இந்த வருட ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்கவிருக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்க உள்ளது. இதனிடையே தோனி தனது கடைசிப் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையில் அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டி இந்தத் தொடராகக் கூட இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் ஓப்பனருமான மேத்யூ ஹைடன் தெரிவித்திருக்கிறார்.
ஒரு தனியார் டிவி சேனலுக்குப் பேட்டியளித்த மேத்யூ ஹைடன், “சென்னை சூப்பர் கிங்ஸ், ஒவ்வொரு செயல்களையும் சிறப்பாகவும், தனித்தன்மையுடனும் தான் செய்து வருகிறது. அவர்களுக்கென்று தனி வழி உள்ளது. தோனி ஒவ்வொரு முறையும் புத்துணர்ச்சி கொடுத்து அணியை வழிநடத்திப் பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பழைய வீரர்கள் ரீட்டெய்ன் செய்யப்பட்டாலும், முழுமையாகவே ஒரு புதிய அணியாக இது உருவெடுத்து வருகிறது.
தோனியைப் பொறுத்தவரை, இந்த வருட ஐபிஎல் தொடர் பிற வருடங்களைவிடச் சிறப்பாகக் கொண்டாடப்படும். நிச்சயமாக அவரின் கடைசி தொடரை அவரின் பாணியிலேயே சிறப்பாக முடிப்பார். ரசிகர்களும் அதையே விரும்புவார்கள்.

2023, கொரோனாவுக்குப் பிறகு இந்த வருடம்தான் ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் விளையாடப்பட இருக்கின்றன. 'யெல்லோ ஆர்மி' சேப்பாக்கம் மைதானத்தை முழுவதுமாக நிரப்பப்போகிறது. எப்போதும் போல ஹோம் கிரவுண்ட்டில் வீழ்த்த முடியாத அணியாக சென்னை இருக்கும். இந்த இடம்தான் அவர்களின் கோட்டை. அது மட்டுமின்றி, அவர்களின் கேப்டனாக தோனியே இருக்கப்போகிறார். அதுவும் கடைசி முறையாக என்றே நினைக்கிறேன். அதனால் இது நிச்சயம் யாராலும் மறக்கமுடியாத ஒரு தொடராக இருக்கும். சேப்பாக்கில் தன் ரசிகர்கள் மத்தியில் விடைபெறவேண்டும் என்றுதான் தோனி ஐபிஎல்-லில் இருந்து விலகாமலே இருந்தார். அதற்காகவே நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் வரப்போகிறது" என்றார் உணர்ச்சி பொங்க!