Published:Updated:

MI v GT: வாள் வீசி சதம் கண்ட சூர்யா; ரிப்பீட் மோடில் சிக்ஸர்கள் விளாசி இதயங்களை வென்ற ரஷித் கான்!

MI v GT ( Rajanish Kakade )

பௌலர் பந்தைப் போட ரஷித் சிக்ஸ் அடிக்க, கூட்டம் பந்தைப் பிடித்து தூக்கியெறிய திரும்ப பௌலர் போட, ரஷித் அடிக்க என ரிப்பீட்டுதான். 'இவர் மட்டும் வேற பிட்ச்ல ஆடுறாரா என்ன' என ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள்.

Published:Updated:

MI v GT: வாள் வீசி சதம் கண்ட சூர்யா; ரிப்பீட் மோடில் சிக்ஸர்கள் விளாசி இதயங்களை வென்ற ரஷித் கான்!

பௌலர் பந்தைப் போட ரஷித் சிக்ஸ் அடிக்க, கூட்டம் பந்தைப் பிடித்து தூக்கியெறிய திரும்ப பௌலர் போட, ரஷித் அடிக்க என ரிப்பீட்டுதான். 'இவர் மட்டும் வேற பிட்ச்ல ஆடுறாரா என்ன' என ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள்.

MI v GT ( Rajanish Kakade )
`ஒன் டைம் வொண்டர்களாக' இருப்பார்களோ என சந்தேகிக்கப்பட்ட குஜராத் இந்த முறையும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஜம்மென அமர்ந்திருக்கிறது. இன்னொருபக்கம் முதல் சில மேட்ச்கள் வரிசையாய் தோற்று அதன்பின் படபடவென அடித்துப் பிரித்து வென்று ப்ளேஆப் செல்லும் வழக்கம்கொண்ட மும்பை இந்த முறையும் அதே முனைப்பில் இருக்கிறது. லீக் போட்டிகள் முடிய ஒரு வாரமே இருக்கும்நிலையில் இன்னும் ஒரு அணிக்குக் கூட இடம் நிரந்தரமாகாதது விளையாடும் அத்தனை வீரர்களின் தலையிலும் பிரஷரை ஏற்றியிருக்கிறது. வரும் ஒவ்வொரு ஆட்டமுமே முக்கியம் என்கிற நிலையில்தான் மோதிக் கொண்டார்கள் ரோஹித் சர்மாவும் அவர் வளர்ப்பில் உருவான ஹர்திக் பாண்டியாவும்.

டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பாண்டியா பௌலிங்கைத் தேர்வு செய்தார். மும்பை வான்கடேயில் இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகமிருக்கும் என்பதால் இந்த முடிவு. அந்த அணியில் எந்த மாற்றமுமில்லை. மும்பை அணியில் கேரளாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விஷ்ணு வினோத் உள்ளே வந்திருந்தார். அவரின் முதல் ஐ.பி.எல் போட்டி இது.

MI v GT
MI v GT
Rajanish Kakade

முதல் ஓவர் எந்தவித ஆச்சர்யமுமின்றி ஷமி. அந்த ஓவரில் வெறும் ஆறே ரன்கள். இரண்டாவது ஓவர் இந்த சீசனில் குஜராத் மீட்டெடுத்திருக்கும் ஸ்லோபால் மாஸ்டர் மோகித் ஷர்மா. இரண்டாவது பந்தையே சிக்ஸருக்குத் தூக்கி மோகித்துக்கு வெல்கம் சொன்னார் கிஷன். கடந்த சில ஆட்டங்களாக நம்பிக்கை குறைந்து வலம்வரும் ரோஹித்திற்கும் தன் டைமிங்கைக் கண்டடைய மோகித்தின் பந்தில் ஒரு சிக்ஸர் தேவையாய் இருந்தது. அதே ஜோஷில் அடுத்த ஓவரிலும் ஆளுக்கொரு சிக்ஸ் அடித்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். மோகித்தின் அடுத்த ஓவரில் 7 ரன்களே. ஆனால் மொத்தமாய் நான்கு ஓவர்களில் 44 ரன்கள் எடுத்திருந்தது மும்பை.

