்ட்டாக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை ப்ரைம்டைம் சூர்யாவின் பேட் சந்தித்திருந்தால் அவரே உருவாக்கும் ஷாட்டுகளால் ஏதோ ஒரு திக்கில் அது சிக்ஸராகி இருக்கும். இப்போட்டியிலோ அதனை பேக்வர்ட் பாய்ண்டில் இருந்த ஷபாஸிடம் கொடுத்து வெளியேறினார்.
ஆர்சிபியின் பௌலிங்கோ கழுத்தை வளைத்து நெருக்குவதாக மூச்சுவிட முடியாமல் திணறடித்தது. பத்து ஓவர்களில் 55/4 என மும்பையின் பாதி பேட்ஸ்மேன்களுக்கு முடிவுரையும் எழுதினர். ஆனால் எதிர்பாராத திருப்பமாக இளம் வீரர்களின் எழுச்சி அப்புள்ளியில்தான் தொடங்கியது. சுற்றிலும் விக்கெட் விழுந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் திலக் வர்மா மற்றும் நேஹல் வடேரா தங்களது கணக்கை முறையே சிக்ஸரோடும் பவுண்டரியோடுமே தொடங்கியிருந்தனர். இது அழுத்தத்தை அடுத்த பக்கத்திற்கு கடத்துவதில் காட்டிய முனைப்பாகவே இருந்தது. ஆர்சிபியும் அடிபணிந்து விடவில்லை. இரு இடக்கை ஆட்டக்காரர்கள் இருப்பதால் மேக்ஸ்வெல்லைக் கொண்டு கட்டப்படுத்த முனைந்தது. அவரது ஓவரைத்தான் சிறப்பாக கவனித்தனர்.

திலக்கின் இன்னிங்ஸில் ஒவ்வொரு கட்டத்திலும் அவரது ஆட்டத்தின் வெப்பமும், ஸ்ட்ரைக்ரேட்டும் ஏறின. தனது அறிமுகப் போட்டியில் ஆடிய நேஹலும் வேகமெடுத்தார். அவருக்கும் கரண் ஷர்மாவுக்குமிடையான ஓவரில் களத்தில் அனல் பறந்தது. ஷார்ட் லெந்தில் வந்த பந்து லெக் சைடில் சிக்ஸரானது. அடுத்த பந்தை கர்ண் ஃபுல் லெந்தில் வீச இம்முறை லாங் ஆனில் பறந்து 100 மீட்டர்களைத் தாண்டி தரையிறங்கியது. விட்டிருந்தால் ரன்ரேட்டை அங்கிருந்தே அதிகரித்து இன்னமும் கூடுதல் ரன்களை கணக்கில் சேர்த்திருக்கும் இந்த இருவரணி. ஆனால் அடுத்த பந்திலேயே கரணுக்குள் இருந்த லெக் ஸ்பின்னரின் சமயோசிதம் விழித்துக் கொள்ள சற்றே அதிக ஃபளைட்டோடு பந்தை லெக் சைடில் அனுப்பி நேஹலுக்கு வலை வீசினார். மீண்டுமொரு சிக்ஸர் என இறங்கி வந்தவரால் அதனை லாங் ஆனில் இருந்த கோலியிடம் லாண்ட் செய்யவே முடிந்தது. அறிமுகப்போட்டியில் வந்த நேஹலின் கேமியோவும் 31 பந்துகளில் சேர்க்கப்பட்ட இந்த 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் முன்னவர் நால்வர் உருவாக்கிய பள்ளத்தை நிரப்பியது.
இந்தக்கட்டம் வரை ஆர்சிபிக்கு எல்லாமே சரியாகவே சென்றது. மிடில் ஓவர்களில்கூட 73 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். இறுதிஓவர்களின் தொடக்கத்திலேயே அபாயகரமான டிம் டேவிட்டையும் ஹ்ரித்திக் ஷோகீனையும் அனுப்பி விட்டனர். ஆனால் ஆர்சிபியின் நீங்காத சாபமான டெத் ஓவர்கள் பரிதாபம் மறுபடியும் ஹர்சலின் வடிவத்தில் உயிர் பெற்றது. ஃபீல்டிங்கின் போது டாப்லீக்கு காயம் ஏற்பட இறுதி ஓவர்களை ஹர்சல் வீச, புதிதாக இறங்கிய அர்ஷத்கூட நின்று ஆட்டம் காட்டுமளவு ஆர்சிபி திணறியது.
இறுதி மூன்று ஓவர்களில் 48 ரன்களை மும்பை குவித்திருந்தது. பவர்பிளேயில் சிறப்பாக வீசிய சிராஜ்கூட 19-வது ஓவரில் ஐந்து ஓய்டுகளைக் கொடுத்து சொதப்பினார். ஹர்சல் வீசிய 18, 20 இரண்டு ஓவர்களிலுமே கருணையோடு ஃபுல் டாஸுகளும், ஸ்லோ பால்களுமே நிரம்பியிருக்க நையப்புடைத்து 22 ரன்களை அதில் மும்பை எடுத்து விட்டது. 123/7 என்ற இடத்திலிருந்து அணியை 171/7 என்று எடுத்துச்சென்றது திலக் - அர்ஷத் கூட்டணி. உபயம் : ஆர்சிபியின் மோசமான டெத்ஓவர் பௌலிங். இது சவாலான இலக்கில்லை எனினும் மும்பைக்கான ஒரு சின்ன வாய்ப்பை இது உருவாக்கித் தந்தது.
திலக் வர்மாவின் தன்னிகரற்ற ஆட்டம் அதனை சாத்தியமாக்கியது.

