Published:Updated:

MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!

PBKS

அர்ஷ்தீப் சிங் மொத்தமாக அவர் எடுத்த நான்கு விக்கெட்டுகளோடு அந்த இறுதி ஓவர் அழுத்தத்தை அவர் கையாண்ட விதமும் பாராட்டுக்குரியது

Published:Updated:

MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!

அர்ஷ்தீப் சிங் மொத்தமாக அவர் எடுத்த நான்கு விக்கெட்டுகளோடு அந்த இறுதி ஓவர் அழுத்தத்தை அவர் கையாண்ட விதமும் பாராட்டுக்குரியது

PBKS
அர்ஷ்தீப்பின் அபார ஆற்றல் வான்கடேயில் வெளிவர மும்பையை வீழ்த்தி பஞ்சாப் தொடரில் தனது நான்காவது வெற்றியை பதிவேற்றியது.
MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!

இத்தொடரில் ஆடிய முதல் இரு போட்டிகளிலுமே வென்றிருந்த பஞ்சாப் அடுத்த நான்கில் ஒன்றை மட்டுமே வென்று நிரம்பவே இடறியிருந்தது. மறுபுறமோ பேக் டு பேக் தோல்விகளோடு தடுமாறியிருப்பினும் அதற்குப்பின் கிட்டிய ஹாட்ரிக் வெற்றிகள் மும்பைக் கப்பலை சரியான வழித்தடத்தில் நிலைநிறுத்தியிருந்தன. பஞ்சாப்பின் பௌலிங்கில் பெரிதாய் பிழையில்லை, பேட்டிங்தான் தவான், பனுகா ராஜபக்ஷ போன்றோர்களில்லா வெற்றிடத்தால் பழுதடைந்திருந்தது. மும்பையோ ஒரு முழுமுதல் அணியாக சமீபத்தில் உருவெடுக்கத் தொடங்கியிருந்ததே வெற்றிக்கான வழிகோலியது.

இரு அணிகளில் யாருடைய மொமெண்டத்தின் சாயல் மாறப்போகிறதென்ற எதிர்பார்ப்பு அதிகமாக சின்ன பவுண்டரிகள், பேட்டிங் பிட்ச், சேஸிங் சுலபம், பனியின் கருணையும் இருக்குமெனக் கருதி, ரோஹித் `ஃபீல்டிங்' என்றார். பஞ்சாப்பின் சமீபத்திய பேட்டிங் தள்ளாட்டமும் இன்னுமொரு காரணம். பஞ்சாப்பை குறைந்த ரன்களில் சுருட்டலாம் என்பது மும்பையின் கணக்காயிருக்க எண்ணியபடியே நடந்தேறுவது டி20-ன் குணாதிசயம் இல்லையே? ரோஹித் நினைத்ததும் நடந்தது நினைத்தே பார்க்காததும் நடந்தது. பவர்பிளேவையும் டெத் ஓவர்களையும் பஞ்சாப் ஆக்ரமிக்க மிடில் ஓவர்களில் மட்டும் ரன்களைக் கட்டுப்படுத்தி மும்பை ஆறுதல் தேடிக் கொண்டது

முதல் ஒன்பது ஓவர்களில் பஞ்சாப்பின் தொடக்கம் ஒரு சீர்மையான பேட்டிங் சமன்பாட்டைக் கொண்டிருந்தது. பவர்பிளேயில் 58 ரன்களை எடுத்திருந்தனர், ரன்ரேட்கூட பவர்பிளேவுக்கு வெளியே 9.6-ல் இருந்து ஒன்பதாவது ஓவர் இறுதியில் 9 என்ற அளவிற்கு மட்டுமே சரிந்திருந்தது. இரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தனர். அதுவும்கூட ரோஹித் பௌலர்களை சுழற்சி முறையில் அழகாகப் பயன்படுத்தியதற்கான சன்மானமே.

முதல் ஓவரை மட்டும் அர்ஜுனை வீசவைத்தவர், பந்து ஸ்விங் ஆவதையும் அதைக் கட்டுப்படுத்த அர்ஜுன் சற்றே திணறி அது இரு வொய்டுகளாக மாறுவதையும் கவனித்து அவரை நிறுத்தி க்ரீனைக் கொண்டுவர அது விக்கெட்டிற்கு வழிவகுத்தது. ஷார்டுக்கு ஷார்டாக வீசப்பட்ட பந்து டைமிங் மிஸ்ஸான புல்ஷாட்டாக மிட்விக்கெட்டில் கேட்சானது.