ரன்கள் எல்லாப்பக்கமும் வாரி வழங்கப்படுவதைப் பார்த்து தன் ஆஸ்தான பௌலரிடம் சரணடந்தார் பாண்ட்யா. கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றினார் ரஷித். ஏழே ரன்கள். நூர் வீசிய அடுத்த ஓவரில் கிஷன் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 61/0. அடுத்து ரஷித் வீசிய முதல் பந்திலேயே லேசாய் தொட்டுவிட்டு திவேதியாவிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோஹித். ஐந்து மேட்ச்களுக்குப் பிறகு இரட்டை இலக்க ஸ்கோர். 29 ரன்கள் 18 பந்துகளில். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கிஷனும் காலி. சட்டென ஆட்டம் குஜராத் பக்கம் திரும்பியது.

MI v GT
MI v GT
Rajanish Kakade

நூரின் பந்துகளைச் சிதறடித்து குட்டி கேமியோ ஆடிய நேஹல் வதேராவையும் ரஷித் மீண்டும் வந்தே பெவிலியன் அனுப்பவேண்டியதாய் இருந்தது. ஸ்கோர் 9 ஓவர்கள் முடிவில் 88/3. விக்கெட்கள் போனபடி இருந்தாலும் ரன்ரேட் குறையவே இல்லை. இப்போது களத்தில் மும்பையைக் கடந்த சில சீசன்களாக காப்பாற்றும் சூர்யகுமாரும் அடுத்த சில சீசன்களில் இவரும் அப்படி ஆகிவிடுவார் எனக் கணிக்கப்படும் விஷ்ணு வினோத்தும். இருவரும் செட்டிலாக நேரமெடுத்துக்கொண்டார்கள். அடுத்த இரண்டு ஓவர்களில் 13 ரன்கள்தான். 'இவ்ளோ ஸ்லோவா இருந்தா எப்படி?' என அல்ஸாரியே வந்து அலேக்காய் போட்டுக்கொடுக்க ஆளுக்கொரு சிக்ஸ் அடித்து ஆட்டத்திற்குள் வந்தார்கள் இருவரும்.

இத்தனை ஆண்டுகால ஐ.பி.எல்லைத் திரும்பிப் பார்க்கையில் ஒரு சில ஷாட்கள் அப்படியே நம் முன் வந்துபோகும். மனக்கண்ணில் அப்படியே உறைந்துபோன தருணங்கள் அவை. அப்படியொரு ஷாட்டை அடுத்த ஓவரில் ஆடினார் விஷ்ணு வினோத். ஷமி வீசிய லென்த் பாலை அப்படியே ஒரு வீச்சு வீசி கவர் பவுண்டரி பக்கம் அவர் அடித்த சிக்ஸர் முழுக்க முழுக்கக் காய்த்துப்போன கரங்களின் உறுதியிலிருந்து வந்ததே. இருவரும் ரன்ரேட்டைப் பத்துக்குக் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படி அவர்களே டயர்டானாலும் அல்ஸாரி ஜோசப் அழகாய் போட்டுக்கொடுத்து அவர்களை மோட்டிவேட் செய்தார். விளைவு ஸ்கோர் 15 ஓவர்களில் 151/3.

MI v GT
MI v GT
Rajanish Kakade
சொடக்கு பாலையே ஸ்லோவாய் போடும் வித்தைக்காரரான மோகித் ஷர்மாவின் கைங்கரியத்தில் அபினவ் மனோகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் விஷ்ணு. 20 பந்துகளில் 30 ரன்கள். இது போதுமே மும்பை மிடில் ஆர்டருக்கு. தன் கடைசி ஓவரை போட வந்தார் ரஷித். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் சூர்யா. 32 பந்துகளில்! ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் ரஷித் போட்டதை அவருக்கே திருப்பிக்கொடுத்து நடையைக் கட்டினார் டிம் டேவிட். நான்காவது விக்கெட் ரஷித்துக்கு.
MI v GT
MI v GT
Rajanish Kakade