172 என்ற இலக்கை நோக்கி முன்னேறிய கோலி - டூ ப்ளஸ்ஸிஸிடம் யாரின் ஓவரை தாக்க வேண்டும் எப்போது அடிக்கத்தொடங்க வேண்டும் என தெளிவான திட்டமிடல் இருந்தது. போட்டி மொத்தத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இம்பேக்ட் ப்ளேயர்கள் இடிவாங்குவது இப்போட்டியிலும் தொடர பெஃஹ்ரென்டார்ஃபை 12.3 எக்கானமியை எட்ட வைத்தனர். அர்ஷத் கானின் இன்ஸ்விங்கர்கள் சற்றே சவால் விடுக்க, ஆர்ச்சர் மற்றும் ப்யூஸ் சாவ்லா மட்டுமே தங்களது எக்கானமியால் ஆறுதல் தந்தார்கள். என்றாலும் இருவராலுமே விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டை தவிர்த்துப் பார்த்தால் பௌலிங்கிலும் க்ரீன் சோபிக்கவில்லை. ஆகமொத்தம் பௌலிங் பெரிதாக எடுபடவில்லை.
ஒருபக்கம் சிஎஸ்கே நாட்களை நினைவு கூரத்தக்கதாக ஃபீல்டிங்கில் ஒளிர்ந்த டூ ப்ளஸ்ஸிஸ் பேட்டிங்கிலும் மிரட்டினார். எவ்விடத்திலும் மும்பையின் கையை ஓங்கவே அனுமதிக்கவில்லை. 29 பந்துகளில் அரைசதம் கடந்த டூ ப்ளஸ்ஸிஸ் இறுதியாக அர்ஷத்தின் ஸ்லோபாலில் ஆட்டமிழக்கையில் 73 ரன்களை 170 ஸ்ட்ரைக்ரேட்டில் குவித்திருந்தார்.
இன்னொரு முனையில் விண்டேஜ் கோலியை பெங்களூர் ரசிகர்களின் உற்சாகம் வெளியே கொணர, தன்னம்பிக்கை நிறைந்த ஷாட்களை அவரிடமிருந்து காண முடிந்தது. தொடக்கத்தில் டூ ப்ளஸ்ஸிஸ் அடிக்க கோலி சற்றே பொறுமை காத்தார், 38 பந்துகளில் அரைசதம் வந்தது. ஆனால் அதன்பிறகு வழக்கம்போல கியரை மாற்றி உச்சவேகத்தில் பாயத் தொடங்கினார். அதற்கடுத்து சந்தித்த 11 பந்துகளில் 32 ரன்களைக் குவித்து லாங் ஆனில் அடித்த சிக்ஸரோடு ஃபினிஷிங் டச் கொடுத்து இலக்கையும் எட்ட வைத்தார். எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி. அதுவும் 16.2 ஓவர்களிலேயே எட்டப்பட்டதுதான் கூடுதல் சிறப்பு.
தொடரை வெற்றியோடு தொடங்குவது ஓர் அணி தங்களுக்குள் கடத்தும் நம்பிக்கை, எதிரணிகளுக்கான அறைகூவல், அடுத்து எடுத்து வைக்க வேண்டிய அடிகளுக்கான ஆற்றல் மூலம். இவை அத்தனையும் நடந்தேற நேர்மறையாக தொடரை ஆர்சிபி தொடங்கியுள்ளது.

மறுபக்கம் மும்பையோ மோசமான ஒரு தோல்வியோடு தொடங்கியுள்ளது. தோல்வியைப் பழக்கமாகவும் வழக்கமாகவும் மாற்றாமல் வெல்லும் வழிகளுக்கு மும்பை திரும்புமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.