அதேபோல் அர்ஜுனின் அதிஅற்புதமான யார்க்கர் போன போட்டியில் சிறப்பாக ஆடி இப்போட்டியிலும் ஆபத்தாக உருமாறிக் கொண்டிருந்த பிர்ப்சிம்ரனை 26 ரன்களோடு வெளியேற்றியது. ஆக முதல் 9 ஓவர்களில் இருவிக்கெட் இழப்பிற்கு 81 என நல்ல நிலையிலேயே பஞ்சாப் இருந்தது.

மும்பை பஞ்சாப்பை முடக்கிப் போட்டது அதற்குப் பிந்தைய மிடில் ஓவர்கள்தான். ப்யூஸ் சாவ்லா 10-வது ஓவரில் இரு விக்கெட்டுகளோடு அந்த சரிவைத் தொடங்கி வைத்தார். லிவிங்ஸ்டோன் இறங்கி வருகிறார் என்பது புரிந்து சாமர்த்தியத்தோடு சற்றே அதிவேகமாக பந்தை லெக்சைடில் அனுப்ப, இஷான் தாமதமின்றி அதனைக் கவர்ந்து ஸ்டம்பிங் செய்து லிவிங்ஸ்டோனை வழியனுப்பினார். அதற்கடுத்த இருபந்துகள் இடைவெளியில் ஸ்வீப் செய்ய முயன்று அதர்வா ஆட்டமிழந்தார். இறங்கி வருவதோ, ஸ்வீப் செய்வதோ ஸ்பின்னர்களுக்கு எதிராக செய்ய வேண்டியவைதான், எனினும் கவனமும், டைமிங்கும் இன்னமும் முக்கியம், ஏனெனில் வேகத்தைவிட விவேகம் வீழ்த்தும்.

Arjun Tendulkar
Arjun Tendulkar

ஒரே ஓவரில் விழுந்த இந்த இருவிக்கெட்டுகள் பஞ்சாப்பின் ரன்ரேட்டை அப்படியே படுத்துறங்க வைக்க, இருமுனைகளிலுமே கேஎல் ராகுல் நின்று ஆடுகிறாரோ என்ற எண்ணத்தை சாம் கரணும் ஹர்ப்ரீத் சிங்கும் கொண்டுவந்து விட்டனர். அந்த ஐந்து ஓவர்களில் 35 ரன்களை மட்டுமே பஞ்சாப் தரப்பு எடுத்திருந்தது. குறிப்பாக க்ரீன் வீசிய ஓவரில் எல்லாம் ஒரு ரன்னே வந்திருக்க டெத்ஓவர் பற்றிய பயம் ரசிகர்களைக் கல்வியிருக்கும். அதுவும் லக்னோ முன்னதாக ஆடிய அந்த டெத்ஓவரினைப் பார்த்தவர்களுக்கு இது அதன் பஞ்சாப் டப்பிங் போல இருந்துவிடக் கூடாதென்பது நினைவில் நிழலாடியிருக்கும். உண்மையில் லக்னோ ஆடிய டெத்ஓவருக்கு நேர்மாறான ஒரு நம்பவே முடியாத பேயாட்டத்தை பஞ்சாப் ஆடியது.

MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!
டெத்ஓவரின் முதல் ஓவரை வீசிய அர்ஜுனை அட்டாக் செய்து இக்கூட்டணி தொடங்கியது. இரு சிக்ஸர், நான்கு பவுண்டரிகள் என சற்று நேரத்திற்கு சர்வத்தையும் செயலிழக்கச் செய்து விட்டனர். மெதுவாக ஓடிக்கொண்டிருந்த சிறு ஓடை காட்டாறாக உருவெடுத்து முழுவதுமாக மூழ்கடிப்பது போன்ற உணர்வை மும்பை அனுபவித்திருக்கும்.