முதல் பாதி முழுக்க அடக்கிவாசித்துவிட்டு இரண்டாவது பாதியில் எதிரிகளை வெளுப்பாரே ரஜினி, அந்தப் படங்களை வான்கடேயில் ஓட்டிக்காட்டினார் சூர்யா. 18வது ஓவரிலிருந்து அவர் ஆடத்தொடங்கியது ருத்ரதாண்டவம். அந்த ஓவரில் மட்டும் மூன்று பவுன்டரிகள், ஆஃப் சைடில் ஒரு சிக்ஸ் உள்பட 20 ரன்கள். 19வது ஓவரின் இரண்டாவது பந்து. ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி குத்தி எகிறிய பந்தை விலகி நின்று பேட்டை கீழிருந்து இழுத்து ஷார்ட் தேர்ட்மேன் பக்கம் திருப்ப அது சிக்ஸ் தொட்டது. அப்பர்கட்டுக்கும் கவர் ட்ரைவிற்கும் பிறந்த குழந்தையான அந்த புதுவகை ஷாட்டை கேலரியில் இருந்து சச்சினே ஆச்சர்யமாய் காற்றில் அடித்துப்பார்த்துக்கொண்டிருந்தார். அந்த ஓவரில் 17 ரன்கள்.

ஜோசப் வீசிய கடைசி ஓவரில் அடுத்தடுத்து சூர்யா இரண்டு சிக்ஸ்கள் அடிக்க வந்தது சதம். அவரின் முதலாவது ஐ.பி.எல் சதம் இது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் 2014-க்குப் பிறகு அடிக்கப்படும் சதம் இது. முதல் ஐம்பது ரன்களை 32 பந்துகளில் கடந்தவர் அடுத்த ஐம்பது ரன்களுக்கு எடுத்துக்கொண்டது 17 பந்துகள்தான். இந்த சூறைக்காற்றில் சிக்கி ஸ்கோர்போர்ட் 218க்குப் பறந்தது. இந்த சீசனின் 31வது 200+ ஸ்கோர்.
MI v GT
MI v GT
Rajanish Kakade

இமாலய இலக்காய் இருந்தாலும் பேட்டிங் ஆர்டர் மீதும் பனி மீதும் பாரத்தைப் போட்டு இறங்கியது குஜராத். போக, இந்த சீசனில் 200+ ரன்களை மும்பை, பஞ்சாப், ஹைதராபாத் போன்ற அணிகள் சேஸ் செய்து வெற்றியும் பெற்றிருக்கின்றன. பெஹ்ரன்டாஃப்பின் முதல் ஓவரில் நான்கே ரன்கள். இம்பேக்ட் பிளேயராய் உள்ளே வந்த ஆகாஷ் மத்வால்தான் இரண்டாவது ஓவர். அவர் வீசிய லென்த் பாலை லெக் சைடில் திருப்ப முயன்று சாஹா தோற்க பேடில் பட்டது. அப்பீல் போனார் ஆகாஷ். பொங்கலுக்கு போட்ட வாழ்த்து அட்டைக்கு தீபாவளியின்போது பதில் எழுதுவதைப் போல அம்பயர் ரொம்ப நேரம் யோசித்து அவுட் கொடுத்தார். சாஹா ரிவ்யூ கேட்டும் பலனில்லை. அடுத்த ஓவரே ஸ்லாட்டில் வந்த பந்தை நேராய் தூக்க ஆசைப்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் பாண்டியா.

மத்வால் வீசிய அடுத்த ஓவரில் அதே போல வந்த லென்த் பாலை அதே போல லெக் சைடில் திருப்ப முயன்று ஸ்டம்ப்பைப் பறிகொடுத்தார் கில். நான்கு ஓவர்கள் முடிவில் 26/3 என்கிற பரிதாபமான நிலைக்கு வந்தது குஜராத். அடுத்த ஓவரில் விஜய் ஷங்கர் ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க ஸ்கோர் கொஞ்சம் ஏறியது. ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தார் பியூஷ் சாவ்லா. மிதந்து வந்து சூப்பராய் குத்தி திரும்பிய கூக்ளியை விஜய் ஷங்கர் கணிக்கத் தவற ஸ்டம்ப்பைப் பதம்பார்த்தது பந்து. அதற்கடுத்த ஓவரில் மனோகரும் தன் பங்கிற்கு ஸ்டம்ப்பை விட்டுகொடுக்க, குஜராத் நிலை இன்னும் மோசமானது. 8 ஓவர்கள் முடிவில் 59/5. 9வது ஓவரில் மில்லர் கொஞ்சம் அதிரடி காட்ட கொஞ்சம் கவலை மறந்தது குஜராத் ரசிகர்களுக்கு. அதுவும் இரண்டு ஓவர்களுக்கே.