அதே உணர்வு இறுதி ஓவர்கள் முழுவதுமே நீடித்தது. க்ரீனை நான்கு சிக்ஸர்களோடு கலங்கடித்தனர் என்றால் ஆர்ச்சருக்கும் அஞ்சவேயில்லை. சாம் கரண் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடியிருந்தார். இவ்வளவுக்கும் இக்கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் விழவைத்து மும்பை அடக்கி ஆள முயற்சித்தது. நீரினுள் அமிழ்த்த நினைத்த பந்து ஸ்ப்ரிங்காக திமிறிக்கொண்டு வெளிவருவது போல் பஞ்சாப்பும் கட்டுக்கடங்காமல் எழுச்சியுற்றது. குறிப்பாக ஜிதேஷ் ஷர்மா 7 பந்துகளில் 25 ரன்களைக் குவித்து மும்பையை மிரளவைக்க 214 ரன்களை எட்டி சேஸிங் எளிதானதாக இருக்கப் போவதில்லை என்பதற்கான அறைகூவல் விடுத்தது. 25 - 30 ரன்கள் அதிகமாகவே மும்பையால் கொடுக்கப்பட்டிருந்தது.

arshdeep singh
arshdeep singh

ஏறக்குறைய பஞ்சாப்பின் பாதையையே முதல் பாதியில் மும்பையும் பின்பற்றியிருந்தது. பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் போது விக்கெட்டை அதிகமாக விடுவது, ரன்ரேட்டின் மேல் கண்வைக்காமல் நகருவது இரண்டுமே பேராபத்தில் முடியும். இதனைப் புரிந்தே தங்களது இன்னிங்க்ஸை மும்பை முதல் பாதியில் கட்டுப்படுத்தியது. பவர்பிளேவையின் முடிவில் இஷானின் விக்கெட்டை மட்டுமே விட்டிருந்தனர், 54 ரன்களை அக்கட்டத்தில் எடுத்திருந்தனர். ரோஹித் "இன்று இல்லாவிடில் என்று, உன்னால் இயலாவிடில் யாரால்?", போன்ற வாசகங்களை எல்லாம் படித்து உரமேற்றிக் கொண்டு வந்திருப்பார் போலும். அர்ஷ்தீப்புக்கு ஸ்கூப் ஷாட்டில் அடித்த சிக்ஸர், சாம் கரணின் ஸ்லோ பாலுக்கோ பவுண்டரிக்கு அப்பால் மோட்சம், ராகுல் சஹாருக்கு எதிராக தனது 250-வது ஐபிஎல் சிக்ஸர் என சேர்த்து வைத்து பழிதீர்த்தது போல வெறித்தனம் காட்டினார். இன்னமும் சிறிதுநேரம் களத்தில் நீடித்திருந்தாலும் பஞ்சாப் ஒருசில ஓவர்கள் எஞ்சியிருக்கையிலேயே தோல்வியை எட்டியிருக்கும். முதல் பாதியில் பத்தாவது ஓவரில் ப்யூஸ் சாவ்லா தந்த திருப்புமுனையை இங்கேயும் லிவிங்ஸ்டோனால் அதே 10-வது ஓவரில் ஏற்பட்டது. லிவிங்ஸ்டோனின் லெக்பிரேக் ரோஹித்தின் விக்கெட்டொடு மும்பையின் கால்களுக்கு விலங்கிட்டது.

பாதிக் கிணறைத் தாண்டிய போது, 88 ரன்களை எட்டியிருந்தது தேவைப்படும் ரன்ரேட் கணக்கினை 12.7-க்கு கூட்டியிருந்தாலும் மும்பைக்கு மிகப்பெரிய நேர்மறையான விஷயங்கள் ஏகப்பட்ட விக்கெட்டுகளையும் பவர் ஹிட்டர்களை பின்வரிசையில் வைத்திருந்தது. அது தந்த தெம்பிலேயே க்ரீனும் சூர்யாவும் மிடில் ஓவர்களிலும் வேகமெடுக்கத் தொடங்கினர். முன்னதாக பஞ்சாப் அங்கேதான் திணறியிருந்தது. ஆனால் மும்பையோ இங்கேயே ரன்ரேட்டை முடுக்கத் தொடங்கிவிட்டது. டெத்ஓவருக்கு முந்தைய ஐந்து ஓவர்களில் 61 ரன்களை வாரிக்குவித்து விட்டது க்ரீன் - சூர்யா கூட்டணி. ஒன்டவுனில் இறங்கி 67 ரன்களைக் குவித்த க்ரீன் ஆட்டத்தை எப்படி வேகமெடுக்க வைக்க வேண்டுமென்பதற்கான செயல்முறை விளக்கம் தந்திருந்தார். ரோஹித் ஆட்டமிழக்கும் போது 138 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக்ரேட் இறுதியில் 156ஆக இருந்தது. எல்லீஸின் ஸ்லோ பால் அவரை வெளியேற்றியது.

MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!
சூர்யாவின் அக்னிச் சிறகுகள் இக்கட்டான பல தருணங்களிலே வெளிப்பட்டிருக்கிறது. இப்போட்டியிலும் அது காட்சிப்படுத்தப்பட்டு பஞ்சாப்பைத் தாக்கியது. 23 பந்துகளில் வந்த அவரது அதிவேக ஐபிஎல் அரைசதம் இன்னமும் சூர்யாவின் அனல் குறைந்து விடவில்லை, உள்ளூர வெப்பமாகவே கனன்று கொண்டிருக்கிறது என மீண்டுமொரு முறை காட்டியது.

ஆனால் சூர்யாவின் விக்கெட் வீழ்த்தப்பட்ட இடத்தில்தான் மும்பையின் பிரேக்கை பஞ்சாப் அழுத்திக் கட்டுப்படுத்தியது. அதே ரிதத்தோடு சூர்யாவே தொடர்ந்திருந்தால் அணி இலக்கை எட்டியிருக்கும் ஆனால் அர்ஷ்தீப்பின் லோ ஃபுல் டாஸ் சூர்யாவை வீழ்த்தி தாளம் தப்ப வைத்து அபஸ்வரமாக்கி இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவை என்று வந்து நிறுத்தியது.

போன சீசன் முழுவதுமே டெத்ஓவர்களில் அர்ஷ்தீப்பின் பந்துவீச்சு அபாரமான அபாயகரமானதாக இருந்தது, இந்திய அணியில் அவருக்கான இடத்தையும் அதுவே உறுதிப்படுத்தி இருந்தது. இருப்பினும் அதன்பிறகு அந்த பழைய அர்ஷ்தீப் சற்றே தொலைந்து போயிருந்தார். இந்தத் தொடரில் ஏற்கனவே அந்த அர்ஷ்தீப் ஆங்காங்கே தென்படத் தொடங்கியிருக்க இப்போட்டியிலோ அவர் முழுவதுமாக பழையபடி வெளிப்பட்டிருந்தார். அர்ஷ்தீப் சிங் மொத்தமாக அவர் எடுத்த நான்கு விக்கெட்டுகளோடு அந்த இறுதி ஓவர் அழுத்தத்தை அவர் கையாண்ட விதமும் பாராட்டுக்குரியதே.

16 ரன்கள் 6 பந்துகள் என்ற சமன்பாடு டிம் டேவிட் - திலக் களத்தில் நின்றதால் மும்பைக்கு சாதகமாகவே தென்பட்டது. இருப்பினும் இறுதி ஓவர்களில் தனது முழு பலத்தோடு இருக்கும் அர்ஷ்தீப் எப்போதும் எதிரியின் அரண் முதல் அவர்களது கேடயம் வரை தகர்த்தெறியும் அசுரசக்தி என்பது மறுபடியும் நிரூபணமாகி உள்ளது.

MIvPBKS:`அடிதடி ஆட்டம் எங்களுக்கும் ஆடத் தெரியும்' - கலக்கிய பஞ்சாப்; சொந்த மண்ணில் வீழ்ந்த மும்பை!
அர்ஷ்தீப்பின் அடுத்தடுத்த இரு விக்கெட்டுகளால் மும்பைக்கு மரண அடி கொடுத்தார். அந்த இரு விக்கெட்டுகளுமே ஸ்டம்ப்பைக் காவு வாங்கி அதிஅற்புதமாக அரங்கேறியது.

செட்டில் ஆகியிருந்த பேட்ஸ்மேனான டிம் டேவிட்டுக்கும் இந்த விக்கெட்டுகளால் அந்த ஓவரில் ஒரு பந்து மட்டுமே சந்திக்கக் கிடைத்தது. இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வியைத் தழுவியது. அர்ஷ்தீப்பின் நான்கு விக்கெட்டுகள் வெற்றிக்குப் பிரதானமாகின.

இந்த சீசன் முழுவதுமே பவர்பிளே பிழைகள் பற்றியும், மெதுவாக ஸ்கோரிங் பற்றியும் பெரிதாகப் பேசப்பட்டு வந்த நிலையில் இரு அடுத்தடுத்த போட்டிகளில் டெத் ஓவர்கள் சில பாடங்களைக் கற்பித்துள்ளன. லக்னோவின் டெத் ஓவர் பேட்டிங் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

பஞ்சாப்போ பேட் மற்றும் பாலினால் இரு பாதிகளிலும் எழுதிய பிழையற்ற டெத்ஓவர் கதைகளினால் மும்பையை அடிபணிய வைத்துள்ளது.