MI v GT
MI v GT
Rajanish Kakade

மத்வால் வீசிய 12வது ஓவரின் கடைசி பந்தில் மில்லரும் லெக் சைடில் அடிக்க முயன்று எல்.பி.டபிள்யூ ஆனார். அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பொறுப்பில்லாமல் ஷாட் ஆடி திவேதியாவும் அவுட். ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 103/7. எப்படிப் பார்த்தாலும் ஜெயிக்க வாய்ப்பில்லை. ரன் வித்தியாசத்தை குறைக்க குஜராத்தும் ரன்ரேட்டை அதிகப்படுத்த மும்பையும் ஆடிய ஆட்டம்தான் அடுத்த ஏழு ஓவர்கள். இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற நிலையில் நமக்குள் ஒரு ஆவேசம் பிறக்குமே, அப்படியான மோடில்தான் இருந்தார் ரஷித். 'மிஞ்சிப்போனா ஒரு விக்கெட் போகும். அதனாலென்ன' என அவர் டேர்டெவில் ஆட்டத்தை வெளிப்படுத்த குவிந்தன சிக்ஸர்கள். பெஹ்ரன்டாஃப், ஜோர்டன், க்ரீன் என யாரையும் விட்டுவைக்கவில்லை.

பௌலர் பந்தைப் போட ரஷித் சிக்ஸ் அடிக்க, கூட்டம் பந்தைப் பிடித்து தூக்கியெறிய திரும்ப பௌலர் போட, ரஷித் அடிக்க என ரிப்பீட்டுதான். 'இவர் மட்டும் வேற பிட்ச்ல ஆடுறாரா என்ன' என ரசிகர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். 17வது ஓவரில் 15 ரன்கள். 18வது ஓவரில் 13 ரன்கள் என சகட்டுமேனிக்கு விளாசி 21 பந்துகளில் அரைசதமும் அடித்தார். 19வது ஓவரில் வெறும் ஏழு ரன்கள்தான். அதற்கும் சேர்த்து கடைசி ஓவரில் மூன்று சிக்ஸ்கள். ஸ்கோர் 191/8 என வந்து நின்றது. ரஷித் 32 பந்துகளில் 79 ரன்கள். டி20யில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் இது.
MI v GT
MI v GT
Rajanish Kakade

வெற்றிதான் என்றாலுமே கையிலிருந்த மேட்ச்சை நழுவவிட்ட மும்பைக்கு ரன்ரேட் பெரிதாய் ஒன்றும் ஏறிவிடவில்லை. இதனாலேயே சூர்யா, ரோஹித் என அனைவரும் அப்செட்டாய் இருந்தார்கள் களத்தில். மறுபக்கம் வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும் நட்சத்திர மீனைப் போல எத்தனை விக்கெட்கள் விழுந்தாலும் முடிந்தவரை தோல்வியைத் தள்ளிப்போட முயல்கிறது குஜராத். இந்த வெற்றி மூலம் மூன்றாவது இடம் நோக்கி நகர்ந்திருக்கிறது மும்பை. நான்கு விக்கெட்களும் வீழ்த்தி அரைசதமும் அடித்த ரஷித் ஆட்டநாயகனா சூர்யா ஆட்டநாயகனா என்கிற கேள்விக்கு சூர்யா என பதில் எழுதியது ஐ.பி.எல் நிர்வாகம்.

குஜராத், லக்னோ, மும்பை, பெங்களூரு என அடுத்தடுத்து அமர்ந்திருக்கும் அத்தனை அணிகளின் கண்களும் இப்போது ஹைதராபாத் முகாமின்மீது. ஏனெனில் அந்த அணிக்கு மேற்சொன்ன நான்கு தலைக்கட்டுகளோடும் மேட்ச் இருக்கிறது. ஒருவேளை நான்கிலும் வென்றால் ஹைதராபாத்தே ப்ளே ஆப்பிற்குள் வரலாம். எதுவாகினும் அடுத்தவாரம் இந்நேரம் முடிவு தெரிந்திருக்கும்.